Wednesday, May 27, 2009

சிறிலங்கா விவகாரம் ஐ.நா.வில் பிளவு: சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்

சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகளும், இது அதற்கான தருணம் அல்ல என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.

மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் சில இந்த சிறப்பு விவாதத்தை பலவந்தமாக திணித்துள்ளன. ஆனால், இது தேவையற்றது. சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம் என சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

கியூபாவும் சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. முன்பு பல நாடுகளை ஆண்ட நாடுகள் தற்போது சிறிய அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை சிறுமைப்படுத்துவதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக சாடியிருந்தது.

பாகிஸ்தான், கட்டார், ஜோர்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கானா நிக்கரகுவா, சவூதி அரேபியா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகள் சிறிலங்காவின் தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன.

ஆனால், சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகள் தேவை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.

இறுதிக்கட்ட மோதல்களின்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபாக விசாரணைகள் தேவை. சுயாதீனமானதும், காத்திரமானதுமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான நாடுகள் சார்பாக செக் குடியரசும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. ஆனால், சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அது தெரிவித்திருக்கின்றது.

மோதல்களின் பின்னர் நாம் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பலவந்தமாக காணாமல் போதல், தடுத்துவைத்தல், கடத்தல், கருத்து சுதந்திரத்தை தடுத்தல் போன்றவை கவலையை தருகின்றன எனவும் செக் குடியரசு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றனவும் சிறிலங்கா மீதான விசாரணைக்கு ஆதரவுகளை தெரிவித்திருக்கின்றன.

இத்தாலி, சுலோவேனியா, மெக்சிகோ, பிரேசில், சிலி போன்ற நாடுகளும் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது கவனத்தை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2 Comments:

Anonymous said...

நாங்க லெட்டர் எழுதியாச்சு. இனிமே சிங் பாத்துப்பாரு.

Anonymous said...

KP என்பவர் வேறு , செல்வராஜா பத்மநாபன் என்பவர் வேறு . செல்வராஜா பத்மநாபன் சர்வதேச விவகாரங்களை கவனிப்பவர், இவர் புலிகளின் ஆயுத கொள்முதல் பிரிவின் தலைவர்