Tuesday, March 17, 2009

லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனடா

இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கனடா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

கனடாவின் டொரன்டோ நகரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும், அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வன்னி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் நடைபெற்ற மாநாட்டில், தனிஈழம் வேண்டும் என்று பலரும் உரையாற்றினர். பேரணியின்போது, தமிழீழ கொடியை அனைவரும் தாங்கிச் சென்றனர். இதனிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. கெம்பின்ஸ்கி ஹோட்டலில் இருந்து புறப்பட்ட பேரணி, ஐநா சபை கட்டிடத்தை நோக்கி சென்றது. பின்னர் மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இறுதியில், ஐநா சபை அதிகாரிகளிடம் மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்நாட்டின் துணை பிரதமர், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பின்னர், மனு அளிப்பதற்காக அங்குள்ள இந்திய தூதரகம் நோக்கிச் சென்றனர். ஆனால், மனுவை வாங்க தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த தமிழர்கள், மனுவை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

0 Comments: