எப்படியோ 25 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே உயிர்பிழைத் திருக்கிறார்கள். இதுவரை தமிழர்களின் 15 சடலங்கள் உட்பட இது வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சடலங்கள்?
"சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. இறந்தவர்கள் கையில் கட்டியிருக்கும் அத்தனை கடிகாரங்களும் 5.30-ல் நிற்கின்றன. 7 மணிக்குதான் போலீஸ் எங்கள் உதவியைக் கேட்டது. கொச்சியிலிருந்து 31 பேர் வந்தோம். 3 குழுவாகப் பிரிந்து ஆக்ஸிஜன் உதவியோடு மூழ்கித் தேடித் தேடி எடுத்து வருகிறோம். சில இடங்களில் 100 அடி 120 அடி ஆழம் இருக்கிறது. பாறை இடுக்குகளில் குழந்தைகளின் பிஞ்சு சடலங்கள்'' -கவிழ்ந்த படகின் முதுகில் நின்றபடி முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் கப்பல்படை வீரர் அவினாஷ்.
தன் குடும்பத்தில் 9 பேரை பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் பெரியகுளம் சரஸ்வதி.
"தேக்கடிக்குப் போகணும்னு நான்தானே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன். எங்க குடும்பத்துல 9 பேரை சாகடிச்சிட்டானே அந்த பாவிப்பய டிரைவர். நான் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருந்தேன் சார். என் மகள் தாரணியும், சந்தியாவும் "மான், யானை, காட்டெருமை எல்லாம் வரும்னு சொன்னியே எங்கேம்மா'ன்னு கேட்டு அடம்புடிச்சதுங்க. "இங்கே வாங்கம்மா... நான் காட்டறேன்'னு எங்க அண்ணன் ஜெயப்பிரகாஷ் குழந்தைகளை அப்பதான் போட்டோட இன்னொரு பக்கம் கூட்டிப்போனார். படகு வேகமா போயி லெப்ட்ல லேசா திரும்புச்சு. படகு சாயுற மாதிரி இருந்துச்சு. ஏய்... கவுறப்போகுதேனு கத்திக்கிட்டே அந்த டிரைவர் தண்ணிக்குள்ள குதிச்சுட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை. வேகமா எந்திரிச்சு ஸ்டேரிங்கை கெட்டியாப் புடிச்சேன்... முடியலை... படகு திடீர்னு தலைகுப்புற கவுந்திருச்சு. செத்தம்னு தான் நெனைச்சேன். கொஞ்ச நேரத்துல ஃப்ரன்ட் கண்ணாடியை உடைச்சு என் னை இழுத்து வேற படகுல போட்டாங்க. அந்தக் கண்ணாடி குத்திடுச்சு.
பயணிகள் எல்லாரும் ஒரே பக்க மாகப்போய் நின்னதாலதான் பாரம் தாங்காம கவுந்ததா சொல்றாங்க. திடீர்னு ஸ்டேரிங்கை திருப்பினான். படகு ஒருமாதிரி சாய்ற மாதிரி திரும்புச்சு... போட் கவுறப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே சீட்ல இருந்து தண்ணிக்குள்ள டிரைவர் குதிச்சிட்டான். என் குழந்தை கள், எங்க மூத்தார் குடும்பம், என் அண்ணன் குழந்தைகள் மொத்தம் 9 பேரும் அய்யோ... அய்யோ... சுருளி அருவியைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போயிருந்தா எங்க வாரிசுகள் பிழைச்சிருப்பாங்களே...'' -திரும்பத் திரும்ப சொல்லி கட்டட காண்ட்ராக்டர் ரவியின் மனைவி சரஸ்வதி கதறிய கதறல் இன்னும் நம் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையின் ஏந்தல் பகுதி. இதுதான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி லேக். இங்குதான்... 30.9.09 புதன் மாலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற ஜலகன்யகா என்ற பைபர் கிளாஸ் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து, சுமார் 80 பேரை சாகடித்த கோரவிபத்து நடந்திருக்கிறது.
பயணிகள் பலரை காப்பாற்றிய பயணிகளின் லோடுமேன் கண்ணன், ஜட்டியோடு தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றார்.
"குமுளி கடை வீதியில நின்னுட்டிருந்தேன். படகு கவுந்திருச்சு, நீச்சல் தெரிஞ்சவங்க ஓடிவாங்க வாங்கனு கத்துனாங்க. படகுக் கண்ணாடிகளை உடைச்சுதான் பலரை காப்பாத்தினோம். படகுல ஒரு மூலையில ரெண்டு குழந்தைங்க... கட்டிப்புடிச்சபடி பிணமா படு பயங்கரம்ங்க...'' -கண்கலங்கினார் இளைஞர் கண்ணன்.
"50 வருஷமா ஒரு விபத்தும் நடந்ததே இல்லையே...'' -புலம்பிக்கொண்டிருந்த தேக்கடி படகுத்துறை ஊழியர் களிடம் கவிழ்ந்த படகு பற்றி கேட்டோம்.
"மற்ற 10 படகும் இரும்புப்பலகையி லான படகுகள். கவுறவே கவுறாது. அதோட மாடியெல்லாம் ஓப்பனா இருக்கும். ஸ்ட்ராங்க்கா இருக்கும். இது ஒண்ணு தான் ஃபைபர் பிளாஸ்டிக் போட். சென்னையில் நர்கீஸ் கம்பெனியில 80 லட்சத்துக்கு வாங்கினார்கள். புத்தம் புது போட். ஆகஸ்ட் 17 அன்னைக்குதான் லேக்கில் ஓட விட்டாங்க. ஃபர்ஸ்ட்லேயே கம்ப்ளைண்ட்தான். பேலன்ஸ் இல்லாம இப்படி அப்படி சாயுதுன்னு கம்ப்ளைண்ட்ஸ். அதிகாரிகள் கண்டுக்கலை. இந்தப் படகு எல்லாம் மீன்பிடிக்க மட்டும்தான் பயன் படுத்தணும். கமிஷன் கிடைக்குதேன்னு 80 லட்சம் கொடுத்து வாங்கிட்டு வந்து 80 பேரை கொன்னுட்டாங்க. ஜாலியாக படகில் சவாரி செய்துகொண்டே, ஏரியை ஒட்டிய சரணாலயத்தில் வன விலங்கு களைக் கண்டு ரசிப்பதற்காக தினமும் சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணி கள் தேக்கடிக்கு வருகிறார்கள்.
படகின் கீழ்த்தளத்திற்கு 100 ரூபாயும், மேல்தளத்திற்கு 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. கவிழ்ந்த படகில் 75 சீட்டுகள்தான். எக்ஸ்ட்ரா நாற்காலிகளைப் போட்டு 83 டிக்கெட் கொடுத்திருக் கிறார்கள். 20-க்கும் அதிகமான குழந்தைகள் பயணித்திருக்கிறார்கள்'' என்றனர்.
"கேரள சுற்றுலாத்துறை வருடத்திற்கு வரும் 120 கோடி வருமானத்தை மட்டும்தான் பார்க்கிறது. இவ்வளவு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் டில் தீயணைப்பு நிலையமோ, மீட்புக்குழுவோ ஏற்படுத்தவில்லை. எந்தப் படகுக்கும் கண்டக்ட ரும் இல்லை'' -வேதனையைக் கொட்டினார் குமுளி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சுப்ப ராயலு. தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ""நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ...?'' என்று கேட்டார்.
"இல்லை... இல்லவே இல்லை'' என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார்.
மலையாள தொலைக்காட்சிகள் கூட, ""நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் முழுக்க மலையாளிகள் இல்லை'' என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.
இது என்னடா தேசம்!
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
Monday, October 5, 2009
இறப்பில் கூட இல்லாத திராவிடம் (கடைசி பத்தியை கவனிக்க!!!)
Posted by நிலவு பாட்டு at 1:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment