Friday, January 16, 2009

உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்:

அன்புடையீர்,

தாயகத்தில் இனவாதிகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னியில் இன்னுமோர் சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தெருநாய்களாக தவிக்கவிடப்பட்டு உள்ளார்கள். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வியாதிக்காரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற துணிவில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு தனது சகல வளங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை உச்சரீதியாக பிரயோகித்து தமிழர் தாயகத்தில் இனஅழிப்பை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று இங்கு செய்தியில் காட்டினார்கள்; ஓர் தாய் வன்னியில் கதறி அழுது தனது கஸ்டங்களை கூறுவதை; ஒவ்வொரு இடம்பெயர்வின்போதும் ஒவ்வொரு பொருட்களாக, சொத்துக்களாக இழந்து இப்போது தன்னிடம் அடகுவைக்க எஞ்சி இருப்பது ஒருசோடி காதணிகளே என்று அவர்கூறி இருந்தார். ஆனாலும்.. இந்த இக்கட்டான நிலமையிலும் அவர் இறுதியாக கூறிய வார்த்தை உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. "ஆக்கிரமிப்பு இராணுவத்தை அவர்கள் வந்தவழியாகவே நாங்கள் பழைய இடத்துக்கு துரத்தி அடித்து கலைப்போம்!" என்று அந்தத்தாய் உறுதியுடன் கூறி இருந்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு தாயக விடுதலைப் போராட்டத்தில் தற்போது இல்லாத நம்பிக்கை, உறுதி தாயகத்தில் வாழ்கின்ற மக்களிடம் காணப்படுவதற்கு காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோருக்கு தாயகத்தில் நடைபெறும் விடயங்கள் வெறும் அன்றாடச் செய்திகளே. இதற்கு நேர் எதிர்மாறாக, தாயகத்தில் வாழும் மக்களிற்கு இது வாழ்வா, சாவா என்கின்ற உயிர்வாழ்விற்கான போராட்டம்.

எப்படியும் வாழலாம் என்று விரும்பிய பல இலட்சம் தமிழர்கள் தென்னிலங்கைக்கும், தென்னிந்தியாவிற்கும், உலகில் வெவ்வேறு நாடுகளிற்கும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமது இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்தார்கள். எனினும், இப்படித்தான் வாழவேண்டும் என்று விரும்பிய தன்மானம் உள்ள சில இலட்சம் தமிழர்கள் தாயகத்தில் வாழ்வா, சாவா எனப்படுகின்ற விடுதலைப் போராட்டத்தில் தம்மை நேரடிப் பங்காளிகளாக இணைத்துக்கொண்டார்கள்.

விடுதலைப் போராட்டங்கள் என்பவை எப்போதும் ஓர் இனம் அல்லது பகுதி நசுக்கப்படும்போதே எழுகின்றன. ஒவ்வொரு புரட்சியின் பின்னாலும் ஓர் நியாயபூர்வமான காரணம் இருக்கின்றது. சமமான வசதிகள், வாய்ப்புக்கள், சுதந்திரமான வாழ்வு என்பன கிடைக்கும் இடங்களில், சந்தர்ப்பங்களில் எப்போதும் அதிக அளவில் ஒற்றுமையே நிலவும். அங்கு பிணக்குகள் தோன்றினாலும் அவை குறுகிய காலத்தில் மறைந்துவிடும். இந்தவகையில், தாயகத்தில் விடுதலைப்போராட்டத்தை சிறீ லங்கா இனவாத அரசே ஆரம்பித்து வைத்தது.

"நோய்நாடி நோய் முதல்நாடி
வாய்நாடி வாய்ப்பச் செயல்!"

என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஓர் பிரச்சனை ஏற்பட்டால் அதன் மூல காரணத்தை கண்டு அறிந்து, அதன்பின்னர் அப்பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பிரச்சனைக்கான மூலகாரணம் கண்டு அறியப்படாதவரை பிரச்சனை தீரப்போவதில்லை. சிறீ லங்கா இனவாத அரசு காலங்காலமாக ஒரே தவறை திரும்பவும், திரும்பவும் செய்துகொண்டு இருக்கின்றது. இன்றும் தாயகத்தில் இதுவே நடைபெறுகின்றது.

பல்வேறுவிதமான அடக்குமுறைகளை பிரயோகிப்பதன் மூலம் தமிழினத்தை அடிபணியவைத்து தமக்குகீழ் அடிமைகளாக வாழவைக்க சிங்கள பேரினவாதிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றார்கள். பேரினவாதிகளின் இந்த அடக்குமுறை இன்று மிகப்பாரிய இன அழிப்பாக தாயகத்தில் விசுவரூபம் எடுத்து இருக்கின்றது. உலக வல்லரசுகளினதும், அவற்றின் முகவர்களினதும் ஆசியுடன் 'பயங்கரவாத ஒழிப்பு' என்கின்ற முகத்திரையுடன் சிறீ லங்கா இனவாத அரசு 'தமிழின அழிப்பில்' இறங்கி இருக்கின்றது.

'நேற்றைய பயங்கரவாதி நாளைய சுதந்திர தியாகி' என்று ஓர் பொன்மொழி இருக்கின்றது. நெல்சன் மண்டேலோ தொடக்கம் மகாத்மா காந்திவரை அனைத்து சுதந்திர தியாகிகளுமே வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவ்வாறே தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் மீதும் நுனிப்புல் மேயும் அரசியல் ஞானிகளினால் - இந்த அஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுகளினால் பயங்கர வாத இலச்சினை பொறிக்கப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் அதர்மம் மேலோங்கும். ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும் என்று கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் சொல்லி இருக்கின்றார். அளவுக்கு மிஞ்சிய வலியினை அனுபவித்த பின்னரே ஓர் தாய் குழந்தையை பிரசவிக்கின்றாள். தாயகத்தில் தற்போது மக்கள்படுகின்ற வேதனைகள் எல்லாம் ஓர் பிரசவத்திற்கான அறிகுறியே தவிர தாய்நாட்டின் மரணத்துக்கான எச்சரிக்கை மணி அல்ல. ஒவ்வொரு தடவையும் சிறீ லங்கா பேரினவாத அரசு ஏற்படுத்துகின்ற தடைக்கற்கள் தாயக மக்களுக்கு படிக்கற்களாகவே அமைந்துவிடுகின்றன.

ஓர் உதாரணத்தை கூறினால், 1983ம் ஆண்டு இனக்கலவரம், அதன்பின்ரான இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாக பல இலட்சம் தமிழ்மக்கள் அகதிகளாக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தனர். சிங்கள இனவாதிகளும் சிறீ லங்கா நாட்டைவிட்டு தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் ஓடித்தப்புவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இப்போது இடம்பெயர்ந்து உலகின் ஒவ்வொரு மூளையிலும் ஒதுங்கியுள்ள இந்த அகதிமக்களின் வளங்கள் தாயகபோராட்டத்திற்கு மிகுந்த பலத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீ லங்கா இனவாத அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக அவர்கள் தமிழ்மக்களிற்கு வைத்த பொறிக்கிடங்கினுள் சிங்கள இனவாதிகளே மீளமுடியாதவாறு அகப்பட்டுக்கொண்டார்கள். அதாவது ஒவ்வொரு தீமைக்குப்பின்னாலும் ஓர் நன்மை இருக்கின்றது. குறுகியகால நோக்கில் ஓர் விடயம் வேதனையை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் அதேவிடயம் பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்.

தாயகத்தில் வாழ்வியல் ஆதாரம்தேடி நியாயபூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டிய தார்மீக பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ்மக்களிற்கும் உள்ளது. எமது நாளாந்த வாழ்வை எடுத்துக்கொண்டால் சில கருமங்களை ஆற்ற ஒருவர் மட்டும் போதும். சில கருமங்களை ஆற்ற இருவர் போதும். சில கருமங்களை ஆற்ற பலர் வேண்டும். நீங்கள் முத்துக்குளிப்பதுபற்றி அறிந்து இருப்பீர்கள். ஒருவர் தனியாகச் சென்று முத்துக்குளிக்க முடியாது. ஆகக்குறைந்தது கடலின் அடியினுள் ஒருவரும், கடலின் மேற்பரப்பில் இன்னொருவரும் பாதுகாப்பான முத்துக்குளித்தலுக்கு தேவை. தாயக விடுதலைப் போராட்டமும் இவ்வாறானதே! பல இலட்சம் தமிழ் மக்கள் கைகொடுத்து இழுக்கவேண்டிய தேர் இது!

ஓர் கடிகாரத்தில் பெரியமுள் சுற்றினால்தான் சிறியமுள் சுற்றும். பெரிய முள் தனது நகர்வை நிறுத்திவிட்டால் சிறிய முள்மூலம் தன்னிச்சையாக அசையமுடியாது. தாயக மக்கள் சிறியமுள் என்றால் நாங்கள் பெரியமுள்...! புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் தடுமாற்றம் இல்லாத தொடர்ச்சியான வேலைத்திட்டங்களே தாயகத்தில் உள்ள மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டங்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்யும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வினைத்திறனுடன் பணியாற்றவேண்டிய ஓர் முக்கியதேவை எப்போதும் இருந்துவருகின்றது. இங்குள்ள தமிழ்மக்கள் தமது தாயக உறவுகளுக்காய் சர்வதேசத்தின்முன் ஓங்கிக்குரல் கொடுக்கும்போது சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள்கூட தமது இன அழிப்பு இயந்திரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றார்கள் அல்லது அதன் வேகத்தை சற்று குறைக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் வாய்மூடி மெளனிகளாக - மெளனசாமிகளாக - வாயினுள் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு - உம்மாண்டிகளாக இருக்கும்போது சர்வதேசம் எமது இந்த மெளனத்தை சிறீ லங்கா தீவிரவாத அரசு செய்கின்ற தாயக மக்களின் இன அழிப்பிற்கு நாங்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எடுத்துக்கொள்கின்றது.

எனவே, சிறீ லங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தினமும் நடாத்துகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களிற்கு உலகெங்கனும் வாழும் தமிழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு விதமான போராட்டங்களை செய்யவேண்டிய தேவைகள் இருக்கின்றன. 'வாழ்வா அல்லது சாவா' என்ற வாழ்வியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயக மக்கள் தினம்தினம் படும் வேதனைகள் கண்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற பல்லாயிரம் தமிழர்கள் இரத்தக்கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்.. இவர்களால் சரியான முறையில் தமது உள்ளக் குமுறல்களை, எதிர்ப்புக்களை சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படுத்த முடியவில்லை.

இதற்கான காரணங்கள் எவை? வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதா? இல்லையே..! எம்மவர்களிடம் வளங்கள் தாராளமாகவே இருக்கின்றன. அப்படியாயின் பயம் காரணமா? இல்லையே..! பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் இவற்றை நம்மவர்கள் தாராளமாகவே பயன்படுத்தி வருகின்றார்கள். அப்படியாயின் சரியான தலமை ஒன்று இல்லாது இருப்பது காரணமா? அப்படியும் இருக்கமுடியாது. ஏனெனில்... சிறந்த தலமைகளின் வழிகாட்டல்களுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை பலநூறு அமைப்புக்களும், ஊடகங்களும் செய்து வருகின்றன. அப்படியாயின் இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற மக்கள் தமது உணர்வுகளை பொத்திப்பொத்தி வைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடியது என்ன? உங்களுக்கு விடை தெரிகின்றதா?

விடை இலகுவானது. எம்மவர்களிடையே காணப்படும் ஒற்றுமை இன்மையே - எமக்குள் நாம் பிணக்குப்பட்டுக்கொண்டு இருப்பதே வினைத்திறனான முறையில் எம்மவர்கள் செயல் ஆற்றுவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது.

இது இங்கு கட்டுரை ஆசிரியனாகிய நான் உருவாக்கிய எதேச்சையான ஓர் விடை அல்ல. பலருடன் தாயகமக்கள் தற்போதுபடும் அவலங்கள் பற்றி பேசும்போது அவர்கள் இதைத்தான் சொல்லி கவலைப்பட்டுக் கொள்கின்றார்கள். 'நம்மவர்கள் - நம்மவர் அமைப்புக்கள், சங்கங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொதுவான சில விசயங்களிலாவது ஒற்றுமையாக எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து காரியம் ஆற்ற மாட்டார்களா? அப்படியான ஓர் பொற்காலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஏற்படாதா?' என்கின்ற ஆதங்கத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

கூட்டாளிகள் பிரிந்தால் எதிரிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள். ஒற்றுமையின் பலம் பற்றி பலநூறு கதைகளை நாங்கள் எல்லோரும் சிறுவயதில் வாசித்து, கேட்டு, அறிந்து இருக்கின்றோம். விதம், விதமாக... வகை, வகையான ஒற்றுமையின் பலத்தை வலியுறுத்தி எத்தனை எத்தனை கதைகளை எங்களுக்கு கூறினார்கள்...! ஆனால்.. எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் தான்...!

எம்மவர் ஒருவர் அல்லது எம்மவர் அமைப்பு ஒன்று ஆக்கபூர்வமான ஓர் செயற்திட்டத்தை ஆரம்பித்தால் அவருடன் அல்லது அந்த அமைப்புடன் கருத்து முரண்பாடு உள்ளவர் அல்லது ஏற்கனவே பிணக்குப்பட்டவர் குறிப்பிட்ட அந்த ஆக்கபூர்வமான செயற்திட்டத்தை நேரடியாக எதிர்ப்பார் அல்லது மறைமுகமாக குழப்புவார் அல்லது ஆதரவு கொடுக்காமல் விலகி இருப்பார். இவ்வாறு இவர் ஆக்கபூர்வமான ஓர் செயலுக்கு ஆதரவு கொடுக்காமல் இருக்கும்போது இவர்சார்ந்த சமூகவட்டம் - இவர் தலமையின் பின்னால் செல்கின்ற மக்கள் கூட்டமும் குறிப்பிட்ட ஆக்கபூர்வமான செயற்திட்டத்துக்கு ஆதரவு கொடுக்காமல் விலகிச் செல்கின்றார்கள்.

இப்படியான நிலமை பலநூறு அமைப்புக் களினிடையேயும், பலநூறு தனிநபர் களினிடையேயும் விளங்கும்போது ஆயிரக்கணக்கில் ஒட்டுமொத்தமாக சிறிய சிறிய விசயங்களில் தமிழர் சமூக வட்டங்களிடையே பிரிவினைகள் தோன்றுகின்றன. மனித வலுக்கள் வீண்விரயம் செய்யப்படுகின்றன. வினைத்திறனான முறையில் ஓர் செயற்திட்டத்தை நம்மவர்கள் செய்வதற்கு இப்படியான பிரச்சனை மிகுந்த சவாலாக இருக்கின்றது.

கடைசியில் நடைபெறுவது என்ன? கடிகாரத்தின் பெரிய முள் தடுமாற்றம் கொண்டு நிலைமாறுகின்றது. தனது வேகத்தை குறைக்கின்றது. இது கடிகாரத்தின் சிறிய முள்ளின் அசைவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இறுதியில்....? தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் இரும்புக்கரங்களினால் நசித்து நெரிக்கப்படுகின்றது. திட்டமிட்ட இனஅழிப்பு வெற்றிபெறுகின்றது. சிறீ லங்கா இனவாத அரசிற்கு தேவையானது இதுவேதான். தமிழர்களின் ஒற்றுமையே தமது இருப்புக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்பதை சிறீ லங்கா இனவாத அரசு மாத்திரம் அல்ல, தமிழினத்தை உலக அளவில் ஒடுக்க நினைக்கின்ற பல்வேறு புல்லுருவிகளும் மிகநன்றாகவே அறிந்து வைத்து இருக்கின்றார்கள். அப்படியாயின்...

நாம் செய்யக்கூடியது என்ன? எம்மவர்களிடையே ஒற்றுமையை கட்டி எழுப்புவது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை குழப்புபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை சிதைப்பவர்கள் பற்றி எச்சரிக்கை கொள்வது எப்படி? உலகத் தமிழர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணக்கூடிய வகையில்' சம்மேளனங்கள் ஏதாவது வைத்து இருக்கின்றார்களா? உலகில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணி' ஏதாவது சம்மேளனங்கள் வைத்து இருக்கின்றார்களா?

ஏற்கனவே இருக்கும் சம்மேளனங்கள் வினைத்திறனானவையா? வினைத்திறன் உடையவையாக இருந்தால் ஏன் தமிழரிடையே ஒற்றுமையீனம் நிலவுகின்றது? நம்மவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க சிறு சிறு அமைப்புக்கள் பல பலநூறுசேர்ந்து உருவாகும் சம்மேளனங்கள் எப்படியான வேலைத்திட்டங்களை செய்ய முடியும்? சிறிய சிறிய அமைப்புக்களின் தலைவர்கள், தனிநபர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க தயாராக இருக்கின்றார்களா? நிரந்தரமான கைகோர்ப்புக்களாக இல்லாவிட்டாலும் தற்காலிக கைகோர்ப்புக்களுக்காவது நம்மவர்கள் தயாராக இருக்கின்றார்களா?

இவை எல்லாம் நம்மவரிடையே நடக்கக்கூடிய விசயமா? அல்லது ஓர் பகல் கனவா? இது வெறும் பகல் கனவாக இருந்தால் ஒன்றை மட்டுமே நிச்சயம் எதிர்வு கூறமுடியும். நடைமுறையில் நடக்கவேண்டிய இப்படியான விடயங்கள் தமிழருக்கு கனவாகினால் அது சிறீ லங்காவில் சிங்கள பேரினவாத சாம்ராச்சியத்தின் வெற்றிக்கும், தமிழர் தாயகத்தில் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிப்புக்குமே கட்டியம் கூறும்...!

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்த மடலின் எழுத்துருவுக்கு மாத்திரமே நான் சொந்தக்காரன். ஆனால்.. இங்கு கூறப்பட்டுள்ள, வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், சிந்தனைகள், உள்ளக் குமுறல்கள், மற்றும் உணர்வுகளின் சொந்தக்காரர்கள் உங்களைச்சுற்றி வியாபித்துள்ள சாதாரண தமிழ் மக்களே! எனவே நீங்கள் ஓர் ஊடகவியலாளர்களாகவோ, ஊடகங்களுடன் தொடர்புபட்டவர்களாகவோ அல்லாதுவிடின் ஊர்ச்சங்கங்கள், தமிழர் பொதுநல அமைப்புக்கள் சார்ந்தவர்களாகவோ இருந்தால் வாதங்களை தவிர்த்து இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளிற்கான உங்கள் பதில்களை விரைவில் நடைமுறை செயற்பாடுகளாக உலகெங்கும் வாழும் சாதாரண தமிழ் மக்களிடம் காண்பித்துவிடுங்கள்.

நன்றி : http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230

4 Comments:

Anonymous said...

yarl.com...haaaaaaaaaaaaaaaa??????????????????????.

one web divide tamil people mohan needs more money from tro.


haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Anonymous said...

neny is poerfull so we have to get together against our sinhala enemy.thats what we have to do.but like the web yarl.com trying to compete with lankasri.com,puthinam.com,sangathi.com, but mohan cant,,,,,so only way is talking about induviduals.....first yarl.com should learn something pls dond sell our natinalim for your business

anpudan
tamilan

Anonymous said...

ஆம்!பட்ங்களையும்,இங்கிலாந்துப் பிரதமர்,மனித நேய அமைப்பாளர்களின் செய்திகளை ஆங்காங்கே தொடர்ந்து அத்துனை தொடர்புள்ளவர்களுக்கு அவரவர் மொழிகளிலே அனுப்புவோம்.
யூதர்களைப் பயன் படுத்துவோம்.
யூதர்களுக்குத் தஞ்சமளித்தவன் தமிழ்ச் சேர மன்னன்.இன்றும் அவர்கள் கொச்சியிலே வாழ்கின்றனர்.
அனைத்து மதத் தலைவர்கள்,இணையத் தொடர்புகளுக்குத் தொடர்ந்து அனுப்புவோம்.
அங்கே போராளிகள்,இங்கே செய்திப் போர்.

Anonymous said...

காலத்தின் தேவை. ஆனால் பலரால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை????