Saturday, February 28, 2009

தமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு மட்டும்

தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள்; கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதான செய்தி தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

'தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்திற்கு விருந்தாக வேண்டும். தமிழ் ஆண்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவக்க வேண்டும்' என்று மஹிந்தவின் தம்பி மமதையுடன் சொல்லித் திரிகிறான்

சிங்கள அரசின் இந்தக் கோரத் தாண்டவத்தை ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் மௌனமாய் இருந்து ஆமோதித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் இந்த மௌனத்திற்கு 'பயங்கரவாதத்தையே அழிக்கிறோம்' என்று சிங்கள அரசு உள்;நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வரும் பொய்ப் பிரச்சாரமும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் சிங்கள அரசினாலும் அவர்களது கைக்கூலிகளினாலும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எம் தமிழர்களில் சிலர்
முட்டுக் கொடுத்துக் கொண்டு நிதிப் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

உதாரணமாக சிங்களவர்களின் பிரச்சார நோக்கங்களுக்காக இங்கிலாந்திலிருந்து நான்கு பத்திரிகைகளும் கனடாவிலிருந்து இரண்டு பத்திரிகைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளின் பிரதான வருமான மார்க்கமான விளம்பரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது என்பதை ஜீரணிப்பதற்குக் கஸ்டமாயிருந்தாலும் அதுதான் உண்மை.

இவ்வாறு விளம்பரங்களை வழங்கி எமது எதிரியின் ஊடகங்களைப் போசிப்பவர்களில் பிரபல வியாபார நிறுவனங்கள், சட்டத்தரணிகள், வீட்டு விற்பனை முகவர்கள், உணவகங்கள் என்பன அடங்குகின்றன.

அதுமட்டுமன்றி இந்தப் பத்திரிகைகளைத் தமது வியாபார நிலையங்களில் காட்சிப் படுத்தி விநியோகம் செய்வதிலும் தமிழ் நிறுவனங்களே முன்னிற்கின்றன.
தாயகத்தில் சிறுபான்மையினமாக இருந்த எங்கள் மீது சிங்களம் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதனால் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்த நாடுகளில் தாய் மண் குறித்த ஏக்கத்தோடும் கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாடுகளிலாவது எம்மை அமைதியாக வாழ சிங்கள அரசும் அவர்களது அடிவருடிகளும் அனுமதிக்கிறார்களா?

வர்த்தகத்தில் அல்லது கலைத்துறையில் அல்லது கல்வித் துறையில் பரிணமிக்கும் எம் தமிழர்கள் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தப் படாதபாடு படுகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏதாவது ஒரு கவனயீர்ப்பு ஒன்று கூடலை ஒழுங்கு செய்தால் ஏட்டிக்குப் போட்டியாக அதே இடத்தில் தாமும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து எம்மை வம்புக்கு இழுக்கிறது சிங்களம்.

தமிழர் தாயகம் வல்வளைப்புச் செய்யப்பட்டதை வெற்றி விழாவாக்கி தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் பட்டாசுகளைக் கொழுத்தியும் ஆரவாரம் செய்தும் வாகனப் பேரணிகளில் சென்றும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

சிங்களத்தின் பிரச்சார ஊடகங்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வர்த்தகர்களே!

ஒரு சிறு தொகையினராக இருக்கும் இவர்களைக் கவர்வதற்காக, உங்களது சொற்ப வர்த்தக நலன்களுக்காக 5 இலட்சத்திற்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மன உணர்வை, ஆதங்கத்தை, உள்ளக் குமுறல்களை எல்லாம் புறந்தள்ளிச் செயற்படப் போகிறீர்களா?

ஒரு சிறு தொகையினரான மக்களைக் கவர்வதற்காக எம்மினத்தையே காட்டிக் கொடுக்கும் இந்தப் பாதக செயலைத் தொடர்ந்து செய்யப் போகிறீர்களா?

பெரும்பான்மையான தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எதிரியின் பிரச்சார ஊடகங்களுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள்.

அறிந்தோ அறியாமலோ சிங்கள ஊடகங்களைப் போசித்துக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தம் தவறைத் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். ஆனால் இனியும் முட்டுக் கொடுப்போம் என்று முரண்டு பிடிக்கும் வணிக நிலையங்களுடன் எமது தொடர்பைத் தொடர்ந்து பேணப் போகிறோமா?

ஆயிரம் அவலங்களைச் சுமந்து கொண்டு வாழ்வா சாவா என்று எம் சகோதரர்கள் துடித்துக் கொண்டிருக்க அற்ப வியாபார நோக்கத்திற்காக எதிரியிடமே மண்டியிடும் இவர்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்கத் தயாராவோம்

தாயகத்தில் அவலப்படும் எம்முறவுகளுக்காக என்ன செய்வது என்ற ஏக்கத்தோடும் எம் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றனவே என்ற ஆதங்கத்தோடும் இருக்கும் உறவுகளே.

அற்ப சலுகைகளுக்காக எம்மிடையே இருக்கின்ற இந்த எட்டப்பர்களை இனங் கண்டு ஒதுக்கி வைப்பதும் எமது உறவுகளுக்காக செய்கின்ற பணிகளில் ஒன்று தான் என்பதை நினைவில் கொள்வோம்.

உணவின்றி மருந்தின்றி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு எம்முறவுகள் காத்திருக்க அந்த மரண அரக்கனுக்கே விருந்தோம்பல் செய்யும் பச்சோந்தித்தனத்தை துடைத்தெறிவது புலம் பெயர் தமிழர் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஒன்றுபட்ட தமிழர் பலத்தின் முன்னால் எட்டப்பர்களும் அடிவருடிகளும் தொலைந்து போகட்டும்.

0 Comments: