Sunday, February 22, 2009

பார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை

எதிர்பாராத சம்பவம் நடைபெற்று விட்டது. இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி ஆகியோரை அனுப்பியுள்ளேன். இந்தப் பிரச்சனையில் வக்கீல்கள் மீது தவறு உள்ளதா, போலீசார் மீது தவறு உள்ளதா என்பதை கண்டறிவதற்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும் உங்களது ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்சனையில் நீதி நிலை நாட்டப்படவும் அமைதி ஏற்படவும் தங்களது மதிப்பு மிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும் தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்’’ என்று தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயவுக்கு கடிதம் எழுதி விட்டுக் காத்திருக்கிறார் தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.கருணாநிதி.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ரத்த வேட்டையை நடத்தி முடித்து விட்டு பிரச்சனையின் மூல வேரைத் தேடுவது இருக்கட்டும். உயர்நீதிமன்றத்துக்குள் காவல்துறையை அனுமதித்தது யார்? தமிழக முதல்வர் கருணாநிதியின் உத்தரவில்லாமல் காவல்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததா? அல்லது சென்னை மாநகர கமிஷனர் சொன்னது போல சமரசத்திற்கு அழைத்ததனால் உள்ளே போனோம் என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கணக்கான அதிரடிப்படையோடு உள்ளே நுழைவதுதான் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமாதானத்துக்குப் போகிற லட்சணமா?

உயர்நீதிமன்றத்துக்குள் என்னதான் நடந்தது? சுப்ரமணியசுவாமி மீது முட்டைகளை வீசி அடித்து உதைத்ததாக 20 வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்ய கோர்ட் வளாகத்துக்குள் சென்றது போலீஸ். வழக்கறிஞர்களோ ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், எங்களை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய சு.சுவாமியை முதலில் கைது செய்யுங்கள், அதன்பின் நாங்களாகவே வந்து கைதாகிறோம்’ என்று சொல்ல, போலீசாரோ சு.சாமியின் வழக்கில் தொடர்புடைய இருபது பேரை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்ற வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதே நேரம் நீதிமன்றத்திற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேபிட் போர்ஸ் என்றழைக்கப்படும் அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து போலீஸ் வேனைச் சுற்றி நின்ற வழக்கறிஞர்களைத் தாக்கத் தொடங்கினர். அப்போதுதான் போலீஸ் அந்த நரவேட்டையைத் தொடங்கியது.

உயர்நீதிமன்றத்தின் எல்லா கட்டிடங்களுக்குள்ளும் நுழைந்த போலீஸ் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக அடித்துக் காயப்படுத்தியது. இதில் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என யாரும் தப்ப முடியவில்லை. காவல்துறை அதிகாரி ராமசுப்ரமணியே அதிரடிப்படையை தாக்கச் சொல்லி உத்தரவிட்டதாகவும், அதை ஒட்டியே காவல் படைகள் அத்துமீறி மிகக் கோரமான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. சு.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப் போன வழக்கறிஞர்களையே அந்த வழக்கில் கைது செய்ய போலீஸ் முயற்சித்தபோது, ஒரு பக்கம் தாக்குதல் இன்னொரு பக்கம் கைதுகள் என கடுப்பாகிப் போன வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதே சமயம் காவல் நிலையத்துக்கு வெளியில் நின்ற வக்கீல்களின் வாகனங்களுக்கு தீவைத்தது போலீஸ்காரர்கள்தான். அது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற அலுவலகங்களை சூறையாடியதும் அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து நொறுக்கி நரவேட்டையாடியதும் காவல்துறையினர். இந்தக் கலவரத்திற்கு முழு காரணமும் காவல்துறைதான்.

ஆனால் இதில் மிக மோசமான பாதிப்பையும் சந்தித்து, கருணாநிதியின் ஆதரவு ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்படுபவர்களும் வழக்கறிஞர்களே! சன், கலைஞர், ராஜ் போன்ற காட்சி ஊடகங்கள் ஏதோ வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் என்று சித்தரிக்க, மக்கள் தொலைக்காட்சியும் தமிழன் தொலைக்காட்சியும் மட்டுமே ஓரளவுக்கு உண்மையை வெளியில் கொண்டு வந்தன. அங்கு இருந்த சில பத்திரிகையாளர்கள் மட்டும்தான் போலீசின் அராஜகத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிருபர்களோ எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ‘‘சார் நாங்க எடுத்தாலும் போட மாட்டாங்க சார்’’ என்று புலம்பினர். அத்தோடு வழக்கறிஞர்களின் பேட்டிக்காக இந்தத் தொலைக்காட்சிகள் சென்றபோது அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். ‘‘போங்கப்பா உங்க தொலைக்காட்சியில் என்ன வர வேண்டும் என முடிவு ஏற்கனவே ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுத்தாயிற்று அதனால் உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறோம் தயவு செய்து போங்கள்’’ என்று சொன்னபோது அந்த வழக்கறிஞர்களின் நியாத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்குமான மோதல் என்பது தொழில் ரீதியானது. காக்கிச் சட்டைகளையும் கருப்பு அங்கிகளையும் எதிர் எதிராக நிறுத்தி பின்னப்படுவதே ஒரு வழக்கின் யதார்த்தம். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இருக்கிற போர்க்குணமோ சுயமரியாதையோ போலீசுக்கு நிச்சயம் இருக்கப் போவதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் வீசுகிற எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் நன்றியுள்ள கூட்டமாக இதை மாற்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகிப் போய்விட்டது.

இன்றைக்கும் பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி வீதிக்கு வந்து போராடுகிறவர்கள் வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் மட்டுமே. பெருமளவு கிராமப்புறங்களில் இருந்து வரும் இவர்களிடம் மட்டுமே இன்று சமூக பொறுப்புகள் கொஞ்சமேனும் மிஞ்சி இருக்கின்றன. இந்நிலையில்தான் ஈழத் தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்தக் கோரி முத்துக்குமார் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்திய அந்த இளைஞன் தன் மரணசாசனத்தில் கூட கல்லூரி மாணவர்களையும் வழக்கறிஞர்களையுமே போராடத் தூண்டி குறிப்பிட்டு எழுத மாணவர்களும் வழக்கறிஞர்களும் முத்துக்குமாரின் உடலின் பொறுப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை தீவீரப்படுத்தினார்கள். கடந்த பல நாட்களாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வீதிக்கு வந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் வழக்கறிஞர்கள்.

பல நேரங்களில் இந்தப் போராட்டங்கள் தமிழக அரசுக்கு தலைவலியாக மாறியது. காங்கிரஸ்காரர்கள் வழக்கறிஞர்களை கைது செய்யச் சொல்லி போராடத் துவங்கினர். அதே சமயம் இந்தப் போராட்டத்தைக் குழப்ப வழக்கறிஞர்கள் மூலமாகவே திமுக எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் வக்கீல்களை அடக்க தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பாக வந்து கிடைத்தவன்தான் இந்த சு.சாமி. ‘‘முட்டையை பைல்ஸ்சில் வீசுனாங்கோ. கொட்டையில் வீசினாங்கோ’’ என்றுதான் சு.சாமி சொன்னானே தவிற என மூஞ்சியில் வீசினாங்க குமட்டுலயே குத்துனாங்க என்று சு.சாமி கடைசி வரை சொல்லவே இல்லை. யாரும் புகார் பதிவு செய்யவும் இல்லை. அப்படி இருக்கும்போது வழக்கறிஞர்களை எந்த முகாந்திரத்தில் கைது செய்யக் கிளம்பியது காவல்துறை? அப்படியே கைது செய்ய வேண்டும் என்றாலும் நீதிமன்றத்திற்கு வெளியேதான் அந்தக் கைதுகளை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் நீதிபதிகள் உதவியை போலீஸ் நாடி இருபது பேரை சரணடையச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் உண்மையில் கைது செய்வது ஒரு நோக்கம் என்றால் இனிமேல் வழக்கறிஞர்கள் எவனும் போராட்டம் கீராட்டம் என ஒன்று சேரக் கூடாது என்கிற திட்டத்தோடு, யாரோ ஒரு பெரிய தலையின் அறிவுறுத்தலில் தமிழக போலீஸ் செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. உண்மையில் போலீஸ் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது கருணாநிதிக்குத் தெரியுமா, தெரியாதா என்கிற கேள்விதான் இங்கே முக்கியம்.

வழக்கறிஞர் போலீஸ் மோதல், அல்லது சு.சாமி வழக்கறிஞர் மோதல், அல்லது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மோதல் என்று எத்தனை கோணத்தில் பார்த்தாலும் இந்தப் பிரச்சனையில் அடிநாதத்தில் இருப்பது பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்குமான மோதலே! அரசும் போலீசும் இங்கே பார்ப்பானுக்காக நிற்கிறது. சூத்திரர்களுக்காக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து நின்று சு.சாமி, சோ.சாமி, ஹிந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர் என பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். நடந்து கொண்டிருக்கும் கலவரங்களின் மூல வேரை ஈழ விடுதலைக்கான போரோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பது எவ்வளவு நியாயமானதோ அது போல திராவிட ஆரியர்களுக்கான மோதலாகவும் இதைப் பார்த்தே ஆகவேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை வரலாறும் திராவிட ஆரிய இனத்தின் நீண்ட காலப் போரின் இறுகிய வடிவமே! அதன் மிச்சப்பட்ட மேம்போக்கான வடிவங்கள்தான் கலகங்களாகவும் கலவரங்களாகவும் தமிழகத்தில் வெடிக்கின்றன. அதுதான் உண்மை.

இதை மார்க்சிஸ்டுகள் உட்பட பார்ப்பன ஜெயலலிதாவோ, காங்கிரஸோ, பிஜேபியோ, நிறம் மாறிப் போன கருணாநிதியோ ஏற்றுக் கொள்ள முடியாது. தத்துவ ரீதியிலான சம நீதிக்கான சம வாய்ப்புக்கான போராட்டங்களையும் அதை ஒட்டி எழும் இம்மாதிரி கலகங்களையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக பார்ப்பதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம். அதே சமயம் பிரச்சனையின் மூல வேர் என்பதின் துவக்கத்தை நான் முத்துக்குமாரின் மரணத்திலிருந்து பார்க்கிறேன். கருணாநிதியோ வக்கீல்களைக் கைது செய்ய விடாமல் தடுத்த நிகழ்விலிருந்து பார்க்கிறார்.

கடைசியாய் ஒன்று..

சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலின்போது கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸை நாம் திட்டினோம். ‘இப்போது அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என நீதிமன்றத்திற்குள் நுழைந்து லத்திசார்ஜ் பண்ணினால் அதற்கும் திட்டுகிறீர்களே!’ என புத்திசாலிகள் சிலர் கேள்வி கேட்கிறார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த மோதலில் மாணவர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள். அங்கே தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்தது எவ்வளவு மோசமான முன்னுதாரணமோ, அதுபோல ஒற்றுமையாக சு.சாமிக்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை அத்துமீறித் தாக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டது மன்னிக்கவே முடியாத குற்றம்.

வழக்கறிஞர்களை தாக்கிச் சிதைத்தது இனிமேல் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடக் கூடாது என்பதற்காகத்தான். இதில் இலங்கை அரசின் துணைத்தூதராக சென்னையில் இருக்கும் அம்சா, இந்திய உளவு நிறுவனமான ரா, பார்ப்பனக் கும்பல், அவர்களுக்கு காவடி தூக்கும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற துரோகச் சக்திகளின் விருப்பங்களும் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. அவர்கள் நினைத்ததை அவர்கள் நடத்தி முடித்து விட்டார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழக அரசே!

அத்துமீறி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்து!

சாதிப்பெயரைச் சொல்லி வழக்கறிஞர்களை இழிவாகப் பேசிய சுப்ரமணியசுவாமியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு!

என்பதுதான் இன்று நாம் முன்வைக்கும் கோரிக்கைகள். ஆனால் வழக்கறிஞர்களோடு இணைந்து மாணவர்களும் பொதுமக்களும் சகலதுறையினரும் அவர்களுக்காகப் போராடுவதோடு ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை முன்னெடுக்கும் இலங்கை அரசுக்கு எதிராகவும், அதை முட்டுக் கொடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில்தான் வழக்கறிஞர்கள் மீதான் ஒடுக்குமுறையை நாம் ஒடுக்க முடியும்.

நண்பர்களே! வழக்கறிஞர்களுக்கு உங்களின் ஆதரவினைத் தெரிவியுங்கள்! அவர்களின் தீரமிக்க போராட்டத்தில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நீங்களும் ஒன்றிணையுங்கள்.

(படங்கள் - நன்றி: தினந்தந்தி)

நன்றி : http://www.keetru.com/literature/essays/ponnila_4.php

0 Comments: