Thursday, May 7, 2009

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, முதுரையில் பரபரப்பு - குமுதம்

திருமங்கலம் இடைத்தேர்தலின்போது கூறப்பட்ட அதே குற்றச்சாட்டு, இப்போது மீண்டும் தி.மு.க. மீது பாய்ந்திருக்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுத்ததால் தாக்கப்பட்டு, அரிவாள் வெட்டுக்கு ஆளாகி, ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள், அ.தி.மு.க. கூட்டணியினர். தேர்தல் நெருங்க நெருங்க, `இன்னும் என்னென்ன நடக்குமோ?' என்கிற கவலை மதுரை மக்கள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை. மதுரைத் தொகுதியின் பல பகுதிகளில் அ.தி.மு.க. அணியினரின் சாலைமறிய-லோடுதான் விடிந்தது.

மதுரையிலுள்ள செல்லூர், கரிமேடு, மதுரையை அடுத்துள்ள ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நள்ளிரவில் சிலர் பணப்பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க. அணியினருக்குத் தகவல் வந்திருக்கிறது. உடனே அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நள்ளிரவு நேரத்திலும் தொகுதியின் பல பகுதிகளில் கார்களில் ரோந்து வரத் தொடங்கினர்.மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரையும், அவர்களிடம் இருந்த பதினாறாயிரம் ரூபாயையும் கைப்பற்றியிருக்கிறார்கள். ஒத்தக்கடை பகுதியில் 221 கவருடன் இருந்த ஆறு பேரைக் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத் திருக்கிறார்கள். அந்த கவர்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்ததாம். இதையடுத்துத்தான் தாக்குதல் நடவடிக்கை என்கிறார்கள்.

மதுரை கரிமேடு பகுதியில் நடந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த காசி, பாலசுப்பிரமணி, முருகானந்தம், முத்துக்குமார், கருப்பையா ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந் திருக்கிறது. செல்லூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சிக் கவுன்சிலர் திலகர் வெட்டப்பட்டார். அதேபோல அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரத் தாக்குதல்கள் பற்றித் தெரிந்ததும் மறியலுக்குத் தயாரானார்கள் அ.தி.மு.க. அணியினர்.

மதுரை காவல்துறையின் கட்டுப்பாடு அலுவலகம் அருகே அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., ஃபார்வர்டு பிளாக்.. உள்ளிட்ட அ.தி.மு.க. அணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். பணம் கொடுக்க வந்தவர்களிடம் இருந்து பறித்த கவர்களை ரூபாயோடு கொண்டுவந்து காண்பித்தனர். `பணப் பட்டுவாடா செய்தவர்களையும் அதைத் தடுத்தவர்களைத் தாக்கியவர்களையும் கைது செய்யவேண்டும்' எனக் கோஷமெழுப்பினர். மதுரையின் மையப்பகுதியில் மறியல் நடக்கிறது எனத் தெரிந்தவுடன் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மறியல் தொற்றிக் கொண்டது. போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் செல்லூர் ராஜு, சி.பி.எம். மதுரை செயலாளர் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்டோர், "வீடுவீடாகக் கதவைத் தட்டி பணம் கொடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள். அதைத் தடுத்தவர்களை வெட்டியிருக்-கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்..? ஆளும் கட்சியினருக்குச் சாதகமாக நடப்பது ஏன்?'' என்று போலீஸாரிடம் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினர். போலீஸார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் சுமார் மூன்று மணி நேரம் வரை மறியல் நீடித்தது.
இந்தச் சம்பவங்களைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாலை அ.தி.மு.க. அணியினர், சி.பி.எம். மாநிலச் செயலாளர் என். வரதராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர் நம்மிடம் பேசும்போது, "மதுரையில் தேர்தல் வன்முறை தொடர்பாக தி.மு.க. மீது பத்துக்கும் மேற்பட்ட புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் புகார்களைத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி யிருக்கிறோம். மதுரை கலெக்டரும், காவல்துறை ஆணையரும் ஆளும்கட்சியின் ஊதுகுழலாகிவிட்டனர்.

தொழில்முறை ரவுடிகளோடும், காவல்துறை பாதுகாப்போடும் வாக்காளர்-களுக்கு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர். மதுரை ஒத்தக்கடை, நாகமலைப் புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த தி.மு.க.வினரை பிடித்துக் கொடுத்திருக்கிறோம்.

மதுரை பீபிகுளம் பகுதியில் தி.மு.க. அலுவலகத்தில் பணம் கொடுக்கப்-பட்டதைத் தடுத்த எங்கள் கட்சி கவுன்சிலர் திலகர் உள்ளிட்ட அ.தி.மு.க. அணியைச் சேர்ந்த பன்னிரண்டு பேர் தாக்கப் பட்டனர். மேலப்பொன்னகரம் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டித்து எங்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட சிலர், காவல்துறையினர் முன்பாகவே எங்கள் அணியினரை ஆக்ரோஷமாகத் தாக்கினர். இதில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதுபோல, எங்கள் கட்சியைச் சேர்ந்த துளரி ராம்சிங் என்பவரைக் கடத்திச் சென்று தாக்கியிருக்கிறார்கள்.

முதல்வர் மகன் அழகிரி தி.மு.க. வேட்பாளர் என்பதால், ஆளும்கட்சியினர் அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வோம். எங்கள் புகாரின் அடிப்படையில் மத்திய தேர்தல் அதிகாரி விசாரணை நடத்த வருகிறார். அவரது நடவடிக்கையைப் பொறுத்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்'' என்றார் வரதராஜன்.

தி.மு.க. நிர்வாகிகளோ "எங்களுக்கு வெற்றி நிச்சயம். பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நாள்தோறும் ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. கூட்டணியினர் ரகளை செய்கிறார்கள். நாங்கள் யாரையும் தாக்கவில்லை. அவர்கள்தான் எங்களைத் தாக்கினார்கள்'' என்று ஒரே போடாகப் போட்டார்கள்.

இந்த விவகாரம் சென்னை ஆஸ்பத்திரியில் இருக்கும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டதாம். `கட்சியினர் யாரும் இதுகுறித்து எந்தக் கருத்தும் சொல்லவேண்டாம்' என மதுரை தி.மு.க.வினருக்கு சென்னையில் இருந்து உத்தரவு வந்திருக்கிறதாம். இந்தச் சம்பவத்தில் அமைச்சர் ஒருவர் மகனின் பங்களிப்புக் குறித்து வலுவான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் சென்றுள்ளதாம். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருக்கிறதாம்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அறுபத்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். இதில் இருபத்தெட்டுப் பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க. தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.தி.மு.க. அணியினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

படங்கள்: விக்கி

- எஸ்.சையது
குமுதம்

0 Comments: