தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் என்ற சாயத்தை பூசிய படி தான் எதனை கூறினாலும், எதனை செய்தாலும் சரியானதே என்று சிறீலங்கா அரசு கருதுவதுடன், அனைத்துலகத்தின் எல்லா நாடுகளுடனும் வழுக்கும் போக்கை கைக்கொண்டு அவற்றை தனது பிடியில் வைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றது.
ஆனால் அரசின் இந்த கனவுகள் தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து வருகின்றன. அண்மையில் சிறீலங்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது, ஜேர்மன் அரசு கொடுத்த பதிலடியை போல
தற்போது ஐ. நாவின் மனித உரிமை ஆணைக்குழு தனது பதிலடியை கொடுத்துள்ளது. வலிமையுள்ள தேசம் என்றாலும், வலிமை மிக்க அமைப்புக்கள் என்றாலும் தமது நிலையிலும், நீதியிலும் உறுதியாக நின்றால் தான் அவர்கள் மீதான நம்பக்கைகளை சிறிதளவேனும் மக்களிடம் தக்கவைக்க முடியும்.
சிறீலங்காவின் காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதம் தொடர்பான அனைத்துலகத்தின் கவனம் சிறிய அசைவை தற்போது சந்தித்துள்ளது. இந்த அசைவிற்கு காரணம் அனைத்துலகத்தில் பரந்துவாழும் பல கோடி தமிழ் மக்களினதும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களினதும் அயராத போராட்டங்களும் உழைப்புக்களும் தான்.
அதாவது எமது பிரச்சனைகள், சிறீலங்கா அரசின் பொய்பிரச்சாரம் இவை இரண்டையும் அனைத்துலகத்தின் கவனத்தில் கொண்டுவருவதில் இந்த போராட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பொய்யான பிரச்சாரங்களின் ஊடாக தனது அடக்குமுறைகளை மறைப்பதற்கு அரசு பெருமளவான நிதிகளை ஒதுக்கி அனைத்துலக ரீதியில் செயற்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் தற்போது சுதந்திரமான ஊடகங்கள் என்ற நிலை முற்றாக இல்லது செய்யப்பட்டுள்ளதுடன், முழுக்க முழுக்க அரச சார்பு ஊடகங்களே அங்கு இயங்கி வருகின்றன.
இந்த அணுகுழுறைகள் அரசுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திவருகின்றது. படையினாரின் நடவடிக்கை தொடர்பான வெற்றி செய்திகளை மட்டும் தென்னிலங்கை மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் உளவுரனை உயர்வாக பேணுவதுடன், படையினருக்கு தேவையான வளங்களையும் குறைவின்றி பெற்றுக் கொள்ளலாம். அனைத்துலகத்தின் கண்களில் அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை மறைத்து கொள்ளலாம் என்பவை அவற்றில் முக்கியமானவை. அரசியல் அடித்தளத்தை மேலும் சில காலங்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள இவை இரண்டும் அரசுக்கு உதவும்.
மறுவளமாக இதனை பார்த்தால் தமிழ் மக்களின் பல தசாப்த வரலாற்றை கொண்ட போராட்டம் வலிமை குன்றியது. அதனை இலகுவில் படைத்துறை ரீதியாக தோற்கடித்து விடலாம் என்ற தோற்றப்பாட்டை அனைத்துலகத்தில் ஏற்படுத்தி விடலாம் என்பது அரசின் முக்கிய நோக்கம். மேற்குலகம் என்றாலும், அனைத்துலகம் என்றாலும் அவர்களின் நகர்வுகளை தீர்மானிக்கும் ஒரு காரணியாக பலம் - பலவீனம் தொடர்பான கணிப்பீடுகள் உண்டு.
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடம் வன்னியில் வாழும் மக்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளின் பின்னனியும் அதுவே. அதாவது விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட போகின்றனர் என்ற அரசின் பிரச்சாரத்தை அவர்கள் முழுமையாக நம்பிவிட்டனர். மேலும் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தின் இந்த நகர்வை கூட அரசு தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கே பயன்படுத்தியிருந்தது.
அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிறீலங்கா அரசுடன் இணைந்து ஒரு தலைப்பட்சமாக வன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற போவதாக கருத்துக்களை வெளியிடவில்லை. மக்களை வெளியேற்றுவதற்கு முன்னர் உண்மையான களநிலமைகள் ஆராயப்படும் எனவும், விடுதலைப்புலிகளுடன் இது தொடர்பில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் உலகம் தன்னுடன் சேர்ந்து நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் தனது பிரதான எதிரியான தமிழ் மக்களின் உளவுரனை சிதறடித்து விடலாம் என்ற நோக்த்துடன் அரசு அதனை திரித்து கூறியிருந்தது. ஆனால் மறுவளமாக பார்த்தால் தமிழ் மக்களின் விருப்பதிற்கு மாறாக இந்திய மத்திய அரசு வன்னியில் உள்ள தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்ற மேற்கொண்ட முயற்சியினை அமெரிக்காவின் தலையீடு தடுத்து நிறுத்தியுள்ளது என நாம் கருதினாலும் அதில் தவறில்லை.
இருந்த போதும் விடுதலைப்புலிகள் இன்னும் சில நாட்களில் தோற்கடிக்கப்பட்டு வடுவார்கள் என்ற அரசின் பிரச்சாரங்கள் தற்போது அந்தரத்தில் தொங்கி நிற்பதாகவே களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு களமுனையில் தொடர்ந்து மோதல்கள் நிகழ்கின்றன. அதன் ஒவ்வொரு எல்லை புள்ளிகளும் பல தடவை இரு தரப்பினரிடமும் கைமாறிய வண்ணம் உள்ளது.
ஓவ்வொரு வாரமும் படைத்தரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள எஞ்சிய நிலப்பரப்புக்களை அங்குலம் அங்குலமாகவாவது கைப்பற்றிவிட முயன்று வருகின்றது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சாலை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணி மற்றும் புதுக்குடியிருப்பின் தென்பகுதி ஊடாக நகர்வில் ஈடுபட்டுவரும் 53 ஆவது படையணி மற்றும் நடவடிக்கை படையணி எட்டு என்பன கடுமையான சேதங்களை சந்தித்த நிலையில் இந்த வாரம் 58 ஆவது படையணி இரணைப்பாலை பகுதியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் கடந்த திங்கள்கிழமை (16) மற்றும் செவ்வாய்கிழமைகளில் (17) அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை சேர்ந்த 6 பற்றலியன் படையினர் மேற்கொண்ட இந்த முயற்சியை எதிர்த்து விடுதலைப்புலிகளின் படையணிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 600 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 800 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.
படையினருக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்களை அரசு வெளியில் தெரிவிக்காத போதும் வழமைக்கு மாறாக இந்த இரு தினங்களிலும் கொழும்பில் ஓடிய அதிக எண்ணிக்கையான நோயாளர் காவு வண்டிகளும், தென்னிலங்கை மருத்துவமனை வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை மட்டும் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் உள்ள 71 மற்றும் 72 ஆவது விடுதிகளில் 100 படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய மோதல்களில் படைத்தரப்பு தலைநகரத்து மருத்துவமனைகளை அதிகளவில் படையினரின் தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. ஊடகங்களின் கண்களில் இருந்து தகவல்களை மறைக்கும் உத்தி இதுவாகும். அதற்கு மாற்றீடாக அனுராதபுரம், வவுனியா, திருமலை, பலாலி, மன்னார் மருத்துவமனைகளையும், பெரதேனியா மருத்துவமனையையும் பயன்படுத்தி வருகின்றது. எனினும் படையினாரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிக அளவில் படையினர் இழப்புக்களை சந்திக்கும் போது கொழும்பு மருத்துவமனைகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு படைத்தரப்பு தள்ளப்படுகின்றது.
இதனிடையே புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கான படை பலத்தை தற்போது அரசு அதிகரித்துள்ளது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசு வன்னியின் பின்னனி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த படைபலம் எங்கிருந்து திரட்டப்பட்டது? வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் இருந்து பெருமளவான படையினர் மீண்டும் வன்னி களமுனைக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த 52 ஆவது டிவிசன் படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களும், வவுனியாவில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் சில பற்றலியன்களும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளன.
இராணுவத்திற்கு மேலும் இளைஞர்களை சேர்க்கும் முயற்சிகளையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருவதுடன் படையினருக்கான ஓய்வூதிய தொகையையும் 85 விகிதமாக அதிகரிக்கும் திட்டங்களையும், தொண்டர் படையினருக்கான அதிக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. களமுனைகளில் ஏற்படும் இழப்புக்களை ஈடுசெய்யவும், களமுனைகளை தக்கவைப்பதற்கும் இரணுவம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய மோதல்களை பொறுத்தவரையில் இராணுவத்திற்கு ஏற்படும் ஆளணி இழப்புக்கள் அதிகம். இந்த இழப்புக்கள் வெளியில் தெரியாது இருக்கும் பொருட்டு ஏறத்தாள 100 இராணுவ மருத்துவக்குழுக்களை களமுனைகளில் இராணுவம் அமைத்துள்ளதுடன், அனுராதபுரம் இராணுவமருத்துவமனையையும் நவீனமயப்படுத்தி பேணி வருகின்றது.
இவை தவிர மன்னார், வவுனியா, பலாலி, திருமலை போன்ற பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளை இராணுவத்தின் தேவைகளுக்காக பயன்படுத்துவதுடன், அங்கு அனுமதிக்கப்படும் படையினருக்கான சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு தென்னிலங்கையில் உள்ள மருத்துவர்களும், தாதிகளும் அடிக்கடி அரச செலவில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
முன்னர் ஒரு பற்றலியன் படையினருக்கு ஒரு மருத்துவக்குழு என களமுனை மருத்துவ மனைகளை அமைத்திருந்த படைத்தரப்பு தற்போது ஒரு கொம்பனி இராணுவத்தினருக்கு ஒரு மருத்துவ குழு என்ற நிலையை எட்டியுள்ளது. அதற்கான காரணம் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்களின் தொகை அதிகரித்து செல்வதே என இந்த மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவ பொறுப்பதிகாரி மேஜர் சஞ்சீவ தொடங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் நாள் அக்கராயன் பகுதியில் நடைபெற்ற சமரில் 24 மணிநேரத்தில் 215 காயமடைந்த படையினர் தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தாம் காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும் படைத்தரப்பு சந்தித்து வரும் இந்த இழப்புக்கள் தென்னிலங்கையின் கிராமப்புறங்களை தற்போது அதிகளவில் பாதித்து வருகின்றது. அதிகளவான தென்னிலங்கை கிரமாப்புறத்து இளைஞர்கள் களமுனைகளில் காணாமல் போயுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்து வருவதாக தென்னிலங்கையின் ஆழமான பிரதேசங்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊடகத்துறை மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை, பொது கூட்டங்களையோ அல்லது ஊhவலங்களையோ நடத்துவதற்கு முன் அனுமதி கோரவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் இந்த மக்களின் தகவல்கள் எவையும் வெளியில் கசியாத படி முடக்கிப் போட்டுள்ளது.
இருந்தாலும் சிலர் தமது தகவல்களை ஊடகங்களுக்கு மறைவாக தெரிவித்தும் வருகின்றனர். எனது மகன் இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்தார். ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் காணாமல் போய்விட்டதாக படையினர் தெரிவித்துள்ளதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத இராணுவ சிப்பாய் ஒருவரின் தாய் கூறியுள்ளார்.
தனது மகன் மீண்டும் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுவதுடன், ஆலயங்களுக்கு பசுக்களை தானம் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதே கிரமத்தை சேர்ந்த மற்றுமொரு படை சிப்பாயின் தாயார் கூறுகையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்த எனது மகன் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு களமுனையில் இறந்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.
எனது மகனின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட அவருடைய உற்ற நண்பனான மற்றுமொரு சிப்பாய் பிள்ளையை இழந்த எமது குடும்பத்தை தான் அடிக்கடி வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் சில நாட்களில் அவர் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் எம்மை வந்து சேர்ந்தது என அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கடந்த வாரம் தொன்னிலங்கையில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மக்களிடம் பேசிய ஊடகம் ஒன்று தெரிவித்த தகவல்கள்.
புதுக்குடியிருப்பு களமுனையில் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக்கப்பட்டுள்ள படைத்தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதும் மறுபுறம் பரந்த வன்னி நிலப்பரப்பை தக்கவைப்பதிலும் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய இராணுவம் வன்னி பகுதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்த போது வன்னி பகுதியை தக்கவைப்பதற்கு ஏறத்தாள ஐந்து இலட்சம் படையினர் தேவை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அது தான் தற்போதைய நிலையும் கூட, ஆனால் இவ்வளவு தொகையான படையினரை சிறீலங்கா தரப்பு திரட்டுவது என்பது முயல்கொம்பான கதை என்பதுடன், தற்போதுள்ள பெருமளவான படை வளங்களை கூட குறுகிய காலத்திற்கே அவர்களால் தக்கவைக்க முடியும்.
விடுதலைப்போராட்டத்திற்கும், அரசியலுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. விடுதலைப்போராட்டம் தனது உயர்ந்த நோக்கத்தை அடைவதற்காக பல இடர்களை தாண்டி பல பரிமாணங்களின் ஊடாக நீண்ட காலம் பயணிக்கும் தன்மை கொண்டது. ஆனால் அரசியல் ஆட்சி என்பது அவ்வாறனது அல்ல அவர்களின் ஆயட்காலம் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் மட்டுமே. அதற்குள் அவர்கள் தமது நோக்கங்களை அடைய முயற்சிப்பதுண்டு ஏனெனில் அதன் பின்னர் தேர்தல், கூட்டணி, பொருளாதார சிக்கல்கள் என்ற பல சவால்களை முகங்கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்குண்டு.
எனவே தான் தனது வளங்களை ஒன்று திரட்டி விரைவாக ஒரு வெற்றியை அடைந்துவிட சிறீலங்கா அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. தனது பலத்திற்கு அப்பால்பட்ட களமுனை என தெரிந்தும் கூட தனது படை வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி அது போரிட்டு வருகின்றது. இவ்வாறான ஒரு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கை ஒன்றை அரசு மேற்கொள்வதற்கு அதனை தூண்டிய காரணிகள் என்ன?
இந்த நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஒன்று, இரண்டாவது இந்த படைத்துறை வெற்றியினால் தென்னிலங்கையில் அறுவடை செய்யப்படும் அரசியல் ஆதாயங்கள் ஏராளம் என்ற பேராசை. ஆனால் இந்த களமுனை மேலும் சில காலம் இழுபட்டு சென்றால் தற்போதுள்ள அரசியல் பலம் கூட இல்லாது போவதுடன், படையினாரின் போரிடும் வலுவும் மழுங்கிப் போகலாம் என்ற கருத்துக்களையும் நாம் மறுக்க முடியாது.
- வேல்ஸ் இல் இருந்து அருஷ் -
நன்றி : ஈழமுரசு (21.03.2009),தமிழ்கதிர்
http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2772:2009-03-21-14-52-49&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
Saturday, March 21, 2009
விரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பயணிக்கும் விடுதலைப்போரும் -வேல்சிலிருந்து அருஷ்
Posted by நிலவு பாட்டு at 7:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment