இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் அண்மைக் கால `காய் நகர்த்தல்'களைப் பார்க்கும்போது, ஈழத்தில் இதுவரை நடந்துவந்த கோர நாடகத்தில் திரைவிழும் நேரம் வந்துவிட்டதைப் போலத் தெரிகிறது.
உதாரணமாக, ஒருநாளும் இல்லாத திருநாளாக, தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன்சிங் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இத்தனை காலமும் இல்லாமல் இலங்கைத் தமிழர்களைப் பற்றி திடீர் நினைப்பு வந்து அவர் எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், ``இலங்கைத் தமிழர்களுக்கு இனி எந்தச் சிக்கலும் வராது, அங்கே மரணப்பட்டியல் நீளாது, அமைதி திரும்பும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்று ராஜபக்ஷே என்னிடம் உறுதியளித்துள்ளார்'' என கூறியிருக்கிறார். மன்மோகன்சிங்கின் இந்தக் கரிசனக் கடிதத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் காரணமா? என்றால், இல்லை என்கிறார்கள் சிலர்.
இதில் இரண்டாவது அத்தியாயமாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும், ஒருநாளும் இல்லாத திருநாளாக 22 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஓர் அழைப்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள். புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி.க்கள் மீது ராஜபக்ஷேவுக்குப் பிறந்த அந்தப் புதிய கரிசனத்தையும் பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 23-ம் தேதி, ராஜபக்ஷே அனுப்பிய அந்த அவசரக் கடிதத்தில், ``26-ம்தேதி சமரச முடிவு பற்றி அனைவரும் உட்கார்ந்து பேசலாம்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. போர்நிறுத்தம் பற்றி அதில் ஒருவரி கூட இல்லாததால் அதைப் புறக்கணித்து விட்டனர் தமிழ் எம்.பி.க்கள்.
இந்தத் தகவல்கள் நம்மை தட்டிப்பார்த்த நிலையில், இதுபற்றி வெளிநாட்டுத் தொடர்பாளர் ஒருவரிடம் பேசி, மேற்கொண்டு தகவல்களைத் தெரிந்து கொண்டோம். அவர் தந்த அத்தனை தகவல்களும் நம்மை அதிர்ச்சியில் அமிழ்த்துவதாக இருந்தது.
``இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து ஒரு கூட்டு சதித்திட்டத்தை குறைவின்றி நிறைவேற்ற உள்ளன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில்தான் அந்தச் சதியின் நுனி தெரிந்தது. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஒரு தமிழ் இதழ் அந்தச் சதியை அம்பலப்படுத்தியது'' என்றவர், அந்தச் சதியைப் பற்றி விளக்கினார்.
```ஏப்ரல் மாத இறுதிக்குள் புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என இலங்கையும், இந்தியாவும் நம்புகின்றன. பிரபாகரன் தப்பிவிடுவார் அல்லது வீரமரணத்தைத் தழுவுவார். எஞ்சிய புலிகள் கெரில்லாப் போரைத் தொடர்ந்தாலும் அவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது' என்பது இந்த இருநாடுகளின் கணிப்பு.
அதன்பின் இலங்கைத் தமிழர்களுக்கென்று பெயரளவில் ஒரு `பொம்மைத் தலைவர்' தேவைப்படுவார். அப்படித் தாங்கள் போடும் தாளத்திற்கேற்றபடி ஆடும் ஒரு பொம்மைத் தலைவரை இருநாடுகளும் தேடி வருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவின் முதல் சாய்ஸ் `வரதராஜப் பெருமாள்தான்'. ஏற்கெனவே இந்திய அமைதிப் படை இலங்கை சென்றிருந்தபோது, தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இந்தியாவின் ஆசியுடன், பொம்மை முதல்வராக, ஆட்சி(!) நடத்தியவர் இவர். அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியதும், இவரும் ஓடிவிட்டார். தற்போது ஒரிசாவில் ஒளிந்திருக்கும் அவரைக் கூட்டி வந்து, ஒப்புக்கு தமிழர் பகுதியில் ஒரு தேர்தலை நடத்திவைத்து முதல்வராக உட்கார வைக்க இந்தியா ஆர்வத்துடன் இருக்கிறது. அவரை மீண்டும் முதல்வராக்குவதை புலிகளுக்கு எதிரான ஒரு சவாலாக, பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா கருதுகிறது. ஆனால், மீண்டும் ஒரு பொம்மை விளையாட்டுக்கு வரதராஜப் பெருமாள் தயாரில்லை என்பதுதான் உண்மை.
இதற்கிடையே, இலங்கை அரசின் முதல் சாய்ஸாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் அமைச்சராக இருக்கும் இவர், இந்தியாவில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. சென்னை சூளைமேடு துப்பாக்கிச்சூடு வழக்கில் சிறையிலிருந்து தப்பியோடியவர். இவருக்கு இலங்கைத் தமிழர்களிடம் துளிகூட செல்வாக்கு இல்லை. இதே காரணத்திற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்த சங்கரியையும் முதல்வராக்கும் விருப்பம் இலங்கை அரசுக்கு இல்லை.
இந்தநிலையில், கிழக்கு மாகாண முதல்வராக இருக்கும் பிள்ளையானின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, தற்போது நியமன எம்.பி.யாக உள்ள கருணாவைத் தனது ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் உத்தி, அதிபர் ராஜபக்ஷேவுக்கு இருக்கிறது. இதன்மூலம் கருணாவைத் தமிழர்களின் தலைவராகக் காட்டி, தன் கட்சியையும் தமிழர் பகுதியில் வளர்த்துக் கொள்ளலாம் என ராஜபக்ஷே கருதுகிறார். இந்த முடிவுக்கு இந்தியாவும் தலையாட்டும் ஐடியாவில் இருப்பதாகக் கேள்வி.
முன்பு புலிகளிடமிருந்து கிழக்குப் பகுதி மீட்கப் பட்டபோது, அங்கு வளர்ச்சிப் பணிக்காக கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி வந்து குவிந்தது. இப்போது வடக்குப் பகுதியும் மீட்கப்படும் பட்சத்தில் அதற்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் குவிய வாய்ப்புண்டு. அந்தநிலையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தருகிறோம் என்ற பெயரில் வடக்கு கிழக்கை இணைத்து பேருக்கு ஒரு முதல்வரை நிறுவி, அந்த ஆயிரம் கோடிகளை அள்ளிவிழுங்க இலங்கை அரசு துடிப்புடன் உள்ளது. இதன் எதிரொலிதான் தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய அந்தக் கடிதம்'' என்றவர், அடுத்ததாக ஒரு தகவலை அள்ளிப் போட்டார்.
``இலங்கையில் புலிகள் தனியரசு நடத்திய காலத்தில், எஸ்கேப்பாகி வெளிநாடுகளுக்குப் போன பல ஈழத்தமிழ் இயக்கங்கள் அங்கங்கே பெயரளவில் இயங்கி வருகின்றன. அந்த இயக்கங்களுடன் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் கொஞ்சிக் குலாவி, நல்லுறவு வைத்திருக்கின்றன. இந்தநிலையில், ராஜபக்ஷே அரசு, `புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான ஒரு மூன்று நாள் மாநாட்டை, திடீரென, சிங்கப்பூரில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. `தமிழர் பகுதியில் போருக்குப் பின்புள்ள நிலைமை, தமிழர் பகுதியில் புனரமைப்புப் பணிகள், அதிகாரப் பகிர்வு' பற்றி தமிழர் பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் பேச அந்த மாநாடாம். சாங்க்ரி லா ஹோட்டலில் 27, 28, 29 தேதிகளில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களைத் தனது சொந்த செலவில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று மஞ்சள்குளிக்க வைக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சு அலுவலகச் செயலாளர் பலிந்தா கோகண்ண, இதற்கான அழைப்பிதழ்களை பல்வேறு தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். (அந்த அழைப்பின் நகல் ஒன்று நமக்கும் கிடைத்தது). காலை, பகல், இரவு விருந்துகளுக்கு இடையே அவ்வப்போது தமிழர் பிரச்னை பற்றிப் பேச அரைமணிநேரம், முக்கால் மணி நேரத்தை அந்த மாநாட்டில் ஒதுக்கியிருக்கிறார்கள். அரை நூற்றாண்டு தமிழர் இனப்பிரச்னையை எப்படி அரை மணி, முக்கால் மணியில் பேசி முடிவெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை?
சிங்கப்பூரில் இப்படி ஒரு மாநாட்டு நாடகம் செவ்வனே நடக்க இருக்கும் தறுவாயில், இந்தியாவில் பெங்களூருவிலும் ஒரு மாநாடு நடக்கப் போகிறது. பெங்களூரு, எலகங்கா, யக்கூரில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச பாடசாலையில் நடக்க இருக்கும் அந்த மாநாட்டில் ஈழத்தமிழர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஏப்ரல் 11, 12-ல் நடக்கப் போகும் அந்த மாநாட்டை நடத்தப் போவது யார் தெரியுமா? `ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி' (ஈ.என்.டி.எல்.எஃப்.) என அழைக்கப்படுகிற ஓர் இலங்கைப் போராளிக் குழு.
இந்த இயக்கம், `ரா' உளவுப்படையின் கைப்பிள்ளையாக வளர்க்கப்பட்ட இயக்கம். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் புலிகளுடன் போராடி, அமைதிப்படை வெளியேறிய போது, அவர்களுடன் சேர்ந்து இவர்கள் அந்தர்தியானமாகி விட்டார்கள். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தின் தலைவர் பரந்தன் ராஜா என்கிற ஞா. ஞானசேகரன் இந்தியாவில்தான் இருக்கிறார். இவரும், அந்த அமைப்பின் மற்றொரு நிர்வாகியான வி.ராமராஜ் என்பவரும்தான் அந்த மாநாட்டை நடத்தப் போகிறார்கள். இந்த ராமராஜ், போதைக் கடத்தல் வழக்குக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் சில வருடம் சிறையில் இருந்தவர்.
`போரை முடிவுக்குக் கொண்டு வரவும், (போர் நிறுத்தம் அல்ல), தமிழினத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் இந்த மாநாடாம். மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இதுபோன்ற இயக்கத்தை வைத்துக் கொண்டு, பழைய ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை ஒரு பொம்மை அரசு மூலம் கொண்டுவர இந்தியாவும், இலங்கையும் திட்டமிடுகின்றன. அதற்காகத்தான் இவ்வளவு நாடகமும்'' என்றார் அவர், பெருமூச்சுடன்.
`புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி.க்களைக் கூட ராஜபக்ஷே திடீரென பேச அழைத்திருக்கிறாரே?' என்ற கேள்வியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வைத்தோம்.
``என்னவென்றே தெரியவில்லை? எந்தவித முன் தகவலும் தராமல் திடீரென, `26-ம்தேதி மாலை 6.30 மணிக்குக் கூட்டம் இருக்கிறது, தமிழர் நலன் பற்றி பேச வேண்டும், வாருங்கள்' என்றார்கள். 22 தமிழ் எம்.பி.க்களில் பலர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளில் இருக்கிறார்கள். மற்றவர்களும் கூட, `இது உலகை ஏமாற்ற ராஜபக்ஷே போடும் நாடகம்' என்று தெரிந்து அந்தக் கூட்டத்திற்குப் போகவில்லை.
இதற்குமுன் இனப்பிரச்னையைத் தீர்க்க `அனைத்துக் கட்சி ஆலோசனைக்குழு' ஒன்றை ராஜபக்ஷே அமைத்திருந்தார். அந்தக் குழு இதுவரை 107 முறை கூடியும் ஒருமுறைகூட எங்களுக்கு அழைப்பு விடுத்ததில்லை. அந்தக் குழு எடுத்த அனைத்து அரைகுறை தீர்மானங்களும் குப்பைத் தொட்டிக்குத்தான் இதுவரை போயிருக்கின்றன. இந்த நிலையில், இந்தமுறை எங்களையும் சும்மா ஒப்புக்குக் கூப்பிட்டு, அதன்பின் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள் என்று பழிபோடுவதுதான் ராஜபக்ஷேவின் திட்டம்.
அதோடு `நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று புலிகள் அறிவித்திருந்தும் ராஜபக்ஷே அரசு அதை உதாசீனம் செய்ததை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டித்தன. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்றும் சூழ்நிலையும் இப்போது உள்ளது. அதைத் தடுக்கவும், திசை திருப்பவும்தான் இந்தக் கண்துடைப்புக் கூட்டம்.
அது மட்டுமல்ல, புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை 1.6 பில்லியன் டாலர்கைளை செலவு செய்துவிட்டு வெறுங்கையுடன் நிற்கிறார் ராஜபக்ஷே. இனியும் போர்நீடித்தால் இலங்கை அரசு பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதைச் சமாளிக்க சர்வதேச வங்கியிடம் தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு, நிவாரணம் என்ற பெயரில் 1.9 பில்லியன் கோடிகளைக் கடன் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. அந்த வங்கியோ, `அப்பாவித் தமிழ் மக்களை ஒழுங்காக நடத்து' என்று நிபந்தனை போட்டிருக்கிறது. அதைச் சமாளிக்கத்தான் இந்தமுறை தமிழ் எம்.பி.க்களாகிய எங்களுக்கும் அழைப்பு'' என்று போட்டுடைத்தார் அவர்.
இதற்கிடையே இலங்கை போர்நிலவரம் பற்றி வன்னிப்பகுதி தொடர்பாளர் ஒருவரிடம் பேசினோம். ``போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இலங்கையை விட இந்தியாதான் முனைப்புடன் இருக்கிறது. திரிகோணமலை மாவட்டம், புல்மோடையில் இந்தியா அமைத்துள்ள மருத்துவமனையில், ராணுவ மருத்துவர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம் இடுப்பில் மிகவும் லாகவமாக கைத்துப்பாக்கிகளைச் செருகி வைத்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் இதுவரை ஐநூறு தமிழர்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இந்திய `மருத்துவர்கள்' தவறாமல் இருபது கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். `பிரபாகரன், சூசை, பொட்டு அம்மானை எல்லாம் எப்போதாவது பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? நீங்கள் இருக்கும் பகுதியில் புலிகள் நடமாட்டம் எப்படி? அவர்களது ஆயுத பலம் என்ன?' என்பவை அந்தக் கேள்விகளில் சில. இலங்கை ராணுவம் விசாரித்தால் தமிழர்கள் தகவல் தரமாட்டார்கள் என்பதால் இந்திய மருத்துவர்கள் இப்படி நைச்சியமாகக் கேள்வி கேட்டு தகவல் திரட்டி, அந்தத் தகவலை இலங்கை ராணுவத்துக்குப் பரிமாறுகிறார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது'' என்றார் அவர்.
- பா. ஏகலைவன்
நன்றி குமுதம்
Sunday, March 29, 2009
இலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு
Posted by நிலவு பாட்டு at 12:03:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment