Saturday, May 2, 2009

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்த திரையுலகம் களமிறங்கியது

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்ன போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா.

அப்போது அவர் கூறுகையில், திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத் துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து, அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழல்நிலையில், தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் நான், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உள்பட ஏராளமான இணை, துணை, உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் 4ம் தேதி எங்களது பிரசார பயணத்தைத் தொடங்குகிறோம்.

உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், அதைத் தட்டிகேட்கவும், தோள் கொடுக்கவும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம். தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.

தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது.

தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட மோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு பொருளாதார அகதி. தமிழகத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். இங்கு அவர் அகதியாகத்தான் தங்கி இருக்கிறார்.

காஞ்சீபுரத்தில் தொடங்கும் இந்த தேர்தல் பிரசாரம், ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடத்தப்படும். அங்கு பொதுக்கூட்டமும் நடக்கும்.

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

4-ந் தேதி தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11-ந் தேதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்ட வேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார் பாரதிராஜா.

சீமான், சுந்தரராஜன் ஆகியோரும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.

இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஆகும். ஏற்கனவே இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நிறுத்தப்படாவிட்டால் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். சோனியாவை முழுமையாக எதிர்ப்போம் என திரையுலகினர் அறிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

0 Comments: