Saturday, February 14, 2009

மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் சுவிஸ் தமிழர்கள் போர்க்குரல்

இன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர்.
ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து தாயகத்தினதும் தமிழீழ விடுதலையினதும் அளப்பரிய பற்றினால் நாடு கடந்து வந்து மனித உரிமை மன்றத்துக்கு முன்னால் தீ மூட்டி உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனின் மரணம் உலகத் தமிழ் மக்களை ஆற்றாத துயரத்துக்குள் தள்ளியுள்ள இவ்வேளையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற நேரம் முதல் ஐநாவை நோக்கி வருகை தந்த வண்ணமிருந்தனர்.

கதறியழும் தாய்மார் கண்ணீர் விட்டு அழும் மாணவர்கள் உணர்வுகளை அடக்கமுடியாது தவிக்கும் தமிழர்கள் என்று எல்லோரும் சோகம் சூழ எமது மக்கள் மீதான சிறீலங்கா அரசின் கொலை வெறி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென முழக்கம் இட்டவாறு ஐ.நா முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான சாலையை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.


http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG773b4P9EC4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e

0 Comments: