Saturday, May 16, 2009

இலங்கைக்கு பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை - மனிதாபிமான அமைப்புக்களை அனுமதிக்காவிடின் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்

பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை எனில் "அதற்கான விளைவுகளை" சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

"இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியப் பிரதமர் இந்த வார இறுதியில் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்திருக்கின்றது. இதற்கு முன்னரும் மகிந்த ராஜபக்சவுடன் பல தடவை தொடர்புகொண்ட பிரித்தானியப் பிரதமர் இந்த பிரச்சினை தொடர்பில் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

0 Comments: