Sunday, October 18, 2009

இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!

போர் நடைபெற்ற போதும் சரி, முடிந்த பின்னரும் சரி இலங்கை அரசுக்கு உதவி செய்வதில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊக்கமாகவே உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவென 500 கோடி ரூபா இந்தியாவின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது மீண்டும் இந்திய அரசு ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கலாம் என சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிதம்பரம், இலங்கையில் அகதி முகாம்களிலுள்ள மக்களின் புனர்வாழ்வுத் திட்டத்தை அந்நாட்டு அரசு தமக்குச் சமர்ப்பித்ததும் இந்திய அரசு மேலும் ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகக் கூறினார். இந்திய நா.உ இலங்கை விஜயம் குறித்து வழங்கியுள்ள அறிக்கை பற்றிக் கூறும்போது தாம் அனைத்து விடயங்கள் குறித்தும் கருணநிதிக்கு விளக்கியுள்ளதாகக் கூறினார்.

அந்த அறிக்கையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தாம் அதற்கு எவ்வாறு உதவுவது என்று கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு முகாம் மக்கள் 5000 பேரை இலங்கையரசு அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நா.உ களுக்கு தகவல்கள் வழங்கிய தமிழர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, தாம் உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து கருத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் சிதம்பரத்தின் இன்றைய பேட்டி அவர் இலங்கையரசுக்கு சாதகமாக மட்டுமே பேசுவார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.

1 Comment:

Anonymous said...

சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க வல்லுநர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்ரோபர் 2009, 09:06.26 AM GMT +05:30 ]
சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது.

ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர்.

அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.

வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை

- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது.

- குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.

- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.

இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்