Wednesday, May 13, 2009

''இத்தாலி ராணிக்கு இனிதான் புரியும்!'--கொந்தளிக்கும் அமீர்

ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய

உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை.

வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

அமீர் அடக்கப்பட்டாரா? அவரிடமே கேட்டோம்.

''யாரும் என்னை மிரட்டவில்லை. யாருடைய மிரட்ட லுக்கும் நான் தலைவணங்க வேண்டிய அவசியமும் இல்லை. கனடா வாழ் பத்திரிகை ஆசிரியரான வேந்தன் உள்ளிட்டோர் கேட்டதற்குஇணங்க, இருபதாயிரத்துக்கும் மேலாக குழுமியிருந்த கனடாவாழ் தமிழர்களிடம் நான் போனில் பேசினேன். அது அங்கே ஸ்பீக்கர் மூலமாக ஒலிபரப்பப்பட்டது. 'ஈழத்தின் தாலியை அறுக்கிற பெண்ணை 'அன்னை' என அழைப்பது தாய்மையையே அவமானப்படுத்தும் செயல்' என்றுதான் சொன்னேன். இப்போதும் அந்தக் கருத்தில் எனக்கு மாற்றமில்லை. இலங்கைப் போரை நிறுத்தக் கோரி இங்கிலாந்து மகாராணியின் வீட்டை தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு, வீட்டை விட்டே ராணி வெளியேற முடியாதபடி பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும், இங்கிலாந்து ராணி 'போராட்டம் நடத்தும் தமிழர் களைத் தடுக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்' எனப் பெருமனதோடு சொல்லி இருக்கிறார்.

இங்கிலாந்து ராணிக்கு இருக்கும் ஈவு இரக்கம், இத்தாலி ராணிக்கு ஏன் இல்லை? இதிலிருந்தே இலங்கையில் போரை நடத்தும் சூத்திரதாரி சோனியாதான் என்பது பச்சைப் பிள்ளைக்கும் புரிந்து விடுமே... தமிழன் கொத்துக் கொத்தாக செத்துக் கிடக்கும் நேரத்தில், அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத சோனியா, இழவு வீட்டில் ஆதாயம் தேடும் ஆளாக தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார். காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரத்துக்குப் போன திரைத்துரையினர் மீது உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆட்கள் காட்டுமிராண்டி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலாக போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்து எறியப்படும். பி.ஜே.பி-யை மதவாதக் கட்சி என்பதுபோல் காங்கிரஸை இனவாதக் கட்சியாகத்தான் இனி தமிழ் மக்கள் பார்ப்பார்கள்!'' எனக் கொதித்தவரிடம்...

''திரைத்துறையினர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பகிரங்கமாக வாக்கு கேட்கப் போவது தெரிந்துதான் நீங்களும் சேரனும் பிரசாரத்தில் பின்வாங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறதே?'' எனக் கேட்டோம்.

''இரட்டை இலைக்கு வாக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும், 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்' என ஜெயலலிதா முழங்கி இருப்பது உணர்வாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது. 'யோகி' பட வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதால்தான் என்னால் பிரசாரத்துக்குப் போக முடியவில்லை. நான் பிரசாரம் செய்யவில்லை என்றால் என்ன? தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை இத்தாலி ராணிக்கு நம் தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும்...'' - சீறி முடித்தார் அமீர்.

பார்ப்போமே..!

- இரா.சரவணன்

0 Comments: