Tuesday, May 12, 2009

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் ஏன்?

ஆறேழு மாதங்களாக இலங்கையில் இட்லர் ராசபக்சேவின் அகோரப்பசிக்கு ஈழத்தமிழர்கள் நாள்தோறும் இரையாகி வாழும் இல்லங்களே அவர்களுக்கு கல்லறையாக மாறியது; இல்லங்களை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்தனர் நம் தமிழர்கள். அவர்கள் நொடிக்கு நொடி மரணபயத்தோடு மரத்தடிகளில் வானமே கூரையாகக் கொண்டு இருந்தபோதுகூட குண்டுகளை வீசி குடும்பம் குடும்பமாக கொன்று குவித்து எங்கும் பிணக்காடாக மாற்றி மகிழ்ந்தது மகிந்தவின் அரசு. சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்ற குறிக்கோளோடு கொன்று குவித்துவருகிறது. தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் இந்த நேரத்தில் யாராவது போரை நிறுத்த மாட்டார்களா, இந்த மரணபயத்திலிருந்து விடுதலை கிடைக்காதா என்று தொப்புள்கொடி உறவாக எண்ணியிருக்கும் தமிழகத்தை எதிர்பார்த்தனர்.

ஆனால் நடந்தது என்ன? இந்திய அரசோ பிரபாகரனைப் பிடிப்பது ஒன்றே குறிக்கோளாக யுத்தத்தை நடத்த தமிழரைக் கொன்றுகுவிக்க சகலவிதமான உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. கருணாநிதி சட்டசபை தீர்மானங்கள், தந்திகள், மனிதச் சங்கிலி, தொலைபேசியினூடாக என்று ஒவ்வொரு நாடகமாக அரங்கேற்றினார். என்ன தகிடுதத்தம் செய்தாலும் திமுகவிற்கு எதிராகவே தமிழ் எதிர்ப்பாளர்கள் அலை திரண்டது.

தனது கூட்டணியில் இருந்துகொண்டே குழிபறித்த இராமதாசைக் காட்டிலும் தன் அரசியல் எதிரியான செயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருத்தையே கூறிவந்தவர் இலங்கைப் பிரச்னை ஒன்றே தேர்தலுக்கு சரியான ஆயுதம் என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செயல்பட அதற்கேற்றவாறு அரசியலில் காய் நகர்த்த வேண்டிய சூழலுக்கு கருணாநிதி தள்ளப்பட்டார். அதனால் ஏப்ரல் 21ம்தேதி செயலலிதா ‘இலங்கைப்போரை நிறுத்தக் கடிதம், தந்தி அனுப்பி நாடகமாடுகிறார் கருணாநிதி’ என்று வெகுண்டு அறிக்கை விட்ட கையோடு வைகோ மற்றும் இராமதாசோடு ஒரு நாள் பந்த் நடத்த ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தத் தகவல் கசிந்து கருணாநிதியை அடைந்த மறுநொடியே வெகுவேகமாகச் செயல்பட்டு பொதுவேலை நிறுத்தம் என்று முந்திக்கொண்டார்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் குட்டுப்பட்ட கருணாநிதி இந்த முறை கொஞ்சம் அரசியல் + அரசு என்று இரண்டுவிதமான அணுகுமுறையை கடைப்பிடித்து பந்தை வெற்றிகரமாக நடத்தினார். இரட்டை அணுகுமுறை என்றால் என்ன என்கிறீர்களா? அது திமுக தலைவர் என்ற முறையில் பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு! தலைமைச் செயலாளர் வழக்கம்போல் பஸ் ஓடும், அரசு அலுவலகங்கள் இயங்கும்; கடைகளை யாரும் அடைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்ற "எச்சரிக்கை" அறிவிப்பு உச்சநீதிமன்றக் கண்களை மறைக்க! இரட்டைவேடம் போடும் கருணாநிதிக்கு இது கைவராத கலையா என்ன?

பார்த்தார் செயலலிதா! நாம் கிணறுவெட்டினால் பூதம் கிளம்பிவிடுகிறதே! இதைவிட தூக்கிச் சாப்பிடும் ஐடியா என்ன என்று பார்த்தார்! வைகோவே அசந்து போகும் அளவுக்கு அடிச்சார் ஒரு அந்தர் பல்டி! அதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அள்ளித் தெளித்தார்!

செயலலிதாவின் இந்த அறிவிப்பைக் கேட்டு, இதைத்தானே பிரபாகரன் செய்கிறார்; அடுத்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டு விசயத்தில் இப்படி ஏடாகூடமாக இந்திய இறையாண்மைக்குச் சவால் விட்ட தன்னை கருணாநிதி கைது செய்வார் என்றும் அதை வைத்து ஒரு அருமையான அறுவடையை தேர்தலில் நடத்திவிடலாம் என்று மனக்கணக்குப் போட்டுக்கொண்டிருக்க நம்ம கருணாநிதி தடாலடியாக "உண்ணாவிரதம்" அறிவித்தார்!? எப்போது?

மக்களின் இழப்புக்களை நிறுத்தி, மனிதாபிமான வழங்கல்களை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு போர் நிறுத்தப்பட்ட சூழல் அவசியமானது என்கின்ற அனைத்துலக சமூக வேண்டுதல்கள் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இதற்கான முதல் முக்கிய படியாக நாங்கள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பினை இன்று விடுக்கின்றோம் என்று விடுதலைப்புலிகள் 26ம்தேதி அறிவித்த சூழலில் 27ம்தேதி கருணாநிதி கடற்கரையில் உண்ணாவிரதத்திற்கு வசதியாக உட்கார்ந்தார்; அதன் பின் சிறிது நேரம் ஒரு சொகுசுப் படுக்கையே கொண்டுவந்து போடப்பட்டு கடற்காற்றையும் விஞ்சும்வகையில் ஏர்கூலர்கள் சகிதமாக ஒரு அஞ்சு மணிநேரம் இருந்தார். இதற்குள் அறுபத்தெட்டு மருத்துவப் பரிசோதனை வேறு?

காலையில் இலங்கையரசு, ‘பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என (http://www.defence.lk/new.asp?fname=20090427_06) பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. இதற்காகவே காத்திருந்த சிதம்பரம், "அய்யா போரை நிறுத்திட்டாங்க, உங்க உண்ணாவிரதம் பலனைக் கொடுத்திருச்சு’ என்று கூவ அடுத்த நேரச் சாப்பாட்டுக்கும் நேரம் ஆகிவிட சுருக்கமாக ரொம்ப மகிழ்ச்சியோடு உண்ணாவிரத வேடத்தைக் கலைத்து நிறைவு செய்துகொண்டார்.

ஒரு விசயத்தில் இலங்கையரசைப் பாராட்டவேண்டும். இந்தியா என்னதான் மறைமுகமாக ஒன்றைச் செய்து வேறு ஒன்றைச் சொன்னாலும் அடுத்த நாளே இலங்கையில் ஏதாவது ஒரு கோமாளி உளறிக்கொட்டுவது வழக்கம். இந்தியா எந்த ஆயுதத்தையும் இலங்கைக்கு வழங்கவில்லை என்று இங்கு முகர்ஜி அலர்ஜியோடு சொல்லி முடிப்பார்; அதற்குள் அங்குள்ள இராணுவ அதிகாரி இந்தியா வழங்கிய இராணுவ உதவிக்கு நன்றி தெரிவித்து பிரஸ் மீட் வைப்பார்; இந்தியா எந்த இராணுவ வீரர்களையும் போருக்கு அனுப்பவில்லை என்பார். அடுத்த நாளே போர் முனைத் தாக்குதலில் காயம்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக அறிக்கை கொடுப்பார்கள். அதே போலத்தான் இந்தப் போர் நிறுத்த விதயத்திலும் நடந்தது. ஆனால், பொறுப்பான பதவியில் உள்ள சிதம்பரம் எந்த ஆதாரமுமில்லாமல் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது என்று முதலில் சொல்லலாமா?

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் போர் நிறுத்தம் குறித்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதை இங்கு அப்படியே தருகிறேன். http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9370&Itemid=44

"விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாகவும் பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என்று தெள்ளத் தெளிவாக மேற்கோள்காட்டி இலங்கை ராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுவிட்டது.

இப்போது கருணாநிதி மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்கப்போகிறாரா, என்ன? இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று முத்துக்குமார் உட்பட பலர் தீயாடி உயிர் நீத்த உத்தம்ச் சாவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத இந்த உத்தமர் தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயம் வர இப்படி நாடகம் நடத்தி தமிழக வாக்காளர்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவது கேவலம் என்பது கருணாநிதிக்குத் தெரியவில்லை.

காங்கிரசை கைகழுவிவிடுவார்களோ என்ற பயத்தில் பிரதமரும் இலங்கைத் தமிழர்களுக்கு நூறுகோடி அறிவிப்பு! இதெல்லாம் எதற்கு? ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அவர்களின் சவ அடக்கத்திற்கு உதவியா? இல்லை இலங்கைத் தமிழர்களுக்கு உதவி என்ற பெயரில் கொன்றுகுவித்த இராசபக்சே அரசுக்கு பரிசுத் தொகையா? எப்படியாவது தமிழ் நாட்டு வாக்குகளை காங்கிரசும் அள்ளிவிடவேண்டும் என்பதற்காக என்பது சராசரி தமிழனுக்கும் தெரிந்த உண்மைதானே! செயலலிதா அம்மையார் தனி ஈழம் நாங்கள் வந்தால் அமைப்போம் என்பதால் வாக்குச் சிதறிவிடுமோ என்ற பயத்தில் ஓட்டுப் பொறுக்கவே இந்த நாடக அரங்கேற்றம்! திரையுலகிலிருந்து வந்து நடிகர்கள் அரசியல் செய்கிறார்கள்; அரசியலிலில் உள்ள அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறும் நேரமா இது? இதுவரை அரங்கேற்றிய நாடகங்களில் ஒரு வேளை உணவுக்கும் மறு நேர உணவுக்கும் உள்ள இடைவெளியில் சகல வசதிகளோடு கடற்கரையில் காற்றுவாங்கிவிட்டு எழுந்துபோனால் அது உண்ணாவிரதமா? பலே..பலே கருணாநிதி எழுதி நடிக்கும் பல திரைக்கதை நாடகங்களில் இதுவும் ஒரு நாடகம் அன்றோ!?

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (albertgi@gmail.com)

0 Comments: