மேற்குலகுக்குப் புதிய பாடம் புகட்ட எத்தனிக்கும் கொழும்பு..
இலங்கை விவகாரத்தில் மேற்குலகுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த" கதைக்கு ஒப்பானதுதான். "படகு ஏறும்போது அண்ணன், தம்பி. ஆற்றைக் கடந் ததும் நீ யாரோ நான் யாரோ" என்பது போல மேற்குலகத்தை இப்போது தூக்கி எறிந்து நடக்கின்றது கொழும்பு.இலங்கையில் 2002 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மேற்குலகு நடந்து கொண்டது.
அச்சமயம் அம்முயற்சியில் ஈடுபட்ட இரு பக்கத்தினருமே அதில் "சமதரப்பு" என்ற அந்தஸ்துடனேயே பங்குபற்றினர். அதில் ஒரு தரப்பை "பயங்கரவாதிகள்" ஆக முத்திரை குத்தி, ஒதுக்கி, ஓரம் கட்டுவது, அமைதி முயற்சிகளை அடியோடு பாதிக்கும் எனத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அந்த நியாயத்தைப் புறம் ஒதுக்கிய மேற்குலகு, அமைதி முயற்சி வேளையிலேயே புலிகளை "பயங்கரவாத இயக்கமாக" அடையாளப்படுத்தி, புறம் ஒதுக்கிப் பட்டியலிட்டு, அப்போதைய அமைதி முயற்சிகள் அடியோடு குழம்பிப்போகக் கால்கோள் இட்டது.புலிகளை சர்வதேச உலகிலிருந்து ஓரம்கட்டி, அதன் மூலம் பலவீனப்படுத்தி, சிதைத்து அழிப்பதை நோக்கமாகக் கொண்ட கொழும்புக்கு மேற்குலகின் அன்றைய அந்தப் பொறுப்பற்ற போக்கு இனிப்பாக இருந்தது.
ஆனால், இப்போது பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களுக்காக மேற்குலகு குரல் எழுப்புவதும், நியாயம் கேட்க முற்படுவதும் கொழும்புக்கு வேம்பாகக் கசக்கின்றது.
அன்று சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை "பயங்கரவாத இயக்கமாக" மேற்குலகு பட்டியலிட்டபோது அதை வரவேற்றுப் பாராட்டி, தோழமை பூண்ட கொழும்பு, இன்று புலிகளின் ஆட்டம் காலி என்று தான் கருதும் நிலைமை வந்ததும், மேற்குலகைப் புலிகளின் ஆதரவு சக்தியாக அடையாளப்படுத்தி விரோதம் வெளிப் படுத்துகின்றது.
மேற்குலகைப் புறம்தள்ளி, ஜப்பான்,சீனா, ஈரான், லிபியா என்று கீழைத்தேய நாடுகள் பக்கம் தனது நட்புறவுக்கரத்தை நீட்டுகின்றது இலங்கை.அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல் காரசாரமாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக விமர்சிக்கும் அளவுக்கு மேற்குலகைப் பந்தாடும் நிலைக்கு கொழும்பின் தைரியம் போயிருக்கின்றது.நியாய, அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் "தேசம்" என்ற கட்டமைப்புக்குச் சார்பாகக் கண்மூடிக் கொண்டு ஆதரவு காட்டுவது என்ற பத்தாம் பசலித்தனமான போக்கைப் பின்பற்றியபடி கொழும்பு ஆட்சிப் பீடத்தை இதுவரை தூக்கிப் பிடித்த மேற்குலகுக்கு, கொழும்பின் இப்போதைய உதாசீனப்போக்கு நல்லதொரு பாடமாகும்.இலங்கையில் அமைதி முயற்சி ஆரம்பித்த காலத்திலேயே அதற்கு அனுசரணை வழங்கிய நோர்வேத் தரப்பினரும், யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கண்காணிப்புக் குழுவினரும் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி வந்தனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதி முயற்சிகள் நின்று, நிலைத்து, நீடித்து, ஒரு சமாதானத் தீர்வை எட்ட வேண்டுமாயின் அதற்குச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையிலான இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதே அக்கருத்தாகும்.
ஆனால், சமாதான முயற்சி சமயத்திலேயே ஒருபுறம் கட்டுமட்டில்லாத பொருளாதார உதவிகளைக் கொழும்புக்கு வழங்கி அதனை நேரடியாகப் பொருளாதார ரீதியிலும், மறைமுகமாக இராணுவ ரீதியிலும் வலுப்படுத்திய மேற்குலகு, மறுபுறத்தில் புலிகள் மீது தடை விதித்து, அந்த இயக்கத்தைப் பலவீனப்படுத்தி நலிவுற வைத்தது.அதன் விளைவையே இன்று நாம் களத்தில் தரிசிக்கின்றோம்.இத்தகைய இரட்டை நோக்குப் பணியில் மேற்குலகுடன் இணைந்து இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்றின.
இன்று எல்லோரும் சேர்ந்து தமிழர்களின் பேரம் பேசும் வலுவை நசுக்கிவிட்டாயிற்று எனத் திருப்திப்படுகின்றனர். ஆனால் தமிழர்களுக்கு நீதி செய்ய முடியாதவர்களாக அது விடயத்தில் கையாலாகாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.
புலிகளுக்கு எதிராக மேற்குலகு செயற்பட்ட போது மேற்குலகைத் தலையில் வைத்துக் கொண்டாடிய கொழும்பு, இப்போது தனது காரியம் "வெற்றிகரமாக" முடிந்து விட்டதாகத் திருப்திப்படும் வேளையில் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் மேற்குலகை சீற்றத்துடன் நோக்குகின்றது.போரழிவிலிருந்�
��ு தமிழர்களைக் காக்கவும் அவர்களுக்கு நியாயம் செய்யவும் மேற்குலகு இன்று கோரும் போது மேற்குலகைப் "பயங்கரவாதிகளுடன்" சேர்த்துப் பகிரங்கமாக அடையாளப்படுத்த முனைகின்றது கொழும்பு.அது மாத்திரமல்ல. மேற்குலகுக்குத் திருப்தி தராத ஓர் அசாதாரண அணியுடன் தான் ஒன்றிணைந்து, அமெரிக்கா உட்பட்ட வல்லாதிக்க சக்திகளுக்கு சவாலான ஒரு தேசமாகவும் தன்னை முன்னிலைப்படுத்தவும் அது முயல்வது தான் மிக வேடிக்கையானது.
பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கை மூலம் வெற்றிகொண்டு புதிய சரித்திரம் படைத்து, உலக நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாகத்தான் பரிணமித்திருப்பதாகக் கருதும் கொழும்பு, இந்த மிதப்பில் கொழுப்பில் உலக அரசியலரங்கில் புதிய நிலைப்பாட்டை வெளிப்படுத்த முனைகின்றது."சர்வதேச பொலிஸ்காரனாக" தன்னை வரித்துக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு நிரந்தர தலையிடி கொடுத்து வந்த நாடு கியூபா. அதனுடன் அண்மைக் காலத்தில் வெனிசூலா போன்ற தேசங்களும் இணைந்துள்ளன. "பயங்கரவாதத்துக்கு எதிரான தனது வெற்றியை" பெரும் உலக சாதனையாகக் கருதும் கொழும்பு, அந்தப் பெருமையோடு கியூபா, வெனிசூலா போன்றவை போல அமெரிக்கா உட்பட்ட மேற்குலகுக்குச் சவால்விடும் சக்தியாகத் தன்னைக் கருதுவதும் அந்தச் செருக்கில் கருத்து வெளியிடுவதும் பெரும் நகைப்புக்கிடமானவையாகும். உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது என்பதை அமெரிக்காவுக்கு சமதையாக இலங்கையை எண்ணி அதனடிப்படையில் பகிரங்கமாகக் கருத்து வெளியிடும் இலங்கை அதிகார வர்க்கம் கவனத்தில் கொள்வது நல்லது.
நன்றி : உதயன்.
Thursday, May 7, 2009
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
Posted by நிலவு பாட்டு at 8:39:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
today usa tommarow india get pain
Post a Comment