Sunday, January 11, 2009

இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா?

அன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்', `கடாரம் வென்றான்' என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை'ஆகிவிட்டதா? என தமிழகத்திலிருந்து வரும் வார இதழ் குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது....

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....

தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு' விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா' போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள்.

இன உணர்வைக் காப்பதாகச் சொல்லி கவிதையும் எழுதலாம். கூட்டணி தர்மம் அதைவிட மேலோங்கித் `தண்டனை'யும் அளிக்கலாம்.

இன உணர்வுக்கு வால்; கூட்டணி உறவுக்குத் தலை.

இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துவிட்டதாக அறிவிக்கிறது. முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஒண்டியிருந்த கொஞ்சம் நிழலையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் இந்த இனக் கொடூரத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இலங்கை பற்றி எரியும்போது இங்குள்ள கட்சிகள் திருமங்கலத்தில் தங்களுக்குள் மோதி துணை ராணுவத்தை வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன.

புலிகளுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது என்பது வேறு; இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது வேறு.

இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பி, ஈழத் தமிழர்களின் பிரச்னையைப் பார்க்க மறுக்கிற எதிர்நிலையில் காங்கிரஸுக்கு இங்குள்ள கட்சிகள் எந்தவிதத்திலும் சளைத்தவை அல்ல.

இல்லையென்றால் இவர்களின் மௌனத்திற்கும் செயலற்ற தன்மைக்கும், இயலாமைக்கும் என்ன அர்த்தம்? என கேட்டுள்ளது.

http://www.tamilseythi.com/tamilnaadu/kumu...2009-01-11.html

0 Comments: