Monday, June 22, 2009

இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இந்தியாவில்?: இயக்குனர் சீமான்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குனர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சீமான் பேசியதாவது:

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை அவுஸ்திரேலிய அரசு கேட்கிறது. அவுஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?

இன்றைக்கு பிரபாகரன் குறித்தும், புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், என்றார் சீமான்.

கொளத்தூர் மணி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி தடை செய்யப்பட்டால் நாம் வேறு பெயரில் இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அந்த இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது? அதை அரசே முடிவு செய்யட்டும்.

தமிழ் ஈழ பிரச்சினை தற்காலிகமாக ஓய்ந்து இருக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? இலங்கையில் தொடர்ந்து போர் நடக்குமா? என்ற கருத்துக்கள் நிலவுகிறது. ராஜபக்ச இன்னும் ஒரு இலட்சம் சிங்களவர்களை இராணுவத்தில் சேர்ப்பது என்று கூறுகிறார். அப்படி என்றால் அங்கு போர் தொடரும் என்று தானே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இலங்கையில் உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 Comment:

எழவு பாட்டு said...

சூரிய தேவன் அப்ப மண்டைய போட்டு விட்டானா? அய்யகோ என்ன கொடுமை