Sunday, March 15, 2009

விடுதலை புலிகளின் விஸ்வரூபத்தாக்குதல்

விஸ்வமடு சம்பவத்துக்கு வருவோம். கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவத்திடம் விடுதலைப்புலிகள் மரண அடி வாங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை ஊடகங்கள் கெக்கெலி கொட்டிக் கொண்டுள்ளன. முக்கியமாக, இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான இணையதளத்தில் விடுதலைப்புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றையெல்லாம் அடியோடு அழிக்கும் வகையில் விஸ்வரூபத் தாக்குதலை நிகழ்த்தி இலங்கை அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளனர் விடுதலைப்புலிகள்.

விஸ்வமடு என்ற பகுதியில் இருக்கும் தேராவில் பிராந்தியம் தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை ராணுவத்துக்கு மிக முக்கியமான நிலப்பரப்பு. சமீபத்தில்தான் அந்த இடத்தில் தங்களுக்கென்று பிரத்யேகமாகப் பீரங்கித் தளம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். இலங்கை ராணுவத்தினர் வீரியம் குறையாமல் இயங்க வேண்டும் என்றால், அந்த பீரங்கித்தளம் அத்தியாவசியமானது. இதுதான் விடுதலைப்புலிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தொடர்ந்து தற்காப்புத் தாக்குதலே நடத்திவரும் விடுதலைப்புலிகள், அதிரடி தாக்குதல் ஒன்றை நிகழ்த்த முடிவெடுத்தனர். உடனடியாக நாள் குறித்தனர். மார்ச் 9, 2009. இரவு நேரத்தில் தாக்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால், அதற்குத் தயாராகினர் கரும்புலிகள். ஆம். இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை அவர்களால் மட்டுமே நிகழ்த்தமுடியும் என்பதால், பொறுப்பு அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கூடவே, கிட்டுவின் பெயரால் செயல்பட்டுவரும் பீரங்கிப் படையினரும் இணைந்து கொண்டனர்.

திட்டம் இதுதான். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குள் ஓசையில்லாமல் ஊடுருவுவது. யாரும் எதிர்பாராத சமயத்தில் அதிரடி தாக்குதல் நடத்துவது. எதிரிகள் சுதாரித்து எதிர்த்தாக்குதல் செய்யும் சமயத்தில், காற்றோடு காற்றாகக் கரைந்துவிடுவது. கெரில்லாத் தாக்குதல் என்று இரட்டை வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.

இந்தத் திட்டத்தின்படி விசுவமடு பீரங்கித்தளத்தை அதிரடியாகத் தாக்குவது என்று முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அங்கு ஊடுருவிய கரும்புலிகள், அங்கிருந்த ஆறு பீரங்கிகளைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். வெறுமனே கைப்பற்றியதோடு நின்றுவிடாமல் அந்த பீரங்கிகளைக் கொண்டே இலங்கை ராணுவத்தினர் மீது மின்னல்வேகத் தாக்குதலையும் நடத்தினர்.

வியூகம் வகுத்து நடத்திய இந்தத் தாக்குதல் மூலம் இலங்கை அரசை வெலவெலக்கச் செய்துள்ளனர் விடுதலைப்புலிகள். புலிகள் நடத்திய இந்த அதிரடி கெரில்லாத் தாக்குதலில் கிட்டத்தட்ட ஐம்பது ராணுவ வீரர்கள் பலியாகினர். தாக்குதல் முடிந்ததும் விஸ்வமடு பீரங்கித் தளத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு மறைந்துவிட்டனர் கரும்புலிகள்.

கிட்டத்தட்ட இதே பாணியில் கிளிநொச்சிக்கு அருகில் உள்ள பீரங்கித் தளத்தைக் கைப்பற்றிய புலிகள், தொடர்ந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவும் காரியத்தில் கவனம் கலையாமல் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இன்னும் நிறையப் பகுதிகளுக்குள் ஊடுருவி, முன்னே சென்று கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்தைப் பின்னால் இருந்து சுற்றிவளைத்துத் தாக்கும் முயற்சியில் புலிகள் இறங்கியுள்ளனர். தாக்குதல் தொடரும் என்றே தெரிகிறது!

2 Comments:

நிலவு பாட்டு said...

நன்றி ஆர்.முத்துகுமார், தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

மேலும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

இன்றைய காலகட்டத்தில் வேறு வழியின்றி தமிழர்களின் நலனை காக்கும் உங்கள் போன்றவர்களின் கைகளில் இருக்கிறது. இந்த செய்தியினை உலகுக்கு உரக்க எடுத்து செல்லுங்கள் இதே வேகத்துடன்.

நிலவு பாட்டு said...

நன்றி ஆர்.முத்துகுமார், தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

மேலும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

இன்றைய காலகட்டத்தில் வேறு வழியின்றி தமிழர்களின் நலனை காக்கும் உங்கள் போன்றவர்களின் கைகளில் இருக்கிறது. இந்த செய்தியினை உலகுக்கு உரக்க எடுத்து செல்லுங்கள் இதே வேகத்துடன்.