Thursday, September 3, 2009

'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்கா தீவிர அக்கறை: ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் விவாதிக்கப்படலாம்

விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
"இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியதை அடுத்து மனித உரிமைகள் அமைப்புக்களின் கவனம் அதனை நோக்கிக் குவிந்திருக்கின்றது.

இந்தக் காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் சிறிலங்காப் படையினர் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதனைத் தயாரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுசன் றைஸ், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியின்படி செப்ரெம்பர் மாதத்துக்கான தலைமைப் பதவியை றைஸ் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளுமா என்பதையிட்டு எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்த றைஸ், காணொலி ஒளிநாடா தொடர்பான தகவல்கள் புதிதாக இருப்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், இதனைப் போர்க் குற்றமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எடுத்த நிலைப்பாட்டினால் நிராகரிக்கப்பட்டது.

நன்றி புதினம்

http://nilavupattu.blogspot.com/2009/08/blog-post_9118.html

0 Comments: