Monday, August 31, 2009

‘தினமலரும்’ - ‘விடுதலை’யும் ஓரணியில்!

கருணா, வீரமணி, தினமலர் எந்த வித்தியாசமுமில்லை. அனைவரும் ஒன்றே. ஒருவன் நேராகவே தமிழனை எதிர்க்கிறான், மற்றொருவன் மறைமுகமாக தமிழின எதிர்ப்பு சக்கிதிகளுக்கு துணை போகிறான். எதிரியினை விட துரோகியிடம் கவனமாக இருக்க வேண்டும்.

‘தினமணி, தினமலர், தீக்கதிர் வெளியேற்றப்பட்டவர்கள் பி.ஜே.பி. எல்லாம் ஓரணியில்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’யில் ‘மின்சாரம்’ கட்டுரை ஒன்று (3.8.2009) வெளிவந்திருக்கிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை முன் வைத்து ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு வெளியிட்ட கடிதம் ஒன்றுக்கு பதிலளிப்பதாகக் கருதி மின்சாரம் இவ்வாறு எழுதியுள்ளார்.

“நாளையே கூட, மீண்டும் பிள்ளையார் பொம்மைகளை வீதிக்கு வந்து உடைக்க நாங்கள் தயார்! ‘தினமலர்’ அதை முதல் பக்கத்தில் வெளியிடத் தயாரா?

இராமன் படத்தை செருப்பால் அடிக்க எங்கள் இளைஞர்கள் தயார்! தயார்! அதை அப்படியே ‘தினமலர்’ செய்தி வெளியிட்டு மகிழுமா?

சீதையை விபச்சாரி என்று சிறப்புக் கூட்டம் போட்டு பேசத் தயார்! அந்தப் பேச்சை அப்படியே திரிக்காமல், குறுக்காமல் தலைப்புச் செய்தியாக வெளியிட முன் வருமா?”

இப்படி எல்லாம் பார்ப்பன ‘தினமலரு’க்கு, ‘விடுதலை’யில் மின்சாரம் எழுதிய (3.8.2009) கட்டுரை ஒன்று சவால் விடுகிறது!

மேலே பட்டியலிட்ட போராட்டங்களை யெல்லாம் தி.க. நடத்தப் போவதும் இல்லை. அதனால் ‘பார்ப்பன மலர்’ வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனால், பார்ப்பன ‘தினமலர்’ நோக்கி ‘கொள்கைப் போராளிகளாக’ காகிதத்துக்குள் களம் அமைக்கப் புறப்பட்டிருக்கும் ‘மின்சாரங்களை’ கேட்கிறோம்!

திருவரங்கத்தில் தி.க.வினரே அமைத்த பெரியார் சிலை தகர்க்கப்பட்டபோது, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பார்ப்பன நிறுவனங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி, அதற்காக தி.மு.க. ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்களே, அப்போது பார்ப்பன ‘தின மலர்’, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பாய்ந்து பிராண்டியதே! அப்போது ‘விடுதலை’, பெரியார் திராவிடர் கழகத்தின் செய்தியை முதல் பக்கத்தில் கூட வேண்டாம் - கடைசி பக்கத்திலாவது போட்டதா?

பார்ப்பனர் பூணூலை அறுத்ததே ‘தேச விரோதம்’ என்று தி.மு.க. ஆட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தை பெரியார் தி.க. தோழர்கள் மீது ஏவியபோது, ‘தினமலர்’ பார்ப்பன ஏடுகள், அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தூபம் போட்டனவே, ‘விடுதலை’ தி.மு.க.வையோ, ‘தினமலரை’யோ கண்டித்ததா?

மாறாக, பெரியார் திராவிடர் கழகத்தைத் தானே தி.க. தலைமை கண்டித்தது?

ஈழத் தமிழர் படுகொலைக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கிய இந்தியப் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக கோவை நீலாம்பூரில் ராணுவ வாகனங்களுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியபோது, ‘வன்முறையாளர்கள் தேச விரோதிகள்’ என்று, கழகத்தினர் மீது பார்ப்பன ‘தினமலரும்’ பாய்ந்தது. ‘சூத்திர’ ‘விடுதலை’யும், பார்ப்பன ‘தினமலரோடு’ சேர்ந்து கொண்டு கழகத்தினரை வன்முறையாளராகவே சித்தரித்து இந்த பார்ப்பன எதிர்ப்பு போராட்ட சிங்கங்கள் செய்தி வெளியிட்டதே, மறந்து விட்டதா?

பெரியார் கொள்கைகளுக்காக களத்தில் இறங்கி போராடும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை எதிர்ப்பதில் பார்ப்பன ‘தினமல’ரோடு கைகோர்த்த ‘விடுதலை’ குழுமம் தான், இப்போது ஏதோ பார்ப்பன எதிர்ப்பில் ‘புடம் போட்ட வீரர்களாக’ பேனா பிடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள்! வெட்கக் கேடு!

நன்றி கீற்று

0 Comments: