ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.
"தேனிசை" செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் "விடுதலை" இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,
இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.
தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,
ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் "விடுதலை" இராசேந்திரன் ஆற்றிய உரையில்,
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.
ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.
தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று கேட்டுக் கொண்டார்.
திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,
எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.
இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.
அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது.
பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக "விண்" தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.puthinam.com/full.php?2b1VoKe0docYe0ecAA4e3b4M6Dh4d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e
Monday, February 16, 2009
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு
Posted by நிலவு பாட்டு at 2:41:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்த்துவோம்: தமிழக மக்கள் உறுதியேற்பு //
ME too..
Post a Comment