Thursday, February 19, 2009

நக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும்பினா உதைக்கிறா

சென்னை உயர்நீதி மன்றம். 17-ந் தேதி காலை.

விசாரிக்கப்பட இருந்த வழக்குகளின் பட்டி யலில்... தீட்சிதர்களின் வழக்கு 54-வது வழக்காக இருந்தது. போராட்டத்தில் குதித்திருந்த வழக்கறிஞர் களுக்கு... சுப்ரமணியசாமி தீட்சிதர் வழக்குக்காக கோர்ட்டில் உட்கார்ந்திருக்கும் தகவல் வர அவர்களில் ஒரு பகுதியினர் ஆவேசமாகக் கிளம்பி 11.45-மணிக்கு அந்தக் கோர்ட்டுக்கு வந்தனர். பிறகு?

அங்கு நடந்ததை கோர்ட் ஊழியர்கள் சிலரே விவரித்தனர்.’""ஆவேசமாக உள்ளே நுழைந்த அந்த வழக்கறிஞர் கும்பல்... கோர்ட் அறைக்குள் இருந்த காவல்துறை ஏ.சி.காதர் மொய்தீனை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, கதவை மூடியது. பின்னர்... "தமிழீழம் வாழ்க. இஸ்ரேலின் உளவாளி சுப்பிரமணிய சாமி ஒழிக... இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை வாங்கிக்கொடுக்கும்... இனத்துரோகி சு.சாமியே நாட்டை விட்டு ஓடு... ராஜீவ்காந்தி கொலையாளியே ஓடிப்போ...'’’ என்பது போன்ற முழக்கங்களை சாமிக்கெதிராய் முழங்கியது. அதேபோல் பெண் வழக்கறிஞர்கள் சாமியை முற்றுகையிட்டு... "சு.சாமியே உனக்கு மானம் ஈனம் இருக் கிறதா?' என்று கோஷம் போட்டனர். திகைத்துப்போன நீதியரசர்கள் பி.கே.மிஸ்ராவும், கே.சந்துருவும், "இங்கே என்ன நடக்கிறது?' என்றார்கள் கோபமாய்.

அப்போது அழுகிய முட்டை ஒன்று பறந்து வந்து சாமியின் தலையில் 'பட்'டென்று விழுந்து உடைய... ஒரு வழக்கறிஞர் ஓடி வந்து சாமியின் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு 'தொம்' என்று அவர் முதுகில் குத்துவிட்டார். தொடர்ந்து சாமியை குறிவைத்து முட்டைகள் வீசப்பட்டன. சில முட்டைகள் நீதியரசர்களின் அருகே அடுக்கப் பட்டிருந்த சட்டப் புத்தகங்களின் மீது உடைந்து தெறித்தன.

அப்போது இன்னொரு குரூப் சந்தடி சாக்கில்... கோர்ட் அறையின் இன்னொரு மூலையில் உட்கார்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ். சார்புடைய - விஜில் அமைப் பைச் சேர்ந்த ராதா ராஜனைப் பிடித்து கீழே தள்ளியது. நிலைமை விபரீதமாய் போய்க்கொண்டி ருப்பதைப் பார்த்த நீதியரசர்கள் கடுமையான குரலில்... "நீங்கள் எல்லோரும் வெளியே போகா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுப் போம்'னு சொல்ல... இதன்பிறகே அந்தக் கும்பல் வேளியே போனது. பிறகு அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லாவை அழைத்து "கோர்ட்டிற்குள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு ஏன் செய்ய வில்லை' என்றும் நீதியரசர்கள் விசாரித் தார்கள். "எங்க கோர்ட் அனுபவத்தில் இப்படியொரு கலாட்டாவை நாங்க பார்த்த தில்லை' என்றார்கள் படபடப்பு மாறாமல்.

"கோர்ட்டுக்குள் நடந்த கலாட்டா வைப் பற்றி தலைமை நீதிபதியிடம் புகார் தரப்போகிறோம்' என அங்கேயே அறிவித்த நீதியரசர்கள்... தீட்சிதர்கள் வழக்கை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்கள். அத்தனை கலாட்டாவும் ஓய்ந்தபின் பாதுகாப்புப் படை வீரர்கள்... சுப்ரமணிய சாமியை பாதுகாப் பாய் அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். வெளியே பத்திரிகையாளர்களைப் பார்த்த சாமி ""தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. ஆட்சியைக் கலைக்கணும். இதை சும்மா விடமாட்டேன். சுப்ரீம் கோர்ட்டுக்கும் போவேன்'' என்றபடி கிளம்பினார்.

அந்த கோர்ட் அறையில் பந்தோபஸ்துப் பணியில் இருந்த ஏ.சி.காதர்மொய்தீனோ “""திடீர்னு கோர்ட்டிற்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் என்னை வெளியே தள்ளி உள்பக்கம் கதவை மூடிவிட்டார் கள். சு.சாமியின் பாதுகாப்புப் படை வீரர்கள் கோர்ட்டிற்குள் நுழைய முயன்றபோது... சு.சாமியே உள்ளே வரவேண்டாம்னு கைகாட்டி தடுத்து விட்டார். கோர்ட்டிற்குள் எங்களால் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது'' என்றார் நம்மிடம்.

சம்பவத்தின்போது அதே கோர்ட் அறையில் இருந்த அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லாவிடம் கேட்டபோது...’’ ""கோர்ட்டிற்குள் போலீஸுக்கு எந்த பவரும் இல்லை. கோர்ட் வளாகம் முழுக்க தலைமை நீதிபதியின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் பகுதி. எனவே அவரது உத்தரவு இல்லா மல் போலீசால் எந்த ஆக்ஷனையும் எடுக்க முடியாது. எங்களுக்கு இருக்கும் சந்தேகம்... வந்தவர்கள் எல்லோரும் உண்மையில் வழக்கறி ஞர்கள்தானா? என்பதுதான். ஏனென்றால் பல முகங்கள் புதுமுகங்களாக இருந்தன. அதேபோல் அன்று தீட்சிதர்களின் வழக்கு 54-வதாகத்தான் விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தும்... சுப்ரமணியசாமி ஏன் முன்னதாகவே கோர்ட்டிற்கு வந்து உட்கார்ந்தார் என்றும் தெரியவில்லை'' என்று சந்தேகம் எழுப்புகிறார். சாமி தரப்பிலிருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. எனினும் ஸ்பாட் டுக்கு வந்து பார்வையிட்ட சிட்டி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ""இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவை இடுகிறதோ அதன்படி செயல்படுவோம்''’ என முடித்துக்கொண்டார்.

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வந்த சாமியை துக்ளக் சோ சென்று பார்த்திருக்கிறார். “ ""திடீர்னு அத்தனை பேர் வருவான்னு நினைக்கலை. லெப்ட் சைட்லயிருந்து முட்டை அடிக்கிறான்னு பார்த்தா உடனே ரைட் சைட்லயிருந்து ஒருத்தன் முட்டையை வீசறா. இப்படி திரும்புனா அடிக்கிறா, அப் படி திரும்புனா உதைக்கிறா.. வந்தவா யாரும் சாதாரண வக்கீலா இருக்க மாட்டா...தி.க. காரா, கம்யூனிஸ்ட்காரா, நக்ச லைட்காராலாதான் இருக்கணும். பெரியார் காலத்திலேயே இப்படி எல்லாம் நடந்துண்டது கிடையாது. அப்போல் லாம் வெறும் பேச்சோடதான் இருப்பா. இப்ப இங்க இருக்கிறவாளெல்லாம் விடுதலைப் புலியா மாறிட்டான்னு தெரியறது. இப்பவே இப்படின்னா ஈழம் கிடைச்சா என்னெல்லாம் பண்ணுவான்னு தெரியலை. நம்மவா ஒருத்தரையும் விடமாட்டா''’ என்று படபடத்திருக்கிறார் சாமி. ""நாம சந்திச்சு பேசுனது தெரிஞ்சா எல்லா பார்ப்பனர்களும் ஒண்ணாயிட்டாங்கன்னு பேசுவார் கருணாநிதி என்று சொன்ன சோ, மதுரை கூட்டத்துக்கு போகவேண்டாம். அங்கேயும் இப்படி நடக்கலாம்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் முன்பே... சு.சாமி தாக்கப்பட்ட விவகாரம் பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

-சகா

0 Comments: