தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்...
நன்றி அதிர்வுஇறுதிப்போரில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து தமிழீழ வரலாற்றை தாங்கி வந்து முற்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் தமிழீழ வரலாற்றின் சுவடுகள். போற்றப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தமிழீழ போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஆதரவை அளித்து இன்று பல சித்திரவதைகளிற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எமது சுவடுகளை போராட்டத்தின் வலிமையை முகாமிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனிலும் நாம் பார்க்க முடியும். அந்த மக்கள் தாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே பார்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளிலிருந்து வரும் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரையும் அந்த மக்களை பார்க்க சிறிலங்கா அரசங்கம் அனுமதிப்பது ஏன்?
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் அந்த மக்களை வைத்து தாம் பிழைப்பு நடத்தி பணம் சுரண்டுவதற்கே. ஒருவரால் கொடுக்கும் பணம் மொத்தமாக அந்த மக்களை சென்றடைவது இல்லை. மேலிடத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து சுரண்டி சுரண்டி அந்த மக்களுக்கு செல்வது பெயரளவுக்கு கொடுத்தோம் என்று சொல்கின்றளவுக்கே. உதாரணமாக சமீபக காலமாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. அதாவது மக்கள் முகாமிற்குள் வந்ததால் சம்பாதித்து இலட்சாதிபதியாகிய அமைச்சர்கள் பற்றி நாம் அறிவோம்.
இதைவிட கொடுமை என்னவென்றால், சிறிலங்காவின் அனுமதியில்லாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை பார்க்க செல்லவில்லை. அது ஒரு புறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற குழு அந்த முகாமுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுலாவில் சென்றவர்கள் சிலர் தமிழ்நாட்டில் செய்த ஊழல்கள் போதாதென்று தமிழீழத்திலும் செய்ய சென்றுவிட்டார்களோ! என்று ஐயம் ஏற்பட்டு தெளிவடைந்துள்ளேன்.
ஏன் அந்த ஐயம் என கேட்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன் தமிழ் நாட்டு நாடாளுமன்றக்குழு சிறிலங்காவுக்கு பயணித்து திரும்பியதும் என் செவிகளில் விழுந்த ஒரு செய்தி "கவிஞர் கனிமொழி 250 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார்" என்பதே. உள்ளமெல்லாம் கொதித்தது காரணம் அந்த நிலம் தமிழீழ நிலப்பரப்பிலாக இருந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மாதிரியான ஒரு ஒழுக்கமற்ற அரசியல் தமிழீழத்திலும் வந்துவிடுமோ என்று. ஏனெனில், தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி பொதுமகனின் நிலத்தை அபகரிப்பதும் அதனை அந்த பொதுமகன் போய்கேட்டால் அடியாட்களுடன் விரட்டுவதும் தமிழகத்தின் வழக்கமான ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. அதே மாதிரி எமது தமிழீழத்திலும் வந்துவிடுமோ! என்று ஏங்கினேன்.
நேற்று தான் தெரிந்தது அது எமது நிலப்பரப்பில் இல்லை என்பது. அதையிட்டு சந்தோசமடைந்தாலும் அந்த குழுவில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவாளரான தொல்.திருமாவளவன் அவர்களின் செயற்பாடும் தமிழர்களின் மனம் நினைத்ததைப்போல இல்லை என்பதே உண்மை. தொல்.திருமாவளவனை கண்டதும் எம் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகளில் படித்தேன். எம் மக்கள் இலகுவில் யாரிடமும் கண்ணீர் விடமாட்டார்கள் மண்டியிடமாட்டார்கள். அந்த மக்கள் கண்ணீர் விட்டு எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர்களிடம் கூறியதாக செய்திகள் படித்ததுமே என் உரோமங்கள் சிலிருத்தன. கண்கள் கனத்தன. எப்படியெல்லாம் வாழ்ந்த எம்மினம் எம்மக்கள் இப்படி துன்பப்பட்டு போனார்களே என.
சரி அவர்கள் ஏன் தொல்.திருமாவளவனை கேட்டார்கள். தமிழீழத்திற்கு ஆதரவானவர் ஒரு தமிழன் என்ற ஒரு உரிமை அவர்களின் மனதில் இருந்ததால் தானே!, அப்படியான அந்த மக்களிடம் நீங்கள் ஆறுதலாக பேசாதது ஏன்? அவர்களின் மனநிலையை அறிய முற்படாதது ஏன்? சரி அதைத்தான் விடுவோம் சர்வதேச குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று யாரை நீங்கள் கூறினீர்களோ அந்த குற்றவாளியின் விருந்தை உண்டு வந்த உங்களை தமிழீழ மக்களாகிய நாம் எந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது?
வதை முகாம் சென்று வந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர் முகாம்கள் சர்வதேச மட்டத்தில் தரமாகவுள்ளதாக அறிக்கை விட்டிருக்கிறார். சர்வதேசமட்டம் என்றால் என்ன? என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா அவருக்கு! அவர் சர்வதேச மட்டம் என்று நினைத்தது தமிழ்நாட்டை என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதிமுகாம்களைவிட சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதைமுகாம்கள் சிறந்ததாக இருப்பதால் அவர்கள் சர்வதேசமட்டத்தில் சிறந்தாக இருப்பதாக கருதுகிறார்கள். தமது அரசியல் ஆசனத்துக்காக எமது மக்களை இந்தியரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்நாட்டு அரசாங்கமும் சிங்கள அரசாங்கமும் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றமை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதைமுகாம் பயணம் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்....
Tuesday, October 27, 2009
இலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ?
Posted by நிலவு பாட்டு at 7:34:00 PM 3 comments
Labels: ஈழம்
Sunday, October 25, 2009
உலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: வைகோ குற்றச்சாட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை அருகே உள்ள அன்னூர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-
இதுவரை நடத்தப்பட்ட 8 மாநாடுகளும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரிலே நடத்தப்பட்டது. ஆனால் இப்போது உலகதமிழ் செம்மொழி மாநாடு என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மாநாடு உலகத்தமிழ் மாநாடு அல்ல.
இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்த கடை பிடிக்கப்பட்ட விதிமுறைகள், மரபுகள் இப்போது கடை பிடிக்கப்படவில்லை. ஒழுங்கு நியதியை புறந்தள்ளி விட்டு நடத்தப்படும் உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது.
சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக துன்பங்களையும், துய ரங்களையும் ஈழத்தமிழர்கள் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசு நடத்தும் உலக தமிழ் மாநாட்டை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.
இலங்கைக்கு பயணம் செய்த எம்.பி.க்கள் குழுவால் எந்தவித பயனும் இல்லை. அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருவர் கூட அகதிகள் முகாமிலிருந்து சொந்த இடத்திற்கு திரும்ப வில்லை.
கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்தது தவறு. இதற்காக கேரள முதல்- மந்திரி 5 முறை டெல்லி சென்றுள்ளார். ஆனால் தமிழக முதல்- அமைச்சர் ஒருமுறை கூட டெல்லி செல்லவில்லை. உண்மை நிலை பற்றி விளக்கமும் அளிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ள முல்லைப் பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டகேரள அரசு முயற்சித்து வருவது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவையும், இந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
உங்கள் அன்பை என்றும் மறவாத S.சுடலைமணி
{ கந்தக பூமியுலே வெந்ததே எங்க குலம் ... சொந்தத்தை தொலைச்சிட்டு பதறுதே பாதி சனம் ... }
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity."
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." - Velupilllai Pirabaharan, Leader of Tamil Eelam
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage!
Posted by நிலவு பாட்டு at 4:50:00 PM 0 comments
Wednesday, October 21, 2009
இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்
இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது.
இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது. இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‘’உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.
சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’என்று கூறியுள்ளார்.
Posted by நிலவு பாட்டு at 6:58:00 PM 4 comments
Tuesday, October 20, 2009
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! (04 -04 -2008)
குருதி பெருக்கெடுக்கப் பெருக்கெடுக்க கடந்த ஆண்டின் மத்திமத்தில் இக்கவிதையை எழுதி தமிழக உறவுகளிடம் கையேந்தி நின்றோம்....பெருஞ் செயற்பாட்டினூடாக எமை ஆதரித்து ஆற்றுப்படுத்தினீர்கள். தியாகச் செம்மல் முத்துக்குமாரன் உட்பட பல உறவுகள் எங்கள் வலிகளைத் தாங்க முடியாமல் தீக்குளித்தீர்கள். மலையெனத் திரண்டெழுந்தீர்கள். தமிழகத்தின் அரசியல் நாற்காலிகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன. இருப்பினும் இப்போது மறுபடியும் உங்கள் எழுச்சி.... தயவு செய்து அரசியல் வாதிகளால் முடங்கிப் போகாதீர்கள்.
உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்
வேர்மடிக்கும் தாய்மடியே!
உறுதி குலையாத உரம் அன்றுதந்து
விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!
ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்
காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!
எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.
ஆர்த்து அணைத்து ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக் கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது, எனினும் இப்போது முடியவில்லை.
கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே…
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.
ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......
உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.
வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில், குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி அடிதாங்கும் நிலை கூட
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின்
வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?
கட்டாய வலி வந்து, கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை…
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே….
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?
சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து….
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!
வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!
தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?
அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!
வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!
http://www.yarl.com/forum3/index.php?showtopic=36907
Posted by நிலவு பாட்டு at 6:38:00 PM 0 comments
Sunday, October 18, 2009
சானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர். அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.
- வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.
இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
Posted by நிலவு பாட்டு at 7:02:00 PM 0 comments
Labels: ஈழம்
இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
போர் நடைபெற்ற போதும் சரி, முடிந்த பின்னரும் சரி இலங்கை அரசுக்கு உதவி செய்வதில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊக்கமாகவே உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவென 500 கோடி ரூபா இந்தியாவின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது மீண்டும் இந்திய அரசு ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கலாம் என சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிதம்பரம், இலங்கையில் அகதி முகாம்களிலுள்ள மக்களின் புனர்வாழ்வுத் திட்டத்தை அந்நாட்டு அரசு தமக்குச் சமர்ப்பித்ததும் இந்திய அரசு மேலும் ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகக் கூறினார். இந்திய நா.உ இலங்கை விஜயம் குறித்து வழங்கியுள்ள அறிக்கை பற்றிக் கூறும்போது தாம் அனைத்து விடயங்கள் குறித்தும் கருணநிதிக்கு விளக்கியுள்ளதாகக் கூறினார்.
அந்த அறிக்கையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தாம் அதற்கு எவ்வாறு உதவுவது என்று கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு முகாம் மக்கள் 5000 பேரை இலங்கையரசு அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் தமிழக நா.உ களுக்கு தகவல்கள் வழங்கிய தமிழர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, தாம் உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து கருத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் சிதம்பரத்தின் இன்றைய பேட்டி அவர் இலங்கையரசுக்கு சாதகமாக மட்டுமே பேசுவார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.
Posted by நிலவு பாட்டு at 6:20:00 PM 1 comments
Labels: ஈழம்
Thursday, October 15, 2009
ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!
ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.
சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.
ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.
ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.
இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.
தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.
பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.
1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.
2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.
3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.
4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.
5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.
இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்....................................நன்றி ஈழத்தில் இருந்து ஈழவேந்தன்
Posted by நிலவு பாட்டு at 7:51:00 PM 3 comments
Labels: ஈழம்