Sunday, December 13, 2009

தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: யாருக்கும் வெட்கமில்லை
'தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படையால் சுடப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும்,அவர்களது படகுகள், வலைகள் போன்ற உடமைகள் சேதப்படுத்தப்படுவதும், அபகரிக்கப்படுவதும் வானிலைச் செய்திபோல் அன்றாடம் நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன. நமது எல்லையில் ஊடுருவி, தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைவிட அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படை வசம் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் அவலம் இது. இச் செய்திகளை அடிக்கடி பார்த்து நாமும் மரத்துப் போய்விட்டோம். மாநில அரசு இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும், மத்திய அரசு இலங்கை அரசிடம் புகார் செய்து விட்டதாக அறிக்கை வெளியிடுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இந்த அரசுகளுக்கும் இப்பிரச்னை மரத்துப்போய்விட்டது. ஆனால், தமிழக மீனவர்களின் துயரம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது.

இக்கொடுமைக்கு முடிவேயில்லையா? 1974-ல் அன்றைய மத்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்டது. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த மாநில தி.மு.க.வின் அரசு இந்தத் தாரைவார்ப்பிற்கு உடன்பட்டது. அன்றிலிருந்து மீனவர் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசிடம் தரப்பட்டாலும், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவது, இளைப்பாறுவது போன்ற நடவடிக்கைகளை கச்சத்தீவில் தொடரலாம் என்று அன்றைய மாநில அரசு கூறியது, பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிட்டது.

இலங்கைக்குக் கச்சத்தீவை தாரைவார்க்கவேண்டிய அவசியம் என்ன என்பது இன்றைக்கும் புரியவில்லை. அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்பதும் புரியவில்லை. அத்தீவை இத்தனை ஆண்டுகளாய் இலங்கை அரசு எந்த வகையிலும் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை. அத்தீவுக்கு அருகில் செல்லும் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவதைத் தவிர, அத்தீவின் உரிமை எவ்வகையிலும் இலங்கை அரசுக்குப் பயன்படவில்லை. பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீவின் உரிமையைக் கோரிப் பெற்றது? ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகவும் கச்சத்தீவு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இருநாட்டுத் தமிழர்களும் கச்சத்தீவில் கூடி, தங்களது கலாசார ஒருமைப்பாட்டு விழாவை நடத்திவந்தனர். அத்தீவின் அருகில் உள்ள கடற்பகுதியில் விலைமதிப்புள்ள மீன் இனங்கள் அதிகமாகக் கிடைத்து வந்தன. இவ்விரு காரணங்களும் இலங்கை அரசின் கண்களை உறுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், இதே காரணங்களுக்காக இத்தீவின் உரிமையை விட்டுத் தர முடியாது என்று கூற, அன்றைய தி.மு.க. அரசுக்குத் தைரியம் இல்லை. இத்துணைக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசுக்குத் தரப்படுவதைக் கடுமையாக எதிர்த்தன. ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்தது. ஆனால் இந்த எதிர்ப்புக்களை எல்லாம் மீறி, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் மத்திய அரசின் முடிவில் மாநில தி.மு.க. அரசு உறுதியாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள கடல் எல்லை என்பது ஒரு கற்பனையான கோடு. இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல நேரங்களில் இந்த எல்லைக்கோட்டை தாண்டியுள்ளன. நவீன தொழில்நுட்பம் கொண்ட இவ்விரு படைகளால் கூட சரியாகக் கணிக்கமுடியாத எல்லைக்கோட்டை அப்பாவி மீனவர்களால் எப்படிக் கணிக்கமுடியும்? ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடற்பகுதி வெறும் 12 கடல் மைல்கள் நீளத்தைக் கொண்டது. இதில் ஒரு கிலோமீட்டர் முன்னே சென்றால் கூட, தமிழக மீனவர்கள் தங்களை அறியாமலேயே இலங்கைக் கடற்பகுதிக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அறியாமல் செய்யும் பிழைக்கு, அவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

கடலில் சென்று மீன் பிடிப்பதே ஓர் ஆபத்தான தொழில். தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படை மூலம் இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. சுனாமியால் சூறையாடப்பட்ட இம்மக்களின் மிச்சமீதி வாழ்வாதாரமும் இலங்கைக் கடற்படையால் கொள்ளையடிக்கப்படுகிறது. முன்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்குத் தேவையான பொருள்களை கடத்தினார்கள்; அதனால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது என்று இலங்கை அரசு கூறிவந்தது. ஆனால் அவர்கள் கூற்றுப்படியே, விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், தமிழக மீனவர்கள் மீதான கொடுமைகள் தொடர்வது ஏன்? இதற்கு எந்தப் பதிலையும் இலங்கை அரசிடமிருந்து நமது அரசுகளால் பெறமுடியவில்லை.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறும்போதும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு புகார் அனுப்புகிறது. அப்புகார்களின் மீது இலங்கை அரசின் பதில் என்ன?, இந்நிகழ்வுகள் திரும்ப நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - என்பது குறித்து நமக்கு எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் இந்திய அரசு புகார் கொடுத்த ஒரு சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மீண்டும் தமிழக அரசால் கடிதம் எழுதப்படுகிறது. மீண்டும் மத்திய அரசால் புகார் கொடுக்கப்படுகிறது. மீண்டும் இலங்கைக் கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடிதம் எழுதுபவர்களுக்கும் வெட்கம் இல்லை. புகார் கொடுக்கும் மத்திய அரசுக்கும் வெட்கம் இல்லை. அவ்வப்போது புலம்பும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் வெட்கம் இல்லை. மொத்தத்தில் யாருக்கும் வெட்கம் இல்லை.

இந்திய வம்சாவழியினர் வாழும் பிஜி, மாலத்தீவு போன்ற நாடுகளில் அவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது, கொதித்தெழும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது மட்டும் அசட்டையாக இருப்பது ஏன்? தமிழக மீனவர்கள் இந்தியப் பிரஜைகள் இல்லையா? அமெரிக்க நாட்டினர் வேற்று நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது, அமெரிக்கா நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது. ஆனால் இந்தியப் பிரஜைகளாகிய தமிழக மீனவர்கள் பல்லாண்டுகளாய் இலங்கைக் கடற்படையிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது, நமது மத்திய அரசு ஒப்புக்குப் புகார் தருவதோடு நிறுத்திக்கொள்வது ஏன்? இலங்கையின் கேந்திர தொழில்களில் கிட்டத்தட்ட 75% முதலீட்டை இந்திய பெருமுதலாளிகள் வைத்திருப்பது ஒரு காரணமா? இந்திய பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்க, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காவுகொடுக்கத் துணிந்துவிட்டதா? அதற்கு மாநில அரசு ஒத்து ஊதுகிறதா? எதற்கும் விடையில்லை.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவது என்று இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு முன்பு கூறப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்? இந்தியக் கடல் எல்லையை மீறி இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை பிடிக்கும் இலங்கைக் கடற்படை அவர்கள் மீதான நடவடிக்கையை எடுக்க, அவர்களை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைப்பதுதானே சரியாக இருக்கும். அவர்கள் எல்லையை மீறி எவ்வளவு தூரம் இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்தார்கள் என்று ஒவ்வோர் அத்துமீறல் குறித்தும் இலங்கை அரசு மத்திய அரசிடம் புகார் கொடுத்து வந்துள்ளதா? நம் கடற்பகுதியைத் தாண்டாது எச்சரிக்கையுடன் செயல்பட தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பயிற்சி வகுப்புகள் நடத்தியதா? அவ்வாறு அவர்கள் கடல் எல்லையை மீறும்போது இந்தியக் கடற்படையும், கோஸ்ட் கார்டும் அவர்களை எச்சரிக்க முடியாதா? கூட்டு ரோந்து மூலம் இரு நாட்டு கடற்படைகளும் இப்பிரச்னையைத் தீர்க்கமுடியாதா? மேற்படி எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு இது நாள்வரை மேற்கொள்ளாதது ஏன்? தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு சிரத்தை இல்லையா?

சமீபத்தில் 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடித்து செல்லப்பட்டபோது, ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் கொதித்தெழுந்தனர். இதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்காக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த அறிவித்தவுடன், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர் பிரச்னை குறித்து, இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசும்போது, தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் பேசியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 'இப்பிரச்னை குறித்து இலங்கை அரசிடம் நான் பேசுகிறேன்'- என்ற வாக்குறுதியை பிரதமரிடம் இருந்து பெறுவதில் எந்தப் பயனும் இல்லை. இது போன்ற வாக்குறுதிகள் ஏராளமாக ஏற்கெனவே தரப்பட்டுள்ளன. அவற்றால் பைசா பயன்இல்லை என்பது வரலாறு. இப்பிரச்னை, ஒட்டுமொத்தமாகத் தீர, வெறும் வாக்குறுதிகள் தேவையில்லை. மீண்டும் ஒருமுறை இக்கொடுமை நடக்காமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கைதான் தற்போதைய தேவை. மத்திய அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு தொடர்ந்து இக்கொடுமைகளைச் செய்து வருகிறது. தன்னை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற ஆணவப் போக்கை அது கடைப்பிடிக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் மத்திய அரசில் தி.மு.க. தொடர்வதில் அர்த்தமில்லை. 'பேராசை பிடித்த மீனவர்கள் சிலர் எல்லையை மீறி மீன் பிடிக்கச் செல்வதுதான் இப்பிரச்னைக்குக் காரணம்' என்ற பொருள்படும்படி, தமிழக முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். அப்படியே போனாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இலங்கை அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அப்படி என்றால், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் வந்தது இல்லையா? அப்படி வந்தவர்கள் மீது இந்தியக் கடற்படை என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களைப் பிடித்து இலங்கை அரசிடம்தானே ஒப்படைத்துள்ளது. இத்தகைய பொறுப்பு இலங்கைக் கடற்படைக்கு இல்லையா? தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி மீண்டும் ஒருமுறை வரக் கூடாது. இதுதான் இந்த விஷயத்தில் தமிழக மக்களின் ஒரே கோரிக்கை.

நிரந்தர தீர்வு என்ன?
"தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசினால் மட்டும் பாதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகளும்தான் காரணம். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மண்டபம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கடலோரப் பாதுகாப்புப்படையினரிடம் பதற்றத்துடன் சொன்னோம். ஆனால் பிரயோஜனமில்லை. அவர்கள் மத்திய அரசு செய்து வைத்த சிலைகளாகவே மாறி விட்டார்கள். மீனவர்களுக்கு எல்லைகள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சரியான தீர்வாக இருக்காது. இரு நாட்டு மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்பதே நிரந்தரத்தீர்வாக இருக்கும். பாரம்பரியமாக இரு நாட்டவர்களும் எங்கெங்கு மீன் பிடித்தார்களோ, அங்கேதான் இப்போதும் பிடிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? முன்பெல்லாம் முத்தரையர்களும், மீன்பரவர்களும் மட்டுமே மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் இன்றோ தேவர், செட்டியார், நாடார், பிராமணர்கள்கூட மீன்பிடித்தொழில் செய்து பிழைக்கும் காலமாக இருக்கிறது. உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட பதினெட்டு தமிழக மீனவர்களை அரை நிர்வாணத்துடன் நிற்க வைத்து கொடுமைப்படுத்தும் அராஜகமும் நடப்பதாக வேதனையான தகவல்கள் வெளியாகின்றன!" என்று கொதிப்பு அடங்காமல் கூறினார் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் கணபதி தேவர். -குமரகுரு


'

கலை
நன்றி தமிழக அரசியல் ...

0 Comments: