Monday, April 13, 2009

தமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து

எனக்கு இந்தியக் குடி உரிமையும் இல்லை,வாக்குரிமையும் இல்லை,ஆனால் இந்திய விவகாரங்களில் ஈடுபாடு உண்டு.உலகம் சுருங்கி விட்ட நிலையில் அமெரிக்க தேர்தலில் இந்தியருக்கு இருந்த அக்கறையை ஈடுபாடை விட எனக்கு இந்தியாவின் தேர்தலில் அதிகமான ஈடுபாடும் அக்கறை மட்டுமல்ல ,தமிழினத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் உரிமையும் உண்டு.

அது மட்டுமல்ல இந்திய மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஈழத்தமிழரின் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் பாதித்து வந்திருக்கிறது.இப்போதும் பாதித்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நான் பிறப்பதற்கு ;பல காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன ஆனால் அதன் பின் விளைவுகளை ஈழத்தமிழர்கள் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளி தமிழர்களின் குடி உரிமையைப் பறிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்ததில் இருந்து கச்சை தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததில் தொடர்ந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு முதலில் ஆதரவு கொடுத்து பின்பு அவர்களுக்கு மத்தியில் பிரிவினையைத் தூண்டி சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததில் இருந்து இந்தியாவின் பங்கு தொடர்ந்து கொண்டு போய் அதன் உச்சக் கட்டமாக இந்திய அமைதிப் படையை அனுப்பி பத்தாயிரம் ஈழத்தமிழர்களின் உயிரை எடுத்ததில் இருந்து இன்று இலங்கை அரசின் இனப்படுகொலை யுத்தத்திற்கு உதவி செய்வது வரை இந்திய அரசு ஏதோ ஒரு விதத்தில் ஈழத்தமிழரின் நவீன பின் காலனித்துவ வரலாற்றில் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ளது.

அந்த விதத்தில்தான் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் --பெரும்பாலான இந்த நடவைக்கைகள் திரைமறைவில் நடப்பவை.- ஈழத்தமிழரை நிச்சயம் பாதிக்கும். என்பதால் இந்தியாவின் தேர்தலில் அக்கறை காட்டுகிறேன்.
அந்த விதத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஒரு காலத்தில் நான் திமுகவின் ஆதரவாகத்தான் இருந்தேன் ,அவர்களின் ஆரம்ப கால கொள்கைகளான தமிழ் உணர்வு,சாதி எதிர்ப்பு ,மதச்சார்பின்மை எளிய பாமர மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மை என்பவற்றால் ஈர்க்கப் பட்டேன் ,சமீப காலம் வரை செல்வி.ஜெயலலிதாவுடன் ஒப்பிடும் போது திரு கருணாநிதி பரவாயில்லை என்று நினைத்திருந்தேன்.

ஆனால் திமுக இன்று கொள்கையில் சோரம் போன ,பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொண்ட ஒரு குடும்ப இயக்கம்மாக மாறிவிட்டது.
அதை விட மோசம் ,ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட அதைத் தடுக்க எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ,இலங்கை அரசுக்கு துணை புரியும் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆறு மாதத்துக்கு முன்பு ஆரம்பித்த தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு என்ற மக்கள் கிளர்ச்சியைத் தடுத்ததில் கருணாநிதி அவர்களின் பங்கு பெரியது .அது மட்டுமில்லை ஈழ ஆதரவாளர்களையும் ,தமிழ் உணர்வாளர்களையும் சிறையில் தள்ளி கருத்து சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் திரு கருணாநிதி காலில் போட்டு மிதித்து உள்ளார் இந்த விஷயத்தில் இவரும் ஜெயலலிதாவிற்கு சளைத்தவர் இல்லை.

ஜெயலலிதா பிரபாகரனைப் பிடியுங்கள் ,போரில் சாவது தவிர்க்க முடியாதது என்று எல்லாம் திருவாய் மலர்ந்து இருக்கிறார்தான் இவை எல்லாம் வாய் மொழிகள்தான் ,அவர் செயல் ரீதியாக இன்னும் ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை கரிக்கட்டைகளாக ஆக்கும் சிங்கள அரசுக்கு உதவும் காங்கிரசுக்கு ஆதரவு காட்டியதின் மூலம் கடந்த பல மாதங்களாகக் கொல்லப் படும் ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கும் மறைமுகமாக உதவி உள்ளார்.

எல்லோரும் சொல்கிறார்கள் ,அவரால் என்ன செய்திருக்க முடியும் என்று.
அவரால் நிறைய செய்திருக்க முடியும் ,ஆறு மாதங்களுக்கு முன்பே துணிச்சலாக நேர்மையாக இதய சுத்தியோடு ஈழத்தமிழரின் விடயத்தில் அவர் நடந்திருந்தால் இந்திய மத்திய அரசின் போக்கில் அவர் மாற்றம் கொண்டுவந்திருக்கலாம் இந்தியாவின் ஆதரவு இருந்த படியால்தான் இந்த சின்ன ஸ்ரீலங்கா இவ்வளவு திமிர்த்தனமாக நடக்கிறது. இந்தியாவும் இலங்கை போரில் சம்பத்தப்பட்டு உள்ளதால்தான் மற்றைய உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கைமீது காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
எனவே சொல்லுகிறேன் ,அதிமுக வென்றாலும் பரவயில்லை என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன்.

ஜெயலலிதா தமிழ் உணர்வு இல்லாதர்தான் ,ஆனால் முதியவருக்கு அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மதத்துவேஷக் கொள்கை உள்ளவர்களோடு கூடிக் கொஞ்சுபவர்தான் ஆனால் கருணாநிதி அவர்களும் பாஜக வுடன் கூட்டணி வைத்த்வர்தானே
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கிறார்,
கருணாநிதி அவர்கள் செய்தே இருக்கிறார்.

ஜெயலலிதா தமிழின எதிரி என்று சொல்லப்படுபவர் ஆனால் எதிரிகளுடன் போராடுவது சுலபம் ,ஏனெனில் அவர்கள் வெளிப்படையானவர்கள்
ஆனால் துரோகிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ,ஏனெனில் அவர்கள் நயவஞ்சகத்தனமாக இருந்து நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களை அழித்து நம்பிக்கை துரோகம் செய்து முதுகில் குத்துவார்கள்.

ஒருகாலத்தில் அதிமுக வெற்றி பெற்றால் வருத்தபடுவேன் இப்போது அப்படி இல்லை.
காங்கிரஸ் தோற்றால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

-வானதி

sorry I have put the same comments on an other blog as well.
but as I am not sure whether that will be published I have put the same comments here,hope you don't mind .

3 Comments:

Anonymous said...

WELL SAID.................!

நிலவு பாட்டு said...

நன்றி வானதி அவர்களே, உங்களின் கருத்துக்களுக்கு. நெத்தியடியாக உங்களின் கருத்துகள் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

நண்பர் வானதி போன்று யார் வேண்டுமானாலும் கருத்து கூறுங்கள், பிரசுரிக்க தயாராக உள்ளேன். தமிழின வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள்.

LKritina said...

nandri vanathi!! please continue writing like this!! I like your thinking, thoughts, words...