Sunday, May 24, 2009

ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம் இணையத் தமிழர் இயக்கம்

அன்பான எம் தமிழ் உறவுகளே…

அலை அலையாய் பறந்து வந்த ஊடகச் சதிகளினால் சிக்குண்டு எதுவும் செய்ய இயலா குற்ற உணர்ச்சியில் .. தன்னைத் தானே உளவியலாய் சிதைத்துக் கொண்டிருக்கும் எம் இனமே…

தூர எறியுங்கள் துக்கங்களை கண்ணீர் துளிகள் எதையும் நமக்கு பெற்று தரப் போவதில்லை.

இதுவரை நாம் நிலை கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்கு நாமே மறுபரிசீலனை செய்வதற்கான காலமும், தீர்க்க விழிகளுடன் நமக்கான இலக்கை நோக்கை நடக்க வேண்டிய நேரமும் நமக்கு ஒருங்கே அமைந்து வந்திருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் இழப்புகள் ஏதுமின்றி நிகழ்ந்ததில்லை. அதற்கு நாமும் விதிவிலக்குகள் அல்ல.

அப்பழுக்கற்ற தியாகமும், நேர்மையும், வீரம் செறிந்த அறமும் உடைய தன்னிகரற்ற மாமனிதன் நம் தேசிய தலைவர் அவர்கள். கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் இனத்து ஒட்டு மொத்த வரலாற்றின் பெருமை மிகு அடையாளமும் அவரே. மாறாத புகழ் அடையாளமாய் நம் நெஞ்சில் தரித்திருக்கும் நம் தலைவருக்கு ஊடக வியாபாரிகள் மரண வேடம் புனைய முயன்று வருகின்றார்கள். எவ்வித அடக்குமுறைகளுக்கும் அஞ்சாது, துயிலாது இன்று கனன்று கொண்டிருக்கும் நம் இனத்திற்கான விடுதலை வேட்கையை நம்முள் விதைத்து, உலகத் தமிழினத்தை இன்று ஒரே இழையில் கோர்த்திருக்கும் நம் தேசிய தலைவருக்கு எக்காலத்திலும் மரணமில்லை. எம் இனம் உள்ளளவும் தமிழ் பேசும் இறுதி உதடுகள் உள்ளளவு தலைவர் இருப்பார்.

ஊடக வியாபாரிகள் சிங்கள இன வெறியாட்ட கூட்டத்திடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் நடத்தும் தோல் பாவை கூத்தினை ஒளிபரப்பி நம் கவனத்தை திசை திருப்புவதில் ஒரளவு வெற்றி பெற்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 4 தினங்களாக நம் தேசிய தலைவர் குறித்தான செய்திகளிலேயே நம் கவனம் நிலைக் கொத்தி நின்றதே ஒழிய அங்கே இன்னமும் அல்லலுற்று, அவதியுற்று காயம் பட்டு குற்றுயிரும், கொலையுயிருமாய் சிக்கிக் கிடக்கும் நம் சகோதர, சகோதரிகளின் பால் திரும்பியதா என்றால், வெட்கத்தோடு ஒப்புக் கொள்வோம். இல்லை.

இதைத்தான் சிங்கள அரசும்., இந்திய உளவுத் துறையும், பார்ப்பன ஊடக வியாபாரிகளும் எதிர்பார்த்தனர். எதிரிகள் நினைப்பது போலவே வீழ்கிற நம் மனநிலையை நம் தேசிய தலைவர் விரும்புவாரா?. இப்படி நித்தமும் வரும் செய்திகளில் சிக்கிக் கொண்டு உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு கலங்கி நிற்கும் வலுவிழந்த மனநிலை ஒரு தேசத்தை கட்டி எழுப்பக் கூடியதா?

யோசித்துப் பார்ப்போம் உறவுகளே! நம் தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற தனிமனிதனால் கட்டப்பட்டது தான் நம் விடுதலை இயக்கம், தமிழீழ நாடு என்ற அனைத்துமே... நம் இனத்தில் உதித்த அந்த உத்தமருக்கு இருக்கும் உழைப்பும், மனநிலையும் நமக்கேன் இல்லாமல் போனது? தலைவரும், இயக்கமும் மட்டுமே களத்தில் நின்று போராடி தேசம் பெற்று தருவார்கள் என்ற எண்ணம் நமக்குள் ஊறிக் கிடப்பது தவறுதானே…?. நம் இனம் விடுதலை இரண்டாம் பட்சம்.. நம் மனநிலைக்கான விடுதலைதான் முதல் கட்டம். இதைத் தான் நம் தலைவர் நமக்கு இந்த நொடி வரை போதித்து வருகிறார். இப்படி ஒரே ஒரு தனிமனிதனை சார்ந்து அவரின் தலையில் அனைத்து சுமைகளையும் சுமத்தி விட்டு எதையும் செய்யாமல்.. நமக்கான நாடு அமையும் என கனவில் முழ்கிக் கிடப்பது நியாயம் தானா..?

ஒரு செய்தி வருகிறது. கலங்கி அழுகிறோம்.. துவண்டு விழுகிறோம்… மது குடித்து திரிகிறோம். கும்பல் கும்பலாக பேசி களைக்கிறோம். அலைபேசி குறுஞ்செய்திகளை அனுப்பி மேலும் குழம்பி…குழப்புகிறோம்…இதைத் தவிர கடந்த நாட்களில் நாம் சாதித்தது என்ன…?.

இப்படி புலம்பி.. அழுது திரிவதன் மூலமாக நாட்களைக் கரைப்பது யாருக்கு லாபமாக அமையும் என்பதனை சற்று யோசித்துப் பாருங்கள். உலக வல்லாதிக்க நாடுகள் அதிகார, பொருளாதார நோக்குகளுடன் ஈழ இனப் பிரச்சனையை கையாண்டு வருகிறார்கள். சிங்கள அரசு தமிழனை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உலக வல்லாதிக்கத்தின் பிடிகளுக்குள் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டது. ராஜபக்சே என்ற மூர்க்க முட்டாளுக்கு ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை கனரக ஆயுதங்கள் மூலமாக களைய முடியாது என்ற அறிவிருக்காது என்பது உண்மைதான். ஆனால் எதிரிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு உளவியலாய் நம்மை பலிக் கொடுப்பது என்பது எதிரியின் கனரக ஆயுதங்களை விட நமக்கு எதிரானது இல்லையா..?

கோடிக்கணக்கான மக்களை இழந்த பிறகும் யூதர்களால் ஒரு இஸ்ரேலை எழுப்ப முடியும் போது நம்மால் முடியாதா…என்ன..? முடியும்.. நிச்சயம் முடியும்.

தாயகத் தமிழகத்தில் அறியாமையினாலும் சுயநல வாழ்க்கை முறையினாலும் உணர்வற்றுத் திரிகிற நம் சக தமிழனை அறிவு வயப்படுத்தி மக்கள் போராட்டமாக புரட்சியாக ஈழ ஆதரவு உணர்வினை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராஜபக்சேவும், அவனது படைகளும் செய்த போர்க்குற்றங்களை, இனப் படுகொலை நடவடிக்கைகளை, மனித உரிமை மீறல்களை உலக சமூகத்திற்கு அம்பலப்படுத்தி தீரவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். இந்த நொடி அளவிலும் சிங்கள பேரினவாத அரசின் முகாம்களில் சிக்கித் தவிக்கும் மக்களையும் இன்னமும் போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கிற, காயம்பட்டு கதறிக் கொண்டிருக்கிற தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு சர்வ தேச சமூகத்திற்கு இருக்கிறது என உணர்த்த வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.

மரணக்குழிகளுக்குள் போன மாவீரர்களின் கனவான தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தமிழீழ நாடு என்ற இலட்சியத்தினை மெய்பிக்க அனைத்து வல்லாதிக்க சக்திகளையும் எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்..

இதையெல்லாம் செய்யாமல் இன எதிரிகளின் ஊடக சதிகளுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டு, தேங்கி நின்றோமானால் இது வரை நடந்த பேரழிவினை மிஞ்சிய அழிவு நிகழும் அபாயம் இருக்கிறது.

எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும். அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.

எந்த செய்தி வேண்டுமானாலும் வரட்டும். படங்கள், வீடியோ என நாடகங்கள் நடக்கட்டும். அவற்றில் நம் மனநிலையை தவற விட்டு நம் கனவினை நாமே சிதைத்துக் கொண்ட அவலத்திற்கு ஆளாக வேண்டாம். உறுதியோடு நிற்போம். உயிர் உள்ள வரை போராடுவோம். இறுதித் தமிழன் இருக்கும் வரை கனவு மலர களம் காண்போம். ஏற்கனவே புலம் பெயர்ந்த நம் உறவுகளின் கடுமையான போராட்டம் உலக நாடுகளின் மனசாட்சியினை உலுக்கி வருகிறது. நாமும் உலகமே உற்று நோக்கக் கூடிய வகையில் மிகப் பெரிய போராட்டங்களை, எழுச்சிகளை தாயக தமிழகத்தில் உருவாக்க வேண்டியது அவசியம். நம் இனத்திற்கு நேர்ந்த அழிவினை எதிர்த்து மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் அளவற்ற உத்வேகத்துடன் போராட துவங்க வேண்டும்.

நம் மத்திய அரசு சிங்கள பேரினவாத அரசிற்கு செய்து வருகின்ற உதவிகளை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் வலிமையான போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கும் விதமான நிர்பந்தங்களை சிங்கள அரசிற்கும், நம் மத்திய அரசிற்கும் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான போராட்டங்களை நிகழ்த்துவோம். மக்கள் சக்தியை திரட்டுவோம். நிகழ்ந்து முடிந்திருக்கும் இனப் பேரவலத்தினை உலகக் கண்களுக்கு திரையிட்டு காட்டுவோம்.

இணையத் தமிழர் இயக்கம் சார்பாக வரும் வாரத்தில் கும்பகோணம் அல்லது சென்னையில் ஒரு மாபெரும் வீரவணக்க நிகழ்வும், பொய் பிரச்சார முறியடிப்பு பரப்புரையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

பிழைப்புவாத அரசியல் தேர்தலில் இன எதிரிகளுக்கு வலுவில்லாத பின்னடைவினை ஏற்படுத்தியது போல இந்த முறையும் நாம் ஏமாறக் கூடாது. ஊருக்கு ஊர் இருக்கும் தமிழுணர்வாளர் அமைப்புகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி நாடு தழுவிய மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக சாத்தியப்படுத்துவதன் மூலமே நமக்கான தீர்வு அடங்கியுள்ளது.

ஓயாத அலைகளாய் சுழன்றடிப்போம்…
துவண்டு கிடக்கும் நாமும்..விழிகளை துடைத்துக்கொண்டு…
ஒரு தேசம் உருவாக களத்தினை இங்கே கட்டி எழுப்புவோம்..
உயிர்த்தெழுவோம். உருவாவோம்.
தமிழர்களின் தாகம்…. தமிழீழ தாயகம்.

இணையத் தமிழர் இயக்கத்தின் சார்பாக..
மணி.செந்தில், யுவன்பிரபாகரன், சேனா.பானா, விஷ்ணுபுரம் சரவணன்,இளவரசன்,பிரபாகரன்,
நாசர், பாலா,செந்தில்,ஜெயக்குமார்.

- மணி.செந்தில், கும்பகோணம் (advmsk1@gmail.com)

நன்றி http://www.keetru.com/literature/essays/mani_senthil_3.php

0 Comments: