Saturday, June 13, 2009

ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார்

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார்.

இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன்.

மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது.

இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

0 Comments: