Tuesday, April 21, 2009

40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் முடிவி

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கே ஆதரவாக எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இன்று துவக்கி உள்ளனர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிப்பதற்காக மத்திய சென்னையில் இதனை இன்று அவர்கள் துவக்கி உள்ளனர்.
.
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.எஸ். மூலமும், நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னாவை ஆதரித்து அவர்களின் எஸ்.எம்.எஸ். பிரச்சாரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு இன்று துவக்கி வைத்தார். கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடந்த இந்த துவக்க விழாவுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய நல்லகண்ணு கூறியதாவது:-

தொலைக்காட்சித் துறையில் தனியார் ஆதிக்கம் காரணமாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலை உருவாகி வருகிறது. திமுக தலைமைக்கும், தனியார் டிவி நிறுவனருக்கும் இடையே உருவான குடும்பத் தகராறு காரணமாக அரசு தரப்பில் கேபிள் டிவி துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் ஏதோ சில காரணங்களால் அதில் தடங்கல் ஏற்பட்டு இன்று அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அரசு கேபிள் டிவியை நம்பி தொழில் தொடங்க வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தற்போது தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசின் இந்தப் போக்கின் காரணமாக அதிமுக கூட்டணிக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் பிரச்சாரம் செய்ய முன்வந்த கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவிஆப்பரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுமார் 100 கோடி ரூபாய்செலவில் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது. சுயநலம், சுயலாபம் காரணமாக இது தற்போது முடக்கப்படும் நிலை நீடிக்கிறது. அரசு இதை அறிவித்த போது இதனை வளர்க்க லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன் வந்தனர். ஆனால் சொந்த நலன் கருதி இதை கைவிட்டு விட்டார்கள்.

எனவே திமுகவுக்கு பாடம் புகட்ட நாங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள ஜெயலலிதா வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம்.

ஒரு லட்சம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 3 லட்சம் ஊழியர்களும் இந்த ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர் களை நசுக்க நினைக்கும் தயாநிதி மாறனை தோற்கடிக்கவே மத்திய சென்னையில் இந்த பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இங்கு நிச்சயம் அதிமுக வேட்பாளர் முகமது அலி ஜின்னா வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கம்யூனிஸ்ட் நிர்வாகி சி.மகேந்திரன் உடனிருந்தார்.

0 Comments: