Thursday, October 15, 2009

தி.க விலும் வாரிசு அரசியல் ..!!! - ஜூனியர் விகடன்

''எனக்குப் பின்னால் என்னுடைய புத்தகங்களும், தத்துவங்களுமே எனக்கு வாரிசு!'' - வாரிசு அரசியலை அறவே வெறுத்த தந்தை பெரியார், திராவிடர் கழகத்தை தொடங்கிய பிறகு உதிர்த்த வார்த்தைகள் இவை! ஆனால், இப்போது தி.க-விலும் வாரிசு வழிமுறை தொடங்கி விட்டது! திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி தஞ்சாவூரில் நடந்தது. அப்போதுதான், தி.க. தலைவர் கி.வீரமணியின் மகன் அன்புராஜ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கறுப்பு சட்டைக்காரர்கள் மத்தியில் நிறைய பரபரப்பு!

தி.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''தன் ஆண் குழந்தை அஞ்சு வயசுல இறந்தப்ப பெரியார், 'நல்ல வேளையா என் குழந்தை செத்துப் போச்சு. இல்லேன்னா வாரிசுங்கற பேர்ல எதிர்காலத்துல என் பொதுப்பணிகளுக்கு இடையூறு வந்துருக்கும்'னு அந்த சோகத்துக்கு மத்தியிலும் கம்பீரமாகச் சொன்னார். அப்படிப்பட்ட பாரம்பரியம் உள்ளது தி.க..!

தற்போது கி.வீரமணி, தன் மகனை வாரிசாக நுழைத்திருக் கிறார். எப்பவுமே தேர்தல் சமயங்களில் யாரை ஆதரிப்பது என்பது பற்றிய விஷயங்கள் பேசுவதற்காக மட்டுமே பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த முறை அப்படி எந்த ஒரு தேவையும் இல்லாத நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதி சென்னையில்

உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டினார் வீரமணி. பிறகு கடந்த 10-ம் தேதி திடீரென பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். நாங்களும் ஒரு விதக் குழப்பத்துடனே கூட்டத்துக்குப் போனோம். கூட்டத்தைத் தொடங்கி வைத்து எடுத்த எடுப்பிலேயே வீரமணி, 'எனது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. இனிமேல் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வதை தவிர்க்கப் போகிறேன். முன்பு மாதிரி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்'னு பேசிட்டு உட்கார்ந்தார்.

அப்புறம், ஒரத்தநாடு குணசேகரன், 'ஐயா எதுக்கும் கவலைப்படக்கூடாது. நாங்க எல்லாரும் இருக்கோம். எல்லாத்துக்கும் மேல அன்புராஜ் இருக்கறப்ப எதுக்கு கவலைப்படறீங்க?'னு கண்ணீர் விட்டு அழுதாரு. எங்களுக்கு அப்பத்தான் விஷயமே புரிய ஆரம்பிச்சது. அடுத்த கைத்தடி களான நெய்வேலி ஜெயராமன், மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் ரெண்டு பேருமே, 'தலைவர் உடல்நிலைதான் முக்கியம், இனி மேல் நீங்க முழுசா ஓய்வெடுக்கணும். கட்சிப் பொறுப்புகளை அன்புராஜ் மாதிரியான இளைஞர்களுக்குக் கொடுக்கணும்'னு ஜால்ரா போட்டாங்க.

கடைசியில், 10 தீர்மானங்களை நிறைவேத்திட்டு, நிறைவாகப் பேசிய வீரமணி, 'இதுவரைக்கும் மேடையில் பேசிய தோழர்கள் எல்லாம் அன்புராஜை பொறுப்புக்குக் கொண்டு வரணும்னு கேட்டீங்க. எனக்கும் அதில் உடன்பாடுதான். இதுவரைக்கும் அன்புராஜ் கழகத்துக்காக நிறைய உழைச்சிருக்காரு. நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா, வாகைசூட வாரீர், விடுதலை பவழ விழா என முக்கியமான மூன்று நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கார். அவர் மிகப்பெரிய தொழில் அதிபர். நிறைய விருதுகளை வாங்கியிருக்கார். அவரோட சேவை கழகத்துக்கு தேவை என்பதால், அவரை கழகத்தின் தலைமை நிலைய செயலாளரா அறிவிக்கறேன்'னு சொன்னாரு.

அதோடு, 'இந்த அறிவிப்புக்கு எதிராக என்ன விமர்சனங்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த வீரமணி தயாராக இருக்கிறான்'னு சொல்லி அமர்ந்துட்டார். உடனே மாநில துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் எழுந்து 'எல்லாரும் இந்த அறிவிப்பை வரவேற்று எந்திரிச்சு நின்னு கைதட்டணும்'னு மைக்ல சொன்னார். ஆனால், அரங்கத்திலிருந்த ஒருசிலர் தவிர யாருமே எந்திரிக்கவுமில்லை, கைதட்டவுமில்லை! எல்லோருக்கும் இந்த முடிவு ஷாக்தான். அதைப் புரிஞ்சுகிட்டு உடனே கூட்டத்தை முடிச்சுட்டாங்க. வீரமணியும் அவசரமா வெளியே போயிட்டாரு.

தி.மு.க-வில் மு.க.ஸ்டாலின்கூட மிசா காலத்தில் கட்சிக்காக அடிபட்டு, ஜெயிலில் மிதிபட்டு கஷ்டப் பட்டார். ஆனால், அன்புராஜ் எந்த சிறைக்குப் போனார்? எந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்? தி.க-வை இன்றும் பெரியளவில் பேச வைத்துக்கொண்டிருக்கும் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டாரா... இல்லை கட்சிப் பொறுப்புகளில்தான் இருந்தாரா? இப்படி எந்தத் தகுதியும் நிரூபிக்காத ஒருவர் தி.க-வின் மிக முக்கியமான பதவிக்கு எப்படி வரலாம்? பெரியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக நடக்கற அத்தனை நிகழ்ச்சிகளையுமே அங்கே பணியாற்றுகிற ஆட்களை வைத்துப் பார்த்துக் கொள்கிற அன்புராஜ் கட்சித் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. இப்படிப்பட்டவர் நாள்தோறும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து தொண்டர்களிடம் எப்படிப் பேசுவார்?'' என கொதிப்போடு கேட்டார்கள்.

தி.க-விலிருந்து பிரிந்து கருத்து வேறுபட்டுப் பிரிந்து சென்ற பெரியார் திராவிடர் கழகத் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

''தி.க. என்கிற பெரியாரின் சொத்தை, தன்னோட சொத் தாக மாத்திக்க நினைக்கறார் வீரமணி. அதுக்காகத்தான் தன் மகன் அன்புராஜுக்காக வாரிசு முறையை ஏற்படுத்தியிருக்கார். இதற்காக ஒரு வருடமாகவே பல்வேறு விஷயங்களைச் செய்துவந்தார் வீரமணி. விடுதலை பவழவிழா மாநாட்டுக் குழுவுக்கு அன்புராஜை தலைவராப் போட்டார். மாணவரணி மாநாடுகளில் அன்புராஜையே புரவலராக்குனாரு. 'பெரியார்' படத்தை எடுத்த லிபர்டி கிரியேஷன்ஸோட இயக்குநரும் அன்புராஜ்தான். திராவிட நலநிதி நிறுவனத்திலும் அன்புராஜ், அவர் மனைவி சுதா, வீரமணியின் மனைவி மோகனா, வீரமணி என குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். தி.க-வின் மிக முக்கிய டிரஸ்ட்டான பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்திலும் அன்புராஜ், சுதா உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். 'விடுதலை' பத்திரிகையையும் வாய்மொழி உத்தரவா அன்புராஜ்தான் பார்த்துக்கறார், கலிபூங்குன்றன் சும்மா ஒரு பொம்மை மாதிரிதான். 'திராவிடன்' பதிப்பகத்தோட இயக்குநரும் அன்புராஜ்தான்!'' என்றார் ராமகிருஷ்ணன்.

ஆனால், தி.க-விலேயே ஒருதரப்பினர், ''அன்புராஜ் ஒண்ணும் திடீர்னு கட்சிக்கு வந்துடலை. சில வருடங்களாகவே கட்சிக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கிறார். திருச்சியில் நாகம்மையார் இல்லத்தின் 50-ம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பா நடத்தினதோட, நிறைய தொகையை மிச்சப்படுத்தி வீரமணி ஐயாகிட்ட கொடுத்தார். அதை வைச்சுத்தான் கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் கட்டினாங்க. இப்படி கட்சியோட எல்லா நிகழ்வுகளையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் அவர்தான் சிறப்பா செய்யறார். பொறுப்பு கொடுத்தா இன்னும் சிறப்பா செயல்படுவார். அதனாலதான் கட்சியோட வளர்ச்சிக்காக அன்புராஜுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க!'' என்று கூறுவதையும் கேட்க முடிகிறது.

இந்தப் பரபரப்புகள் குறித்து கி.வீரமணி யிடமே பேசினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், ''தற்போதைய சூழலில் நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை...'' என்று மட்டும் கூறினார். அவரிடமிருந்தோ தி.க. தலைமையகத்திலிருந்தோ இது குறித்து வரும் விரிவான விளக்கங்களுக்காக, வாசகர்களைப் போலவே நாமும் காத்திருக்கிறோம்.

- மு.தாமரைக்கண்ணன்

0 Comments: