Friday, July 10, 2009

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.

சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.

ஒரே இலக்குடன் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நீங்கள் எதற்கு வெவ்வேறு இயக்கங்களை ஆரம்பித்தீர்கள் என்பதே புரியவில்லை எங்களுக்கு. சிவகுமாரன் தொடக்கி வைத்தான். டெலோ அமைப்பின் குட்டிமணி ஜெகன் தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட, பிரபாகரன் என்னும் துடிப்பும் வீரமும் நிறைந்த இளைஞன் வழி தொடர்ந்தான். சரி, சொந்தப் பிரச்சனையால் உமா மகேஸ்வரன் பிரிந்து போனான். புளொட் அமைப்பை உருவாக்கினான். எல்லாம் சரி. அதன் பிறகு சேர்ந்த இளைஞர்கள் ஒன்று பிரபாகரனுடன் அல்லது உமா மகேஸ்வரனுடன் அல்லது டெலோவில் சேர வேண்டியது தானே? எதற்கு மழைக்கு முழைத்த காளான்கள் மாதிரி புது புது இயக்கங்களை உருவாக்கினீர்கள்? தமிழ் ஈழம் என்ற ஒரே கொள்கை தானே உங்களிடம் அன்று இருந்தது? கண்ணீர்த்துளி போல இருக்கும் இலங்கையிலிருந்து பிரியப் போகும் தமிழ் ஈழத்தை ஆளுக்கொரு குறிசசியாகப் பிரித்து ஆட்சி செய்யவா? 8 மாவட்டங்களைக் கொண்ட தமிழ் ஈழத்தை வென்றெடுக்க அமைக்கப் பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா? 8 அல்லது அதற்கும் மேல்.டெலோ., L.T.T.E, ஈரோஸ்,புளொட், E.P.R.L.F., E.N.D.L.F., TELF, EPDP, .

இவை என் ஞாபகத்தில் இருப்பவை. இதைவிட இன்னும் இருந்ததோ எனக்குத் தெரியாது.
கிட்டு, எங்கள் பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று கோண்டாவிலில் வைத்து டெலோ தலைவர் உயிர்ப் பிச்சை கேட்டும் சுட்டுக் கொல்லப் பட்டர் என்பதை நினைவு கூருகிறீர்களே,உங்கள் பிரச்சனை என்ன என்று எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் போகும் வரையிலும் ஒற்றுமையாய் இராணுவத்தைத் தாக்கிய நீங்கள் அதன் பிறகு உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்.கிடைப்பது எதுவானாலும் அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற சந்தர்ப்பவாதிகளுக்கும் தமிழ் ஈழம் என்ற நினைத்த குறிக்கோள் வேண்டும் என்ற லட்சிய வாதிக்கும் இடையில் சிக்கி திம்பு பேச்சுவார்த்தை சீரழிந்தது எமக்கும் தெரியும் "தோழர்களே."

உங்களதும் புலிகளும் போராட்டங்கள் என் வயதுடன் வளர்ந்தவை. நித்தம் நித்தம் அவதானித்ததையும் அனுபவித்ததையும் மட்டுமே இங்கு சொல்கிறேன்.ஆனாலும் இந்தக் கொலைகள் விடயத்தில் புலிகளை அப்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டபோது நீங்கள் இப்போது நினைவு கூரும் வாசுதேவாவை,பாரூக்கை தெருவில் சுடப்பட்டுக் கிடந்த ஸ்ரீ சபாரத்தினத்தை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன், எதற்கு இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று ஆத்திரப் பட்டிருக்கிறேன். எங்களைப் புலிகள் இப்படி அழித்திருக்கா விட்டால் நாங்களும் எங்கள் மக்களுக்காகப் போராடியிருப்போம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையாக இருக்குமோ என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் ஆரம்பிக்கும் வரைக்கும் தான்.

புலிகள் காட்டுக்குப் போனதும் இந்திய ராணுவத்தின் ஆளுகைக்குள் நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நீங்கள் கூறியபடி சந்தர்ப்பம் உங்களுக்குத் தரப்பட்டது.என்ன செய்தீர்கள் "தோழர்களே?" எங்களுக்காகப் போராட வேண்டாம், நாங்கள் அழிவதை, எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்தினீர்களா? இவற்றையெல்லாம் நீங்களே செய்தீர்களே?புலிகளை மட்டுமா நாங்கள் வளர்த்தோம்?உங்களையும் நாங்கள் தானே வளர்த்தோம்? உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டதற்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பழி தீர்த்துக் கொண்டீர்களே?

84,85 களில் எங்கள் வீட்டில் இருந்தே தினமும் 5 பேருக்கு சாப்பாடு பார்சல் போகும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் என்ற முறையில். ஆனால் புலிகளுக்கு உணவு கொடுத்ததாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசலில் துப்பாக்கியோடு நின்றீர்கள்.உங்களுக்கும் தானே தந்தோம் என்பதை மறந்து என் சகோதரனை மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? 1988 இல செயின்ட். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் தேவகுமாரனை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்து முகமே அடையாளம் தெரியாதவாறு மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? அவன் செய்த தேசத் துரோகம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கிடையில் விநியோகித்தது தான்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானபோது நீங்கள் பிணமாகத் தெருவில் போட்ட தேவகுமாரன் உயிரியல் பாடத்தில் 4 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்தான். சொல்லுங்கள் "தோழர்களே" இவர்கள் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

உங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு ஆசிரியர் கிருஷ்னானந்தனை? தெருவோரம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியரின் மகன் அகிலனை? இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைக் கண்டித்து மறியல் போராட்டம் செய்ததற்காக சுட்டுக் கொல்லப் பட்ட மருத்துவபீட மாணவன் சத்தியேந்திராவை, ஏதோ ஒரு உத்வேகத்தில் புலிகள் இயக்கத்துக்குப் போய் விட்டு பயிற்சியின் கடுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 மாதத்திலேயே திரும்பி வந்து சாதாரண வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் மோகனை இந்திய ராணுவத்துக்குக் கூடத் தெரியாமல் விசாரணைக்கு என்று அழைத்துச்சென்றீர்கள். இரண்டு நாள் கழித்து அவனை சத்தகக் காம்பாலேயே உடல்முழுதும் குத்திக் கொலை செய்து கொண்டு வந்து தெருவில் போட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? எங்கேயோ கேட்ட துப்பாக்கிச் சத்தத்துக்கு அருகில் இருந்த கல்லூரிக்குள் சென்று வகுப்பறைக்குள் நீங்கள் சரமாரியாகச் சுட்டதில் பலியான மாணவர்களை, படுகாயமடைந்த மாணவர்களை, ஆசிரியரை,ஞாபகம் இருக்கிறதா?

இவர்களை ஞாபகப் படுத்த எனக்கு எந்தக் குறிப்பேடும் தேவைப் படவில்லை.ஏனெனில் நான் பள்ளி செல்லும் போது வழியில் தெருவில் கண்டு சென்ற பிணங்கள் இவர்கள்.பெண்களையும் சிறுவர்களையும் மயானத்துக்கு செல்ல அனுமதிக்காத சமூகத்தில் உங்கள் தயவாலும் இந்திய ராணுவத்தின் தயவாலும் பிணங்களையும் டயர் போட்டு எரிக்கப் பட்ட எலும்புக் கூடுகளையும் நாங்கள் தெருவில் பார்த்தே வளர்ந்தோம். உங்களால் பலவந்தமாகத் தேசிய இராணுவத்துக்கு என்று பிடித்துச் செல்லப் பட்ட என் ஒன்று விட்ட சகோதரன் இன்றுவரை உயிருடன் உள்ளான இல்லையா என்று எமக்குத் தெரியாது.
சொல்லுங்கள் தோழர்களே இவர்களில் யார் நீங்கள் சொன்னபடி கிட்டு அல்லது அவருடன் சேர்ந்து உங்கள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றார்கள்? துப்பாக்கிகளைக் கையில் வைத்திருந்த உங்கள் தலைவர்கள் யுகப் பிச்சை கேட்டும் புலிகள் கேட்கவில்லை என்று சொல்கிறீர்களே. நாங்கள் உங்களுக்கு எதிராகவோ இந்திய ராணுவத்துக்கு எதிராகவோ சிறு தடியைக் கூட எடுக்காமல் அல்லவே உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்டோம்?.

உங்கள் தலைவர்கள் பெயர் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இவர்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? கிடையாது. நாங்கள் பாவப் பட்ட பொதுஜனங்கள்.ஆனால் உங்களால் கொலைகாரன் என்று சொல்லப்பட்ட கிட்டுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டு மாமா என்றே அழைத்தோம்.அவருக்கு ஒரு கால் போனதற்கே மக்கள் எப்படித் துடி துடித்துப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள்.
நானும் என் அண்ணனும் வீட்டில் தனியே இருந்தசமயம் உள்ளே நுழைந்த இந்திய ராணுவத்தினர் எங்களை தனித் தனி மூலைகளில் மடக்கியபோது, எனக்கு நடக்கவிருந்த கொடுமையின் முழு வடிவம் கூடத் தெரியாத வயதில் இராணுவத்தால் பக்கத்து அறைக்கு நான் நெட்டித் தள்ளப் பட்ட போது நீங்களும் அருகில் நின்றீர்கள்.விகாரச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தீர்கள்.. என்னைப் பிடித்துத் தன்பின்னே நிறுத்தி தன் துப்பாக்கியை தன் சகாக்களை நோக்கி நீட்டி என்னைக் காக்க ஒரு தமிழகத்துத் தமிழனால் மட்டும்தான் முடிந்தது.

சொல்லுங்கள் "தோழர்களே" உங்கள் கையில் இருந்த ஆயுதங்கள் யாரைக் காக்க யாருக்கு எதிராக ஏந்தப் பட்டவை?ராஜிவ் காந்திக்கு நன்றி. குறைந்த எண்ணிக்கையிலேனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களையும் அமைதிப் படையில் அனுப்பி வைத்ததற்கு.அவர்கள் தான் தங்கள் சகாக்களிடமிருந்து மட்டுமல்ல உங்களிடமும் இருந்தும் தங்களால் முடிந்தவரையில் எங்களைக் காத்தார்கள்.


மேலே நான் சொன்னது அத்தனையும் யாழ் மண்ணில் மூன்று தெருக்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியில் அந்தக் காலப் பகுதியில் தாங்கள் உயர் ஜாதியினர் என்ற அகந்தையும் பரம்பரைக் கல்விமான்கள் என்கின்ற ஆணவமும் கொண்ட சுயநல சமூகமான எங்கள் முதல் தலைமுறைகளும் எங்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தாகக் கொண்டு போனால் போகிறது என்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் அளவுக்கு மட்டும் சமூக அக்கறை கொண்ட எங்கள் தலைமுறைகளும் வாழ்ந்த இடத்தில் – யாருடைய போராட்டத்துடனும் அதிகம் பட்டுக் கொள்ளாத மக்களுக்கு நீங்கள் நடத்திய கொடுமைகளின் சிறிய அத்தியாயம். இவர்களையும் ஆவேசம் உள்ளவர்களாக மாற்றியது உங்கள் நடவடிக்கைகள்.இவர்களுக்கே இப்படி என்றால் உண்மையாகவே முழுமனதுடன் போராட்டத்தை ஆதரித்த மக்களுக்கும், தமிழ் ஈழமண்ணின் எல்லா மாவட்டங்களிலும் நீங்கள் செய்ததைப் பட்டியல் போட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி ரத்தத்தில் தோய்ந்த இதிகாசங்கள் எழுதலாம்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் குணங்களோ கூடப் பிறந்த சகோதரர் , பெற்றோரோ தங்கள் மானத்தைக் காக்க முடியாது என்று உணர்ந்த பெண்களும், தாங்கள் சொல்லும் மந்திரங்களும் கற்பூரம் காட்டும் கடவுள்களும் தங்களைக் காக மாட்டாது என்று பூணூலைக் கழட்டி எறிந்து விட்டு இளைஞர்களும் என எல்லா சமூகத்தவரும் இரவுகளில் வீட்டை விட்டு வெளியேறி கானகம் நோக்கிச் சென்றது உங்கள் அட்டகாசங்களால் தான். தங்கள் மகள் வெளியேறியபின்னர் இனி அவள் மானத்துடன் இருப்பாள் என்ற நிம்மதியில் நீங்கள் வந்து விசாரிக்கும் போது அவள் யாரோடோ ஓடிப் போய் விட்டாள் என்று தலை நிமிர்ந்து பெற்றோர் சொன்ன அதிசயம் நிகழ்த்திக் காட்டியவர்கள் நீங்கள்.
எங்கள் தேசியத்தலைவர் எத்தனை பெரிய தீர்க்கதரிசி என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர் இடத்தில் நின்று பார்க்க எனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை என்றாலும் ஒரு கணம் நின்று பார்க்கிறேன்.நீங்கள் சொன்னபடி உங்களுடன் ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இது என்ன தமிழ் நாட்டு அரசியல் மேடையா கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக் கொள்ள? ஆயுதப் போராட்டம். படைபலத்தை மட்டுமே நம்பி இருப்பது. போராடத் துணிந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையே கொஞ்சம். அதையும் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வீர்கள்.

அதன் பிறகு போராட்டத்தின் ஆரம்பத்திலேயே காட்டிக் கொடுப்பவர், தலைமைக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் போராட்டத்தைக் கைவிடும் இயக்கம், எதோ கொஞ்ச அதிகாரம் வந்தால் போதும் என்று விலகும் இயக்கம், ஒன்றும் வேண்டாம் மது,மாது, பதவி சுகம் கிடைத்தால் போதும் என்று கைவிடும் இயக்கம் என்று பிரிந்து சென்றால், போராடச் சேர்ந்த இளைஞர்களும் தவறான பாதைக்கு போக நேர்ந்தால், ஒரே லட்சியத்துடன் போராடுபவன் என்ன செய்ய முடியும்? உங்களை அவர்கள் தங்கள் லட்சியப் பாதையிலிருந்து அகற்றிய படியால் தான் தமிழ் ஈழப் போராட்டம் மாபெரும் சக்தியாக எழுந்தது. இன்று உலக நாடுகள் அனைத்தும் , ஐ.நா. வரைக்கும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களாலும் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளாலும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலாலும் மட்டுமே தான்.அவர்கள் உங்களை அகற்றிய விதம் தப்பாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் லட்சியத்தின் தடைக் கற்கள், அகற்றப் பட வேண்டியவர்கள் என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்களே? தலைவர் தான் ஆள வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.போராட்ட இலக்கு தமிழ் ஈழம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே இதைச் செய்துள்ளார். ஈரோஸ் இயக்கத்தை புலிகள் அப்படியே உள்வாங்கிக் கொண்டதும் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் இதற்குச் சான்று.


.உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.


இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான். அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்கா�
�� போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா? இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?
முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்

நன்றி
மதியழகி

3 Comments:

velga thamizh said...

Anbu thamizh nal vullathiru ....
arvaththodu thangalin pathivai padiththen - ganaththa manathodu mudithen. ezhathu thamizh makkalin kanneerai thudaika 1000 prabakarangal varuvargla yendra nambikkaiyil naangal vullom. marikapatta vunmaigalai ulagam mun vaiyugal. ungal nizhalai vuruthunaiyai naangal irupom.
velga thamizh .

Anonymous said...

//நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம்.//
இந்த வரிகளை படித்ததும் அழுதுவிட்டேன். உங்கள் உள்ளங்களில் மட்டுமல்ல எங்கள் உள்ளங்களிலும் அவர் தான் நிறைந்திருக்கிறார். அவர் மட்டும் தான் நிறைந்திருப்பார் என்றென்றும். அன்புச் சகோதரி கண்மணி

Anonymous said...

Dear sister Madhiyalaki,

Your article has cleared much doubts about LTTE and the evergreen and uncomparable leader Mr.Prabakaran. Pls furnish more valuable informations ( Like Secrets of Rajiv's death, Muslim people's removal, Regarding Amaithipadai's misbehaviour .... )
to remove the wrong informations about LTTE and our great leader. Pls do it.

By
Kaiyalaka tamilan