Saturday, July 4, 2009

கருணாநிதி காங்கிரஷ்-க்கு மட்டுமல்ல, சிங்களவனுக்கும் நல்லாவே ஜால்ரா அடிக்கிறார்

இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம்'' என்று, அண்மையில் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.

`ஒபாமா அமெரிக்க அதிபரானதைப் போல வருங்காலத்தில் ஓர் இலங்கைத் தமிழர்கூட இலங்கையின் பிரதமராகும் காலம் வரலாம். நாம் சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி, அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது' என்பதெல்லாம் அவரது பேச்சில் தெறித்த இதர சிதறல்கள்.

`இனி தமிழ்ஈழம் எல்லாம் வேண்டாம்' என்ற ரீதியில் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சு தமிழ் மக்களின் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கும் நிலையில், இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரனை நாம் சந்தித்து கருத்துக் கேட்டோம்.

``சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இலங்கையில் கூட்டாட்சி ஏற்பட்டு தமிழ்மக்களுக்கு சமஉரிமை கிடைக்குமா என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை அது கூட்டாட்சி நாடு அல்ல. அங்கு மாநில அரசு, மத்திய அரசு எல்லாம் கிடையாது. 1948-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகத்தான் இருந்து வருகிறது. அங்குள்ள தமிழ் மக்களும், இடதுசாரி இயக்கங்களும் அந்த நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்ற எத்தனையோ முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால், அறுபது ஆண்டு காலமாகியும் அதற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகவே நீடித்து வருகிறது.

அங்கே கூட்டாட்சி இல்லை, சமஉரிமையும் இல்லை என்ற நிலையில்தான் தனிநாடு கோரிக்கை எழுந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட ஒரு காலத்தில் தனிஈழக் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர்தான். அதை நாம் மறந்து விடமுடியாது.

ஒற்றையாட்சி முறை காரணமாக இலங்கை ராணுவ சர்வாதிகாரத்துடன் செயல்படும் ஓர் அரசாக மாறிவிட்டது. சில தினங்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், அந்த நாடாளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு சில தனிப்பட்ட ராணுவ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டிற்குத்தான் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த அறுபதாண்டு காலமாக அங்குள்ள தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்திலும் அப்படியொரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில்வைத்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் ஓர் அரசியல் அதிகாரத்தை வாக்கெடுப்பின்மூலம் முடிவு செய்து கொள்ளும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள ராணுவம் முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட ராணுவம். காவல்துறையிலும் அதே கதைதான். அரசு பதவி, அதிகாரம் போன்றவற்றில் தமிழர்கள் தொடர்ந்து ஒதுக்கிவைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்மக்கள் எப்படி சமஉரிமை பெற முடியும்?

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி சமஉரிமையைப் பெற்றுத் தரலாம் என்றால், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் எண்பது சதவிகிதம் பேர் சிங்களவப் பிரதிநிதிகள். வெறும் இருபது சதவிகிதத்திற்கும் குறைவான பேர்தான் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்கூட அங்கே தமிழ்மக்களுக்கு நன்மை தரக்கூடிய கூட்டாட்சி நாடாளுமன்றம் அமைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில், ஒபாமா அமெரிக்க அதிபரானதைப் போல எந்த இலங்கைத் தமிழர் இலங்கையின் தலைவராக முடியும்? அதற்கான வாய்ப்பே இல்லை.

இலங்கை ஒரே நாடாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், சிங்கள மக்களைப் போல மிகத் தொன்மையான பாரம்பரியம் கொண்ட தமிழ் மக்களுக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்.

`இலங்கை ஒரேநாடு என்பதற்கு அடையாளமாக ஒரே குடியரசுத்-தலைவரை நியமித்து, இலங்கையின் இருபெரும் இனங்களான தமிழ், சிங்கள மக்களுக்காகத் தனித்தனியாக இரு பிரதமர்களைத் தேர்வு செய்யலாம். இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்' என உலக அளவில் பல வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, `தமிழ்ஈழம் வேண்டாம்' என்று சொல்லும் தமிழக முதல்வர், வல்லுனர்களின் இந்தக் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

கலைஞர் அவரது சட்டமன்ற உரையில், `சிங்களவர்களின் கோபத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அறுபது ஆண்டுகால இலங்கை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் யார் யாரைக் கோபப்படுத்தியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமாக தேசியக் கொடியில் அசோக சக்கரத்தை வைத்துள்ளது. ஆனால், அன்பைப் போதிக்கும் அகிம்சை நாடாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இலங்கை அரசின் தேசியக் கொடியில் ஒரு சிங்கம் வாள் ஏந்தியுள்ளது. இதிலிருந்தே சிங்களவர்கள் தமிழ்இனத்திற்கு எதிரானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் போன்றவர்களைச் சுட்டுக்கொன்றவர்கள்தானே சிங்கள ராணுவத்தினர்?

ஆகவே, யார் யாரைக் கோபப்படுத்துகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று முடித்தார் மகேந்திரன்.

நன்றி குமுதம்

2 Comments:

மைக் மாமா said...

டேய் எழுவு பாட்டு முடிந்தால் இலங்கைக்கு போய் போராடு இப்படி குப்பைகளை கொட்டு தமிழ் இணைய உலகை சீரழிக்காதே

Anonymous said...

இந்த சிங்கள மைக் மாமாவிற்கு வெட்டக்கூடியதை எல்லாம் வெட்டி மொட்டையடித்து கடலில் தூக்கிப் போடவேண்டும்...