Monday, June 15, 2009

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ"

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.


இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்றஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், "றோ" நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


இதனிடையே, தென்தமிழீழமாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.


இதுதொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள், கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமானஅறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

0 Comments: