Thursday, October 15, 2009

ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.

ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.

இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.


1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்....................................நன்றி ஈழத்தில் இருந்து ஈழவேந்தன்

3 Comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

தமிழ் நாட்டில் பல இடங்களில் 4 நாட்களில் ஈழத் தமிழர்களை விடுவித்த கலைஞர் என்ற பொருளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதாவது தடுப்புமுகாமில் உள்ள மக்களை கலைஞர் விடுதலை செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க முயல்கிறது. தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவுகளை அடக்கும் நோக்கில் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இலங்கைத் தடுப்பு முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 150 நாட்கள் ஆகின்றது, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கும் இவ்வேளையில், தமிழ் நாட்டில் தி.மு.க வினரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனையே வேறு ஒரு வடிவமாக தமிழ் நாட்டில் போராடக் கூடாது, அப்படிப் போராடினா

Anonymous said...

தமிழ் நாட்டில் பல இடங்களில் 4 நாட்களில் ஈழத் தமிழர்களை விடுவித்த கலைஞர் என்ற பொருளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதாவது தடுப்புமுகாமில் உள்ள மக்களை கலைஞர் விடுதலை செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க முயல்கிறது. தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவுகளை அடக்கும் நோக்கில் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இலங்கைத் தடுப்பு முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 150 நாட்கள் ஆகின்றது, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கும் இவ்வேளையில், தமிழ் நாட்டில் தி.மு.க வினரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனையே வேறு ஒரு வடிவமாக தமிழ் நாட்டில் போராடக் கூடாது, அப்படிப் போராடினா