Thursday, May 7, 2009

துரோகக் குற்றச்சாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தப்ப முடியாது

தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த துரோகக் குற்றச்சாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தப்ப முடியாது என்பதையும், வரலாறும், தமிழர்களின் சந்ததிகளும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தீவில் தமிழ் இனப்பேரழிவுக் கொலைகளை நடத்தி வருகின்ற அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், 90-களில் செம்மணியில் 400-க்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை, இன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து படுகொலை செய்து, அனைவரது உடல்களையும் புதைகுழியில் புதைக்கக் காரணமானவனும், இன்றைய ராணுவ அமைச்சகச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, நேற்று முன்தினம், மேற்கத்திய நாடுகளை இழிவுபடுத்தி குற்றம் சாட்டி இருக்கிறார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் கோரிக்கை அயோக்கியத்தனமானது என்று கண்டனம் தெரிவித்துவிட்டு, இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய அரசு உதவுகிறது என்று பாராட்டி உள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சரான, தமிழகத்தில் பிறந்த சிதம்பரம், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று, ராஜபக்சேவின் ஊதுகுழலாக துரோகச் சொற்களை வீசி உள்ளார்.

மூன்றரை லட்சம் தமிழ் மக்களை, பட்டினி போட்டுக் கொல்ல ராஜபக்சே அரசு திட்டமிட்டு விட்டதால், பழியில் இருந்து தப்பித்துக்கொள்ள, கலைஞர் கருணாநிதி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உள்ளதாக, கடந்த ஐந்து நாட்களாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார். இதில் 98 விழுக்காடு சிங்களவர்களுக்கும், சிங்களப் படைகளுக்கும் தான் போய்ச் சேருகிறது.

விஷ வாயு தாக்குதல்…

இப்போது வந்துள்ல ஒரு தகவல் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. உலக நாடுகள் தடை செய்து உள்ள நாசகார ரசாயனக் குண்டுகளை, விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, முல்லைத்தீவில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்கு உரிய ஆயுதங்கள் இந்திய அரசால் தரப்பட்டவை என்றும்,

அப்படி குண்டுகளை வீசுகிறபோது, விஷ வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிகள் யூதர்களை அடைத்துக் கொன்றது போல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவர் என்றும், அச்சமயத்தில் சிங்கள ராணுவத்தினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கின்ற நவீன முகமூடிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் கிடைத்து உள்ள நம்பகமான தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.

இப்படி ஒரு பேரழிவு நடக்குமானால், அதற்கான முழுப்பொறுப்பு, மரணப்பழிக்கு, சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் இயங்கும் இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்.

தமிழ் இனத்தையே கருவறுக்க, ராஜபக்சேவோடு சேர்ந்துகொண்டு, மத்திய அரசை ஆட்டிப் படைக்கின்ற சோனியா காந்தி வகுத்த சதித்திட்டத்தால்தான், ஐந்து ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு, இந்திய அரசு திட்டமிட்டே ஆயுத உதவிகள் செய்து உள்ளது என்பதற்கு, அசைக்க முடியாத ஆதாரங்கள், சாட்சியங்கள் ஏராளம் உள்ளன.

தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த துரோகக் குற்றச்சாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தப்ப முடியாது என்பதையும், வரலாறும், தமிழர்களின் சந்ததிகளும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார் வைகோ
http://www.alaikal.com/news/?p=15996

1 Comment:

payapulla said...

தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த துரோகக் குற்றச்சாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தப்ப முடியாது என்பதையும், வரலாறும், தமிழர்களின் சந்ததிகளும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்

Now public know the tactics of so called tamil leaders.