Sunday, April 12, 2009

பிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்

வரவிருக்கும் தேர்தலில் கட்சிகளுக்கான எத்தனையோ நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி எழுதப்படாத நடத்தை விதிகளில் ஒன்றாக மாறிப் போனது தமிழகக் கட்சிகள் வெளிக்காட்டும் இலங்கைப் பிரச்னை குறித்த மௌனமும்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் சிறு நிலப்பரப்பிற்குள் திறந்தவெளிச் சிறை மாதிரி அடைபட்டிருக்கிறார்கள். யுத்தத்தில் புலிகளின் உயிர்ப்பலியை ரத்த ருசியுடன் சொல்கிறது இலங்கை ராணுவம்.

ஐ.நா. தொடர்ந்து எச்சரிக்கிறது. கடந்த ஜனவரி முதல் 2800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இந்தியா மென்மையாகக் கண்டிக்கிறது. இருந்தும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

தமிழகத்திலோ, தேர்தல் முழக்கங்களுக்கும் பிரசாரத்திற்கும் முன்னால் இலங்கைத் தமிழர்களின் உயிர் பறிபோகும் குரல்களும் எங்கிருந்தாவது எழும் ஒற்றுமைக்குரல் எங்களை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்காதா என்று ஏக்கமும் தவிப்பும் கலந்த எதிர்பார்ப்புகளும் மங்கிப் போய்விட்டன. தமிழினப் பாசங்கள் நீர்த்துப் போய்விட்டன.

எப்படியாவது இலங்கையில் போர் நிறுத்தம் வராதா என்கிற நோக்கத்துடன் 15 தமிழ் உயிர்கள் தங்களைக் கட்சி சார்பின்றி பொசுக்கிக் கொண்டதோடு சரி. அவர்களின் சாம்பலின் மீது உதிர்க்கப்பட்ட சொற்களின் உஷ்ணத்தையெல்லாம் தேர்தல் புகுந்து பிசுபிசுக்க வைத்துவிட்டது.

இலங்கையில் இந்த அளவுக்கு நெருக்கடி உருவானதன் பின்னணி யில் எத்தனையோ கரங்கள் இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன. `தாய்த் தமிழகம்' என்று உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டில் தேர்தல் குறுக்கே வந்து குறைந்தபட்சக் குரல் கொடுத்தவர்களையும் அணி பிரிக்க - ஏன் இந்த வேடிக்கை?

இந்த மௌனம் நீடித்தால் - கடலில் தவித்து தமிழகக் கடற்கரையில் அகதியாய்க் கரையேறக்கூட யோசிப்பார்கள் இலங்கைத் தமிழர்கள்..

0 Comments: