Tuesday, May 5, 2009

காங்கிரஸ், திமுக கூட்டணியால் கூட காப்பாற்ற முடியாத அளவு சிக்கலில் மாட்டி கொண்ட இலங்கை அரசாங்கம்

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது.

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. உலகின் இந்த நகர்வுகளில்

சிக்கிக்கொள்ளாமல் விரைவாக போரை நிறைவு செய்து விடவே சிறீலங்கா அரசும், இந்திரா
காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் கடும் முயற்சிகளை கடந்த வாரமும் இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தன.

எனினும் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள், அனைத்துலகத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக அவர்களின் இந்த திட்டம் கைகூடவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தப்போவதில்லை என சிறீலங்கா அரசு ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் அனைத்துலக சமூகத்திற்கும் ஐ.நாவிற்கும் தெரிவித்திருந்தது.ஆனால் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் எப்போதும் எதிர்மறையாகவே இருப்பதுண்டு.



அவர்கள் தொடர்ச்சியாக கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது பயன்படுத்தி வருவதுடன், கடந்த மாதம் 20 ஆம் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நகர்வின் போது மிகவும் செறிவாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதனால் ஒரு நாளில் 1,498 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

முற்று முழுதாக ஊடகத்தடையை ஏற்படுத்தி உள்ளதனாலும், அனைத்துலகத்தின் கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுமதிக்காததாலும் அங்கு மீறப்படும் உறுதி மொழிகள் வெளியுலகத்தை எட்டப்போவதில்லை என சிறீலங்கா அரசு எண்ணியிருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த நாட்களில் தகவல்கள் ஒரு நொடிப்பொழுதில் அகில உலகத்தையும் எட்டிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள தவறிவிட்டனர்.

ஐ.நாவின் அறிக்கையில் கூட ஐ.நாவினால் எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் வன்னியில் குண்டு வீச்சுக்களின் சேதங்களை குறிப்பிட்டு காட்டியிருந்தனர். இந்த நிலையில் அனைத்துலகத்தின் நகர்வுகள் மேலும் வலுப்பெறும் முன்னர் எஞ்சிய மக்களையும் பலவந்தமாக சிறைப்பிடித்துவிட சிறீலங்கா அரசும் இந்திய அரசும் இறுதித் தாக்குதல் திட்டங்களை கடந்த வெள்ளிக்கிழமை (25) வகுத்திருந்தன.



இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் கொழும்புக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்காவும் வவுனியா படை தளத்திற்கு வெள்ளிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், இறுதி தாக்குதலுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.

அவர் வவுனியா மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா, சிறப்பு படையணியின் கட்டளை அதிகாரி கேணல் அதுல கொடிபிலி, 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா ஆகியோருடன் இறுதி தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுத்திருந்தார்.சிறப்பு படையணிகள் மற்றும் கொமோண்டோ படையணிகளின் பின்னிருக்கை படையினரையும் பயன்படுத்தி 58 ஆவது படையணியின் நகர்வுகளை தீவிரமாக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை இராணுவத்தின் 58 ஆவது படையணி வலைஞர்மடம் பகுதிக்கு 800 மீ தொலைவுக்கு நகர்வை மேற்கொண்டிருந்தது.அங்கு விடுதலைப்புலிகளின் பாரிய மண்பாதுகாப்பு அரண்களை எதிர் கொண்ட படைத்தரப்பு பலத்த இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து நகர்வு நிறுத்தப்பட்ட போதும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேலும் ஒரு பாரிய தாக்குதலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.



இந்த தாக்குதல் திட்டங்களில் வட்டுவாகல் ஊடாக தென்முனையில் இருந்து 59 ஆவது படையணியின் நகர்வையும் மேற்கொள்ள படைத்தரப்பு திட்டமிட்டிருந்தது.தரையில் இரு முனைகளில் இராணுவம் பாரிய நகர்வொன்றை மேற்கொள்ள கடற்படையினர் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ளும் திட்டங்கள் வெளியில் கசிந்த நிலையில் இந்த தாக்குதலினால் மேலும் ஒரு பாரிய மனிதப்பேரவலம் வன்னிப்பகுதியில் ஏற்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் மீதான இந்த தாக்குதலை தடுக்கும் படி வன்னி மக்களும், விடுதலைப்புலிகளும் அனைத்துலக சமூகத்திற்கும், புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தனர்.எனினும் இராணுவத்தினர் திங்கட்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தமது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.



கனரக ஆயுதங்கள் சகிதம் படைத்தரப்பு மேற்கொண்ட இந்த நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் உக்கிர தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இராணுவத்திற்கு உதவியாக வான்படை விமானங்கள் தீவிர குண்டு வீச்சுக்களை மேற்கொண்டதுடன், கடற்படை கப்பல்களில் இருந்தும் பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வலைஞர்மடம் பகுதியினூடாக நகர்வில் ஈடுபட்ட 58 ஆவது படையணியின் 10 ஆவது, 19 ஆவது, 20 ஆவது கஜபா றெஜிமென்ட், 12 ஆவது கெமுனுவோச், 10 ஆவது சிறீலங்கா இலகுகாலாட்படை பற்றலியன்கள் விடுதலைப்புலிகளின் அதிக உயர் பாதுகாப்பு கொண்ட மண் அரணை தாண்டமுடியாத நிலையில் முடக்கத்திற்கு வந்திருந்தன.இந்த மண் அணையை கைப்பற்ற முனைந்த படையினர் மீது 12.7 மி.மீ கனரக இயந்திரத்துப்பாக்கிகள், 30 மி.மீ பீரங்கிகள் கொண்டு விடுதலைப்புலிகள் கடுமையாக தாக்கியதாகவும், 122 மி.மீ பீரங்கிகளை நேரடியான சூட்டுக்கு பயன்படுத்தியதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இரவு வரையிலும் நடைபெற்ற சமர்களில் லெப். கேணல் தேசப்பிரிய குணவர்த்தனா தலைமையிலான 58-1 பிரிகேட் கடுமையான இழப்புக்களை சந்தித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.மேலும் திங்கட்கிழமை இரவு அங்கு விடுதலைப்புலிகள் பார ஊர்தி ஒன்றின் மூலம் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இராணுவத்தரப்பில் பலர் கொல்லப்பட்டும், அதிகளவான படையினர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் உண்மையான இழப்புக்கள் பல மடங்கு அதிகம் என களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பகுதிகளில் விடுதலைப்புலிகள் அதிகளவில் பொறிவெடிகளையும், மிதிவெடிகளையும் புதைத்துள்ளதுடன், குறிபார்த்து சூடும் வீரர்களையும் அதிகம் ஈடுபடுத்தி வருவதனால் படையினர் தரப்பில் இழப்புக்கள் அதிகரித்து செல்வதாகவும், இளநிலை அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டு வருவதாகவும் தென்னிலங்கை இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் செவ்வாய்கிழமை (28) காலை படையினர் வலைஞர்மடம் பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வலைஞர்மடம் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து 6 கி.மீ வடக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனிடையே கடந்த திங்கட்கிழமை (27) முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் பாரிய அளவிலான ஒரு தரையறக்கத்தை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்த போதும், கடற்புலிகளின் தாக்குதல்களினால் அது தோல்வியல் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த மோதல்களின் போது கடற்படையினரின் இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாக வன்னியில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்த போதும், அது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.இருந்த போதும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் 270 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தகவல்களை ஆதாரம் காட்டி வன்னி தகவல்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலும் நோயாளர் காவுவண்டிகள் அதிகளவில் சென்றதை அவதானிக்க முடிந்துள்ளது. இந்த மோதல்களில் சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணிகளே அதிகம் இழப்புக்களை சந்தித்திருந்தன.தென்முனையில் 59 ஆவது படையணி மேற்கொண்ட நகர்வுகளும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை தொடர்ந்து முடக்கத்திற்கு வந்திருந்தது. இராணுவம் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்த போதும் பொதுமக்களின் இழப்புக்கள் அதிகமாகவே கணப்பட்டுள்ளது. அதற்கு இராணுவம் தொடர்ச்சியாக கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதே காரணம்.



கடந்த செவ்வாய்கிழமை மட்டும் 15 மணிநேரத்தில் படைத்தரப்பு 5600 எறிகணைகளை பாதுகாப்பு பிரதேசத்தின் மீது ஏவியிருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (28) மீண்டும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நகர்வை மேற்ககொண்ட படைத்தரப்பு மறுநாள் புதன்கிழமை (29) அதிகாலை மீண்டும் ஒரு பாரிய தரையிறக்கத்தை மேற்கொள்ள முயன்றிருந்தது.

ஓரு டசின் டோராக்கள் உட்பட 25 இற்கு மேற்பட்ட படகுகள் இந்த நடவடிக்கையில் பங்குபற்றியதுடன், பீரங்கி கப்பல்களும் ஆழ்கடலில் இருந்து செறிவான பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.எனினும் கடற்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலில் படையினரின் இந்த நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதுடன், ஒரு டோரா படகும் மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சமரில் மேலும் 3 அரோ ரக படகுகள் சேதமடைந்துள்ளன.தற்போதைய போரில் கடற்படையின் பலமும் ஆயுதரீதியாக பல மடங்கு அதிகரிக்கப்பட்டே இருக்கின்றது. 47 தொன் எடைகொண்ட டோரா படகில் இருந்த 23 மி.மீ பீரங்கிகள் 30 மி.மீ பீரங்கிகளினால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளதுடன், 23 அடி, 14 மீ, 17 மீ நீளமுள்ள மூன்று வகையான அரோ ரக உட்கரையோர தாக்குதல் படகுகளையும், அதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் கடற்படையணிகளையும் சிறீலங்கா கடற்படையினர் உருவாக்கியிருந்தனர்.

14 மீ மற்றும் 17 மீ நீளமான படகுகள் 23 மி.மீ இரண்டைகுழல் பீரங்கியையும், சிங்கப்பூர் தயாரிப்பான் சிஎஸ்ஐ-40 மி.மீ தன்னியங்கி எறிகுண்டு செலுத்தியையும் (CIS 40 mm Automatic Grenade Launcher), இரண்டு 12.7 மி.மீ கனரக இயங்திர துப்பாக்கிகளையும், நான்கு 250 குதிரை வலுக்கொண்ட இயந்திரங்களையும் கொண்டது.

இதன் மூலம் அது 37 கடல்மைல் வேகத்தில் பயணிக்க கூடியது.சிறிய ஆரோ படகுகள் (Arrow boats) 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்களை கொண்டது. அதன் மூலம் இது 30 தொடக்கம் 35 கடல்மைல் வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டதுடன், ஒற்றை குழாயை கொண்ட 23 மி.மீ பீரங்கி மற்றும் ஒரு 12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கியை கொண்டதுடன், பல இலகுரக இயந்திர துப்பாக்கிகளையும், எறிகுண்டு செலுத்தியையும் கொண்டது.இந்த படகு தொகுதிகளுடன் சிறப்பு கடற்படை அணிகளையும் 2005 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு உருவாக்கியிருந்தது.

2005 ஆம் ஆண்டு 36 பேரை கொண்ட இந்த அணி தற்போது 600 பேரை கொண்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சிகளை அமெரிக்காவின் சிறப்பு கடற்படை அணிகளும், இந்தியாவின் சிறப்பு கடற்படை அணிகளும் வழங்கிவருகின்றது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய பாதுகாப்பு வலையமானது, வடக்கே வலைஞர்மடத்தையும், தெற்கே வட்டுவாகலையும் நிலப்பரப்புக்களாகவும், கிழக்கே இந்துசமுத்திர கடல் பகுதியையும், மேற்கே நந்திக்கடல் நீரேரியையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதாவது இந்த பகுதிகளின் இயற்கையான பாதுகாப்புக்கள் வலிந்த தாக்குதல்களை விட தற்காப்பு தாக்குதலுக்கே அதிகம் உகந்தது.

எனவே தான் இந்த களமுனைகளில் அதிகம் சிறப்பு படையணிகளை படைத்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. நந்திக்கடல் நீரேரியை கடந்து செல்வதற்கும் அவர்கள் சிறப்பு படையணிகளின் பயன்பாட்டை மேற்கொள்ளக்கூடும்.இவ்வாறான ஒரு உத்தியை படைத்தரப்பு வாகரை மீதான படை நடவடிக்கையில் பயன்படுத்தியிருந்தது. ஆனால் வன்னி களமுனையின் தன்மை மாறுபட்டது. அங்கு இரு தரப்பும் வெவ்வேறு உத்திகளை தான் கைக்கொண்டு வருகின்றன.

அரசை பொறுத்தவரையில் அனைத்துலகத்தின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் போரை விட இரஜதந்திர நகர்வுகளே அதிகம் வேகம் பெற்று வருகின்றன.

வேல்ஸ் இல் இருந்து

அருஷ்.

0 Comments: