Friday, March 13, 2009

38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம் இனப் படுகொலை மனிதப் பேரழிவு ஆபத்து

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கும், மனிதப் பேரழிவுக்கும் உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலறி கிளின்டனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இதே போல ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைசுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டு வரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், ரொம் லான்டொஸ் மனித உரிமைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணியில் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அந்தக் கூட்டு கடிதத்தில் எழுதியிருப்பதாவது:

2 ஆயிரம் பேர் சாவு

இலங்கையின் வட பகுதியில் கொடிய மனிதப் பேரழிவு ஆபத்து ஏற்பட்டிருப்பது குறித்து பெருங் கவலையுடன் இந்த மடலை நாங்கள் எழுதுகிறோம். வன்னிப் பகுதியில் சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் சண்டையில், 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பகுதியினர் வெளியில் இருந்து உணவு, மருந்துகள் கிடைக்காமல் வாரக் கணக்கில் துண்டிக்கப்பட்டுள்ளனர். போரினால் அவர்களின் மனிதத் தேவைகளுக்கும், உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து 2 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

நிலைமையின் கடுமையைக் கருத்தில் கொண்டு, அப்பாவி மக்கள் அனைவருக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மனிதநேய உதவிகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், தேசிய ஆட்சி நிர்வாகத்தில் அர்த்தமுள்ள வகையில் தமிழர்கள் பங்கேற்பதற்கு வழிகோலும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதை நோக்கி முன்னேற வேண்டும் என்றும், தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அழைத்து நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

இனப்படுகொலை ஆபத்து: எச்சரிக்கைப் பட்டியலில் இலங்கை

இனப்படுகொலை தடுப்புத் திட்ட அமைப்பானது, இனப்படுகொலை ஆபத்து எச்சரிக்கைக்கு உரிய 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையைக் கருதுகிறது. இனப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருக்கிற அல்லது உடனடியாக நிகழும் ஆபத்து உள்ள நாடுகளை இந்தப் பட்டியலை குறிக்கிறது. இந்த வேளையில் இனப்படுகொலை குறித்த சட்ட விளக்கங்கள் குறித்து சிலர் சர்ச்சை எழுப்பலாம்.

எனினும், இலங்கையில் பரவலாக இன அடிப்படையில் வன்முறை நடக்கிறது என்பதிலும், சிறிலங்கா அரசின் கொள்கைகளால் சண்டையில் ஈடுபடாத தமிழ் மக்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் என்பதிலும் ஐயம் இல்லை.

அப்பாவி மக்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் தொடர்ந்து நீங்கள் கண்டிக்க வேண்டும். சண்டையில் ஈடுபடாத அப்பாவி மக்கள் சுதந்திரமாக வெளியறி மனிதநேய உதவிகளைப் பெறுவதற்கு இரு தரப்பினரும் மனிதநேய பாதுகாப்புப் பாதைகளை ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள், உதவிப் பணியாளர்கள், செய்தியாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல இசைவளிக்கப்பட வேண்டும். இதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று நம்புகிறோம்.

முகாம்களில் மோசமான நிலைமை

மோதல் பகுதியில் இருந்து வெளியேறி வரும் தமிழ் மக்களுக்காக சிறிலங்கா அரசு அமைத்துள்ள பாதுகாப்பு முகாம்களில் உள்ள நிலைமைகளும் எங்களுக்குப் பெரிதும் கவலை அளிக்கின்றன. வன்முறைக்கு அஞ்சி வெளியேறி வரும் சண்டையில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்குப் புகலிடம் அளிக்க வேண்டியது முன்னுரிமைக்கு உரியது என்பது தெளிவானது. ஆனால், அங்குள்ள அப்பாவி மக்களின் மனிதநேயத் தேவைகளுக்கு இந்த முகாம்கள் போதுமானவையாக இல்லை.

நல்வாழ்வுச் சிறார்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்கள் காவல் முகாம்கள் என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் அதனுடைய பெப்ரவரி 20 ஆம் நாள் அறிக்கையில் கூறியுள்ளது. முட்கம்பி வேலி போடப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம்களில் முழுக் குடும்பங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சுதந்திரமும், சுதந்திரமான நடமாட்டமும் மறுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது துணைப் படையினர் அந்த முகாம்களுக்குள் செயற்படுகின்றனர். எண்ணற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுகின்றனர், உடைமைகள் பறிக்கப்படுகின்றன. சிலர் காணாமல் போகின்றனர் என்று மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்களின் நிர்வாகத்தை ஐ.நா. அமைப்புக்களிடம் ஒப்படைக்க வேண்டும்

முகாம்களில் உள்ள அனைத்து அப்பாவி மக்களுக்கும், முகாம்களில் தங்கியிருப்பதற்கு அல்லது எப்போது விரும்புகிறார்களோ அப்போது வீடு திரும்புவதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களின் நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும் உதவி செய்யும் பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஏற்க வேண்டும். இந்தப் பணியை ஏற்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பையும், இதை ஐக்கிய நாடுகள் சபை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு சிறிலங்கா அரசையும் அரசையும் நீங்கள் தூண்ட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்க வேண்டும்

இலங்கை இனப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முன்வருமாறு பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.

இறுதியாக, தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கேற்பும் அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஐம்பதாண்டுக் கால வன்முறைக்குக் காரணமான இனப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கத் தலைமை முன்வர வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாத வரையில், மோதலுக்கு நிலையான முடிவு ஏற்படாது. வரும் மாதங்களில் சிறிலங்காவுக்கு அமெரிக்க நிதியுதவியும், அனைத்துலக மறுசீரமைப்பு நிதியுதவியும் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், அரசில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பங்கேற்பு அளித்தால்தான் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்பதை நிபந்தனையாக விதிப்பதற்கு பிற அனைத்துலக நன்கொடையாளர்களுடன் அமெரிக்க நிர்வாகம் இணைந்து செயற்பட வேண்டும் என ஹிலறி கிளிண்டனுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிபிட்டுள்ளனர்.

0 Comments: