Saturday, June 6, 2009

பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களால் குடாநாடு அதிர்வு:

பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்ட பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களால் குடாநாடு அதிர்ந்தது. இதனால் குடாநாட்டு மக்களிடையே பெரும் அச்சமான சூழலும் காணப்பட்டிருந்தது.

சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருந்தன. இதன் விளைவுகள் உயர் பாதுகாப்பு வலயத்தை அண்டிய வடமராட்சி தொண்டமனாறு, வல்வெட்டித்துறை உடுப்பிட்டி மற்றும் இடைக்காடு அச்சுவேலி புன்னாலைக்கட்டுவன் போன்ற உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைப்புறக் கிராமங்கள் அதிந்த வண்ணமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றஙது.

நீண்ட இடைவெளியின் பின்னர் பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டமையினால் மக்களிடையே பதட்டமான சூழல் காணப்பட்டது. எனினும் சொல்லிக் கொள்ளத்தக்க எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனப் படைத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளுடனான போர்நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் புதிய ரக ஆயுதங்கள் சிலவற்றைப் படையினர் பரிசீலித்துப் பார்ப்பதிலும் அவற்றின் வெடிபொருட்களை அழிப்பதிலும் ஈடுபட்டிருந்ததாகவும் படை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் சுயாதீனத் தகவல்கள் எவையும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

1 Comment:

Suresh Kumar said...

இனி என்ன செய்ய போகிறது இந்தியா

http://www.sureshkumar.info/2009/06/blog-post_06.html