Friday, March 13, 2009

இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரிக்கை

இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுப்பது கண்டனத்திற்குரியது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் தரக்குறைவாகவும் இடவசதிகள் அற்றும் காணப்படுவது கவலைக்குரியது.

இரு தரப்பும் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடத்தல் வேண்டும். போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதுடன் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

போர் நடைபெறும் பகுதிகளுக்கும் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் அனைத்துலக மற்றும் தேசிய மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு தடைகள் அற்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஏனைய நாடுகளுடனும் உதவி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: