Sunday, February 15, 2009

தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு

வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று சனிக்கிழமை இரவு "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டதாக அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் - தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனைப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவ அதிகாரி "புதினம்" செய்தியாளரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்

0 Comments: