Monday, May 25, 2009

ராஜபக்ஷே மீது போர் குற்ற வழக்கு: ஐ.நா.சபையில் நாளை விசாரணை

ஜெனீவா: இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோர் மீது போர் குற்றவழக்கு தொடர, ஐ.நா.சபையில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்த போரில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யபட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்து உரிய மருத்துவ சிகிச்சை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள், உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத, ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர் மீது போர் குற்றவழக்கு தொடரும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபையின் மனித உரிமை கழகத்தில் இன்று விசாரணை நடத்தப்பட இருந்தது. ஆனால், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலையீட்டால் அது தடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஐ.நா. மனித உரிமை கழகத்தில், நிரந்தர அங்கம் வகிக்கும் 45 நாடுகளில் 17 நாடுகளின் ஆதரவு இருந்தால் அந்த கோரிக்கை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலை உருவானது. எனவே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தீவிர முயற்சி செய்து 15 நாடுகளில் ஆதரவை நேற்று பெற்றன. இதனைத்தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையே, போர் குற்றவழக்கை தவிர்ப்பதற்காக இலங்கை அரசும், ரஷியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது.

0 Comments: