Tuesday, November 24, 2009

ஈழத்துப் புறநானூற்றுக் கதை


நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம்.

அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது.

தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய்.

அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.