Monday, August 17, 2009

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தி.மு.க.பெரும் துரோகம்!

உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாக உரிமை கோரும் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக பங்களிப்பை வழங்குவதில் தோல்வி கண்டுவிட்டதாகவும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தாயகத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பாரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் இராஜ்ஜியசபா எம்.பி.யான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் முன்னணிப் பங்காளியாக திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்திருப்பது தொடர்பாக திராவிடக் கட்சியை நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்று ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

த ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருப்பதாவது;

ஐ.நா. முறைமையின் கீழ் தனிநாடொன்றுக்கு உரிமை கோருவதற்கு 3 நிபந்தனைகள் ஐ.நா.முறைமையின் கீழ் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். முதலாவதாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆட்புலம் இருத்தல் வேண்டும். இரண்டாவதாக அங்கு மக்கள் வசிக்க வேண்டும். மூன்றாவதாக அந்த ஆட்புல எல்லையை ஆளுகின்ற அதிகாரத்திற்கு மக்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

2001 இல் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இவை மூன்றும் இருந்தன. ஆட்புல எல்லை சுதந்திரமாக இருந்தது. வரி வருமானம் கொழும்பைச் சென்றடைந்திருக்கவில்லை. புலிகள் அந்தப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதுவொரு அரசாங்கம் போன்று இருந்தது. அந்த நிலைமையைப் பயன்படுத்தி ஐ.நா. அங்கீகாரம் பெறுவதற்கான நகர்வை மேற்கொள்ள புலிகள் தவறிவிட்டனர். அச்சமயம் இந்தியாவில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்தத் தருணத்தில் புலிகள் ஆதரவாளர்களான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகியவை மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர் என்ன செய்திருந்தார்கள். இதே மாதிரியானதொரு நிலைமை 1971 இல் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்தது. 1971 டிசம்பரில் இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிவடைந்திருந்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி காலத்திற்கேற்றவாறு செயல்பட்டு டாக்காவிலிருந்த அதிகாரத்தை அங்கீகரித்தார். நாட்கள் செல்ல புதிய தேசமான பங்களாதேஷை ஐ.நா. உட்பட உலகின் அநேகமான நாடுகள் அங்கீகரித்தன என்று நாச்சியப்பன் கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் தோல்வி கண்டதற்குப் பின்னர் குடிப்பரம்பலில் மாற்றமேற்படுவதற்கான எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார். மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இலங்கையில் வாழ்ந்த சகல தமிழர்களும் எங்கே? என்று அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். இலட்சக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு 1983 இன் பின்னர் சென்றுவிட்டனர். தமிழர்கள் அங்கு இல்லாத நிலையில், அவர்களுடைய உரிமைக்காக எவ்வாறு போராட முடியும். இந்தப் பாரதூரமான நிலைமை குறித்துத் தாமதமின்றி நாகரிக உலகம் தீர்வுகாண்பது அவசியமாகும். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் இப்போது கண்ணிவெடி அகற்றுவதென்ற பெயரில் பல இடங்கள் அழிக்கப்படுகின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த பகுதிகளிலுள்ள சான்றாதாரங்கள் யாவும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க�
�ன்றன என்று நாச்சியப்பன் கூறியுள்ளார்.

தற்போதைய உலக சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினமான விடயமென்று நாச்சியப்பன் தெரிவித்திருக்கிறார். கடந்த காலத்தில் தனது இலக்கை எட்டுவதற்கு கிடைத்திருந்த சகல வாய்ப்புகளையும் புலிகள் தவறவிட்டுவிட்டனர். தமக்குக் கிடைத்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டு படிப்படியாக தமது இலக்கை எட்டுவதற்கு அவர்கள் தம்மைக் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும் என்று நாச்சியப்பன் கூறியுள்ளார். 1999 லோகசபைத் தேர்தலில் தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தோற்கடித்ததன் மூலம் தேசிய ரீதியில் முன்னணிக்கு வந்தவர் சுதர்சன நாச்சியப்பன் (62 வயது) ஆகும்.
http://www.paranthan.com/

0 Comments: