Thursday, May 28, 2009

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தமிழகம் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையில் வெறிபிடித்த சிங்கள அரச பயங்கரவாதிகளின் பாசிச இராணுவம் தமிழ் மக்களைக் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், இளைஞர் என்ற எந்த வேறுபாடுமின்றி விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தும், எறிகுண்டுகள் வீசியும் அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை சிங்களப் பாசிச இராணுவம் கொன்று குவித்து வருகிறது.

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், சீர்திருத்தப் பள்ளிகள் என்ற எந்த வேறுபாடும் இன்றி மக்கள் வாழும் எல்லா இடங்களுமே சிங்களப் பாசிச இராணுவத்தின் தாக்குதல் இலக்குகளாயிருக்கின்றன. தானே உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் மக்களையும் குண்டுகள் வீசியும், சித்ரவதை செய்தும் கொன்று குவித்து வருகிறது.

இது பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம், அவர்களை ஒழிக்கும் வரை ஓயாது என்று சிங்களப் பாசிஸ்ட் ராஜபக்சே கூரைமீது ஏறி நின்று கொக்கரிக்கிறான். அவனும், அவனுக்கு முன் ஆட்சியில் இருந்த சிங்களப் பாசிஸ்டுகளும் ஏறத்தாழ கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த யுத்தத்தை பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகிறார்கள். இப்போது ஒரு கோர வடிவத்தை எட்டியுள்ள இந்த யுத்தத்தில் இதுவரை ஏறத்தாழ இரண்டு இலட்சம் பொதுமக்களையும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளையும் கொன்று குவித்திருக்கிறார்கள்.

பல இலட்சம் மக்கள் அகதிகளாக உலகெங்கும் பல நாடுகளுக்குத் துரத்தப் பட்டிருக்கிறார்கள். மக்களின் பலகோடிக் கணக்கான உடைமைகள் சூறையாடப் பட்டுவிட்டன. மக்கள் உணவுக்காகவும், வாழ்விடத்துக்காகவும் நாடோடிகள் போல் அலைகிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். உள்நாட்டிலேயே பல இலட்சம் மக்கள் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அகதிகள் போல் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழீழத் தேசம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகம் தெரிந்து கொள்வதற்கு சிங்கள இராணுவம் தடை விதித்திருக்கிறது.

சிங்கள இராணுவம் தரும் செய்திகளைத் தவிர உண்மைச் செய்திகளை உலகம் தெரிந்து கொள்ள முடியாத பாசிச அடக்குமுறை ஏவி விடப் பட்டுள்ளது. உண்மைச் செய்திகளை அறிந்து வெளியிட முயலும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்திக் கொல்லப் படுகிறார்கள், சுட்டுக் கொல்லப் படுகிறார்கள், பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப் படுகின்றன.

இராணுவ பயங்கரவாதத்துக்கு அஞ்சி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்த போராளிகளுடன் முல்லைத் தீவில் தஞ்சம் அடைந்துள்ள ஐந்து லட்சம் மக்கள் மீது தற்போது சிங்கள இராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி மக்களை ஆயிரக்கணக்கில் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவிக்கிறது. எங்கும் பிணக் குவியல், இரத்தவெள்ளம், மரணஓலம். உயிர் பிழைத்திருப்போருக்கு உணவு இல்லை, மருந்து இல்லை, குடிக்க நீரும் இல்லை. இவற்றுக்குத் தடை விதித்திருக்கிறது இராஜபக்சே அரசு. சிங்கள பாசிஸ்டுகளின் விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சி இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் மீதும் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கிறது சிங்களப் பாசிச இராணுவம்.

இந்தக் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தைப் பார்த்து மனம் பதறிப்போய் போரை நிறுத்து என்று சீறியெழுந்து தமிழகம் எங்கும் மக்கள், எதிர்ப்புப் பேரணிகள், வேலை நிறுத்தங்கள், மனிதச் சங்கிலிகள், ஆர்ப்பாட்டங்கள் என போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்கள். இக் கொடுமைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்து தமக்குத்தாமே தீக்குளித்து- எரியூட்டி - இன்னுயிர் ஈந்திருக்கிறார்கள் இளைஞர்கள்.

ஆனால் இந்த இன அழிப்புப் போரை நிறுத்த முடியாது எனக் கொக்கரிக்கும் சிங்கள இனவெறி பாசிஸ்டு அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்து அரணாய் இருக்கிறது இந்தியப் பேயரசு. இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன உலக நாடுகள். ஏனிந்த அவலம்! தமிழீழ மக்கள் தங்கள் தாயக உரிமைக்குப் போராடுவது தவறா? இதற்கு விடிவுதான் என்ன?

இலங்கையில் இரண்டு தேசங்கள் :

ஒடுக்கும் தேசமாக சிங்களம் -

ஒடுக்கப்படும் தேசமாக தமிழீழம்

தமிழின அழிப்பு சிங்களத் தேசத்தின் கொள்கை !

இலங்கை தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு தீவு. அதில் சிங்களர் பெரிய தேசிய இனம், தமிழர் சிறிய தேசிய இனம். இரண்டு தேசிய இனங்களுக்கும் தனித்தனியே பாரம்பரிய தாயகப் பகுதிகளும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறும் உண்டு.

17-ஆம் நூற்றாண்டில் தமிழ், சிங்களப் பகுதிகளில் சிலவற்றை போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். 1815-ல் ஆங்கிலேயர் முழு இலங்கையையும் கைப்பற்றி தமது வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

1948-ல் ஆங்கிலேயரின் காலனி ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்தது. பெரிய தேசிய இனமான சிங்களத் தேசிய இனத் தலைவர்களிடம் அரசதிகாரம் கைமாறியது. ஆங்கிலேயரிட மிருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்களத் தலைவர்கள் அப்போதிருந்தே தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தை முற்றாகத் துடைத்தொழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டனர்.

பெரிய தேசிய இனம் என்பதால் அதிகாரத்தைப் பெற்ற சிங்கள தேசிய இனத்தலைவர்கள் இன ஒடுக்கு முறையின் முதல் நடவடிக்கையாக இலங்கையின் தேசியக் கொடியாக வாளுடன் கூடிய சிங்கக் கொடியை அறிவித்தனர். சிங்கக் கொடி கண்டியைக் கடைசியாக ஆண்ட சிங்கள மன்னனின் கொடி. அதன் கையில் உள்ள வாள் துட்டகைமினு என்ற சிங்கள மன்னன் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதற்காகப் பயன்படுத்திய ஆயுதம். துட்டகைமினு தனது தமிழ் எதிரிகளை ஒழித்து சிங்களக் கொடியை நிலைநாட்டியது போல இலங்கைத் தீவில் தமிழர்களை ஒழித்து இலங்கையின் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என்ற குறிப்பிலேயே இந்தச் சின்னத்தைத் தேர்வு செய்தனர்.

அடுத்து, சிங்கள மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை அநகாரிக தர்மபாலாவின் தமிழர் விரோத சிங்களப் பேரினவாத ஆதிக்கக் கருத்துகளுடன் வடிவமைத்துப் போதிக்க ஏற்பாடு செய்தனர். பௌத்த பிக்குகளும், மடாலயங்களும், கலை இலக்கிய ஊடகங்களும் தொடர்ந்து தமிழருக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கக் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதற்கு ஊக்கம் அளித்தனர்.

1948-ல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஒரு சட்டத்தின் மூலம் 10 இலட்சம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கினர். அவர்களில் பெரும் பகுதியினரை சாஸ்திரி, இந்திரா, இராஜீவ் ஆகிய இந்தியப் பிரதமர்களுடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு நாடு கடத்த ஏற்பாடு செய்தனர். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமின்றி இலங்கைப் பாராளுமன்றத்திற்கு மலையகப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுவந்த தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் எட்டிலிருந்து ஒன்றாகக் குறைத்தனர். நாடு கடத்தப்பட்ட தமிழருக்குப் பதில் சிங்களரைக் குடியேற்றி சிங்களமயப் படுத்தினர்.

ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றபோது பாராளுமன்றத்திற்கான தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 39% ஆக இருக்க வேண்டும் என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட ஏற்பாட்டைப் படிப்படியாக 16% அளவுக்குக் குறைத்தனர். இதன் மூலம் எவ்வித எதிர்ப்பும் இன்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தமிழருக்கு விரோதமான எத்தகைய சட்டங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வகை செய்து கொண்டனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணப் பகுதிகளில் - தமிழீழப் பகுதிகளில் - திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை நிறுவி அவற்றை எல்லாம் சிங்களப் பகுதிகளாக மாற்றினர். தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளைக் கூட வனப் பகுதிகள் என அறிவித்து அரசுடைமை ஆக்கி அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்களை நிறுவினர். தமிழர் குடியிருந்த கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், மக்களை விரட்டியடித்தும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவினர். அங்கெல்லாம் புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினர். சிங்களப் பெயர்களைச் சூட்டினர்.

இவ்வாறு அம்பாறை எனும் தமிழ் மாவட்டமே சிங்களக் குடியேற்றங்களால் சிங்கள மாவட்டமாக்கப்பட்டு திகாடு மல்லா மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டுவிட்டது. இவ்வாறு முப்பது ஆண்டுகளில் ஏறத்தாழ 10,000 ச.மைல் பரப்பளவுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் 5000 ச.மைல் பகுதிகளை சிங்களப் பகுதிகளாக மாற்றிவிட்டனர். இதன் மூலம் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளைக் குறைத்து இறுதியில் இல்லாது ஒழிப்பதும், தமிழர் தாயகப் பகுதியிலிருந்தும் சிங்களவரே பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப் படுவதற்கு வகை செய்வதும் அவர்களுடைய நோக்கமாகும்.

1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்து ஆட்சி மொழி, நிர்வாக மொழி தகுதியிலிருந்து தமிழை நீக்கினர். 1948-லிருந்து தமிழும் சிங்களமும் ஆட்சிமொழிகளாக இருந்த நிலையை மாற்றி இந்தச் சட்டத்தின் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நிலையை உருவாக்கினர். இதன் மூலம் அரசு பணிகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் வெளியேற்றப் பட்டனர்.

நிர்வாகத் துறை, கல்வித்துறை, வாணிபம் மற்றும் பண்பாட்டுத் துறை போன்ற எல்லாவற்றிலிருந்தும் தமிழர்கள் ஒதுக்கப்பட்டனர், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை இழந்தனர். புதிதாகப் பணியில் சேருகின்ற தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றைப் புறக்கணித்து இன, மத அடிப்படையில் புதிய பதவி நியமனங்களும், பதவி உயர்வுகளும் வழங்கினர். சிங்கள பௌத்தருக்கு உதவித் தொகையும், சலுகையும் வழங்கினர். இவ்வாறு ஏற்கனவே தமிழர்கள் இருந்த துறைகள் அனைத்திலும் சிங்களரை இடம் பெறச் செய்து அவற்றை சிங்களமயப் படுத்தினர்.

1956-70 காலத்தில் எந்த அளவிற்கு இந்தத் துறைகளில் தமிழர் சதவீதம் குறைந்தது, சிங்கள மயமாகியது என்பதைப் பின்வரும் விபரம் காட்டும் :

துறைகள் 1956 1970

நிர்வாகத்துறை 30% 5%

தபால், இரயில் 50% 5%

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் 60% 10%

இராணுவம் 40% 1%

அரசுத்துறை தொழிலாளர்கள் 45% 5%

பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்துத் திட்டங் களையும் சிங்களப் பகுதிகளிலேயே நிறைவேற்றினர். புதிய தொழில் வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்சாலைகள், வேளாண் வளர்ச்சி, நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்தும் சிங்களப் பகுதிகளிலேயே செயல்படுத்தப் பட்டன. தமிழீழப் பகுதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு தொடர்ந்து தமிழீழம் வளர்ச்சி குன்றிய வறண்ட பகுதிகளாகவே நீடிக்கச் செய்தனர்.

உயர் கல்வித் துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத் தரப்படுத்தல் என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதன்படி தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மாணவர்கள் குறைந்த விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உயர் கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் விளைவாக உயர்கல்வியில் 1960-ல் 40% ஆக இருந்த தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 1975-ல் 15% ஆகக் குறைந்தது.

1960-ல் சிங்களமே நீதிமன்ற மொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தனர். 1973-ல் தமிழர் பகுதிகளில் சிங்களத்தைக் கட்டாயப் பாடமாக்கினர். பள்ளிகளை நாட்டுடைமை ஆக்கித் தமிழ்ப் பகுதிகளுக்கான பள்ளிகளையும் ஆசிரியர்களையும் குறைத்தனர். இவ்வாறு தமிழ் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளைக் குறைத்தனர், சிங்களத்தைத் திணித்தனர்.

1972-ல் ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றினர். இதன்படி சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி, பௌத்தம் மட்டுமே அரச மதம், சிங்கள பௌத்தர் மட்டுமே ஆட்சித் தலைவர் ஆகமுடியும், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என அறிவித்தனர். இதன் மூலம் சிங்களருக்கு நிகராக தமிழர் எந்த உரிமையும்பெற முடியாது; இலங்கையில் தமிழர் சிங்களருக்குட்பட்ட அடிமைகள் என்று பிரகடனப் படுத்தப்பட்டனர்.

ஆங்கிலேயரின் கைகளிலிருந்து அதிகாரம் சிங்களர் கைகளுக்கு மாறியதிலிருந்தே பெரிய தேசிய இனமான சிங்களத் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனமாகச் செயல்படத் தொடங்கியது. சிறிய தேசிய இனமான ஈழத் தமிழர் தேசிய இனத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது. சிங்கள மன்னனின் கொடியையே தேசியக் கொடியாக அறிவித்தது. மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக்கியது; நாடு கடத்தியது; வாக்குரிமையைப் பறித்து பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்தது.

ஒப்புக் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் குறைத்து மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையுடன் தமிழருக்கு விரோதமான எத்தகைய சட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வகை செய்து கொண்டது; சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தால் மொழி உரிமையைப் பறித்தது. அரசு நிர்வாகம், தொழில், வணிகம், பண்பாடு, கல்வி என அனைத்து துறைகளிலும் தமிழர் பணியிடங்களைப் பறித்து சிங்களமயப் படுத்தியது. மாணவர்களின் உயர்கல்வி உரிமையைப் பறித்தது. பள்ளிகளையும், ஆசிரியர்களையும் குறைத்து தமிழ் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பையே பறித்தது; சிங்களத்தை நீதிமன்ற மொழியாக, கட்டாயப் பாட மொழியாகத் திணித்தது; தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலங்களை அபகரித்தது.

தமிழர் பகுதிகளில் தொழில் வேளாண் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாமல் குறை வளர்ச்சியுடைய வறண்ட பிரதேசங்களாக்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் சட்டப் பூர்வமாகவே தமிழர்கள் தமக்கு அடிமைகள் என அறிவித்தது மட்டுமின்றி திட்டமிட்டு தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களைத் தொடக்கத்திலிருந்தே தூண்டிவிட்டு இன அழிப்பையும் செயல்படுத்தியது.

1956, 1958, 1961, 1974, 1979, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலும் அதன் பின்னரும் சிங்கள அரசு தமிழருக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது. சிங்கள போலீஸ், இராணுவம், குண்டர் படையினர் இணைந்து நடத்திய இந்தக் இனக்கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். அவர்களுடைய கோடிக்கணக்கான உடைமைகள் கொள்ளை யடிக்கப்பட்டன, சூறையாடப் பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இளைஞர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர்.

பெண்கள் வல்லுறவில் அவமானப் படுத்தப் பட்டனர். குழந்தைகள் கூட வெட்டிக் கொல்லப் பட்டனர். புகழ் பெற்ற யாழ் நூலகமும், பத்திரிகை அலுவலகங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வழிபாட்டுத் தலங்களும், பண்பாட்டுச் சின்னங்களும் உடைத்தெறியப்பட்டன. தமிழர்களிடையே ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி வாழிடங்களை விட்டும், நாட்டை விட்டும் ஓடும்படி விரட்டியடிக்கப்பட்டனர்.

மலையகத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்ற எந்த வேறுபாடும் இன்றி இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். தமிழர்களை மலையகத் தமிழர் இஸ்லாமியத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் எனப் பிரித்து அவர்களெல்லாம் வெவ்வேறு இனத்தவர்கள் என்பது போல காட்டிக் கொண்டிருந்த சிங்கள வெறியர்கள் (இஸ்லாமியத் தமிழர்கள் வேற்றினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போல் காட்டுவதற்காக அவர்களைச் சோனகர்கள் எனப் பெயரிட்டு ஆவணங்களில் குறித்தனர்) தமிழருக்கு எதிரான காட்டு மிராண்டித் தனத்தைக் கட்டவிழ்த்து விடும்போது அவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் காட்டவில்லை.

சிங்கள வெறியர்களின் இன அழிப்பு நடவடிக்கைகளால் சிங்களர்களில் பாதி அளவு இருந்த தமிழர் எண்ணிக்கை கால்வாசியாகி விட்டது. அதாவது 65 இலட்சம் இருந்த சிங்கள மக்கள் தொகை 140 இலட்சமாகிய போது தமிழ் மக்கள் தொகை 35 இலட்சமாகவே நீடித்தது.

சிங்கள வெறியர்களின் படிப்படியான இன ஒடுக்கு முறைக்கும், இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் காரணம் என்ன?

இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த போது சிங்களர் மத்தியில் சிங்கள பௌத்த தேசியவாத இயக்கம் ஒன்று தோன்றியது. அது ஆங்கிலேயர்கள் மட்டுமன்றி, தமிழர்களும் சிங்களர்களின் எதிரிகள் எனச் சித்தரித்தது. சிங்கள பௌத்த தேசியவாத இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றவர் பௌத்த சிந்தனையாளரான அநகாரிக தர்மபாலா (1864-1933). இலங்கை சிங்களருக்கு மட்டுமே உரிய ஒரு சிங்கள பௌத்த நாடு. அதில் தமிழருக்கு எவ்வித உரிமையும் இல்லை.

தமிழர்கள் சிங்களர்களின் மரபு ரீதியான எதிரிகள். சிங்கள பௌத்த நாகரிகத்தை அழிக்க முயன்ற எதிரிகளின் பரம்பரையினர் என்பது அநகாரிக தர்மபாலாவின் போதனை. ‘ஒரு பண்டைய நாகரிகத்தின் வரலாறு’ என்கிற புகழ் பெற்ற தனது நூலில் அவர் கூறுகிறார் : “மனிதகுலப் பகுப்பியல் ஆய்வின்படி சிங்களவர் ஒரு தனித்துவம் வாய்ந்த இனத்தவர். வேறு இனக்கலப்பு இல்லாதவர். அடிமைகளின் ரத்தம் அவர்களிடம் கலக்கவில்லை என்பதில் அவர்கள் பெருமை கொள்ளலாம்.

மூன்று நூற்றாண்டுகளாக எமது தாயக மண்ணைச் சீரழித்து, தொண்மை வாய்ந்த எமது தேவாலயங்களை இடித்து அழித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எமது இனத்தைப் பூண்டோடு அழிக்க முற்படும் காட்டுமிராண்டித் தமிழராலோ, ஐரோப்பியக் காடையராலோ என்றும் வெற்றி கொள்ள முடியாதவர்கள் என்பதில் சிங்கள மக்கள் பெருமை கொள்ளலாம். நாகரிகமற்ற காடையரால் சீரழிக்கப்படும் முன்னர் ஒளிமயமான இந்த அழகிய தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப் பட்டிருந்தது.”

இது அநகாரிக தர்மபாலாவின் கருத்து மட்டுமல்ல. சிங்கள பௌத்த தேசிய வாத இயக்கத்தின் வழிகாட்டும் கோட்பாடும் இதுவே. சிங்கள-பௌத்த தேசியத்தின் அரசியல், ஆன்மிகத் தலைவர்கள் இந்த இனவெறி ஆதிக்கக் கோட்பாடுகளாலேயே வழிநடத்தப் படுகிறார்கள். அன்றைய பண்டார நாயகா, சேனநாயகாவிலிருந்து இன்றைய இராஜபக்சே, பொன்சேகா வரை அவர்களை வழி நடத்துவது இந்த இனவெறி ஆதிக்கக் கோட்பாடேயாகும்.

எனவேதான் அவர்கள் 1948-ல் ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றதிலிருந்தே தமிழரின் மொழி உரிமையையும், இன உரிமையும், தாயக உரிமையையும் மறுப்பதையும், சம உரிமை கோரும் தமிழினத்தை அடக்கி ஒடுக்கி ஒழித்துக் கட்டுவதையும் தமது ‘தேசிய’ கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ் மக்களின் போராட்டமும் தமிழீழ விடுதலைக் கோரிக்கையும்.

ஒரு பெரிய தேசிய இனமும், சிறிய தேசிய இனமும் இணைந்து ஓர் ஒற்றை ஆட்சியின் கீழ் இருந்தால் தனது பெரும்பான்மை பலத்தால் பெரிய தேசிய இனம் சிறிய தேசிய இனத்தை முற்றாக விழுங்கிவிடும் ஆபத்து உண்டு. அதனால்தான் 1948-ல் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைக் கைமாற்றிச் சென்றபோது பாராளுமன்றத்தில் 50% க்கு 50% பிரதிநிதித்துவம் தமிழருக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோரினர். ஆனால் ஆங்கிலேயர்கள் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழருக்கு 39% பிரதிநிதித்துவம் எனத் தீர்மானித்து அதிகாரத்தைச் சிங்களரிடம் விட்டுச் சென்றனர். இதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற சிங்களத் தலைவர்கள் வரும் ஆண்டுகளில் தமிழர் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமலேயே பல்வேறு சட்டங்கள் மூலம் தமிழர் உரிமைகளைப் பறித்தனர்.

ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற உடனேயே சிங்கள இனம் ஆளும் இனம் எனக் காட்டுவதற்கு சிங்கக் கொடியை தேசியக் கொடியாக அறிவித்ததை தமிழர் தலைவர்கள் எதிர்த்தனர். மாற்று யோசனைகளை முன் வைத்தனர். அவர்களுடைய எதிர்ப்பை மீறியே சிங்கக் கொடியை இலங்கை தேசியக் கொடியாக அறிவித்தனர் சிங்களத் தலைவர்கள்.

10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்த போது தந்தை செல்வநாயகம் தலைமையிலான தமிழர் தலைவர்கள் பாராளுமன்றத்திலேயே அதை எதிர்த்தனர். இன்று மலையகத் தமிழருக்கு நிகழ்வது நாளை ஈழத்தமிழர்களுக்கு நிகழும் என எச்சரித்தனர். தமிழர் தலைவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத் தாமல், சிங்களத் தலைவர்கள் அச்சட்டத்தை நிறைவேற்றினர்.

1949 டிசம்பர் 18-ல் கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்யின் முதலாவது மாநாட்டின் தலைமையுரையில் தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிட்டார் :

“பெரிதும், சிறிதுமாக உள்ள மொழியினங்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசுகள் கூட இழுக்கப் பட்டுள்ளன. மொழி இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியினத்திற்கும் இறைமை (அரசுரிமை) உடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப் பரப்பைத் துண்டாடுவது ஒரு வழி. ஒவ்வொரு மொழி இனத்திற்கும் தன்னாட்சி யுடைய மாநிலங்களை அமைத்து மத்தியில் கூட்டாட்சி அரசை உடைய ஒரு நாட்டை அமைத்தல் மற்றொரு வழி.... நாங்கள் கேட்கிற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம்; தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம்; இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய அரசு; இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு; சிறிதான தமிழ் பேசும் தேசிய இனம் அழிந்து போகாமலும் பெரிதான சிங்கள தேசிய இனத்தால் விழுங்கப் படாமலும் இருப்பதற்கு மிகக் குறைந்த ஏற்பாடு இதுதான் .”

1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்த போது தந்தை செல்வா தலைமையில் அதை எதிர்த்தனர். சத்தியாகிரகப் போராட்டங் களை நடத்தினர். நாடு முழுவதும் பாதை யாத்திரைகளை, மாநாடுகளை நடத்தினர்.

திரிகோணமலையில் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கைக்கு கூட்டாட்சி முறை வேண்டும்; சிங்களத்துடன் தமிழும் நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்; தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்; தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன.

தமிழர்களின் எழுச்சியின் காரணமாக அப்போதைய பிரதமர் பண்டாரநாயகா 1957-ல் தந்தை செல்வநாயகத்துடன் ஒரு சமரச ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், சில அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மாவட்ட சபைகள் ஏற்படுத்தவும், மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கவும், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கவும், தமிழைச் சிறுபான்மை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளவும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை அவர் நிறைவேற்ற வில்லை. சிங்களர் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் காரணம் கூறி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் மலையகத் தமிழர்களின் குடியுரிமை மீட்கப்பட வில்லை. தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் மேலும் தீரவிமடைந்தது. 1959-ல் புத்தபிக்கு ஒருவரால் பண்டார நாயகா கொல்லப்பட்டார். அதையடுத்து 1960-ல் பிரதமரான திருமதி பண்டாரநாயக அதுவரை செயல்படுத்தப் படாமல் இருந்த சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். நீதிமன்ற பயன் மொழி சிங்களமே என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். அதே நேரத்தில் தமிழர் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற வில்லை.

1966-ல் தமிழருக்கு சில உரிமைகள் தருவதாகக் கூறி அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயகா, தந்தை செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அவர் நிறைவேற்றவில்லை. சிங்களர் மத்தியில் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு இருப்பதாகக் காரணம் கூறி அந்த ஒப்பந்தத்தைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டார் டட்லி சேன நாயகா.

1970-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திருமதி பண்டார நாயகா இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க அரசியல் நிர்ணய சபை ஒன்றை நியமித்தார். அச்சபைக்கு தமிழர்கள் சார்பில் அறிக்கை ஒன்று அளிக்கப் பட்டது. அதில் சிங்களமும் தமிழும் சமநிலையுடன் அரச மொழியாக இருக்க வேண்டும் ; புத்தம், சைவம், கிருத்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாநிலங்களை ஒரே மாநில மாக்கி ஒரு கூட்டாட்சி முறையை (Federal Form of government) ஏற்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் முற்றாக நிராகரித்து விட்டு ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி கொண்டனர் சிங்களத் தலைவர்கள்.

1972-ல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டம் தமிழர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அடிமைப் படுத்தி விட்ட படியால் அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி, தமிழர் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய முக்கிய தமிழர் கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழர் ஐக்கிய கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர்.

1976 மே மாதம் தமிழர் ஐக்கிய கூட்டணி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தேசிய மாநாடு ஒன்றைக் கூட்டியது. அம்மாநாட்டில் தமிழ் இனத்திற்கு தேசிய விடுதலை கோரும் வரலாற்றுத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. இதற்கு தந்தை செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழர் ஐக்கிய கூட்டணி என்ற பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என மாற்றப் பட்டது. இம்மாநாட்டில் தமிழீழத் தனியரசு நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

“...இலங்கைத் தமிழ் மக்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத பலத்தால் வெற்றி கொள்ளப்படும் வரை சிறப்பு வாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியனவற்றைக் கொண்டிருந்ததோடு பல நூற்றாண்டுகளாக ஒரு தனித்துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்து சுதந்திரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றிக்குமேலாக தங்களது சொந்த மண்ணில் தனி இனமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி புரிந்து வாழவேண்டும் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள்.

இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால் தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டவர்கள். இலங்கையின் 1972-ஆம் ஆண்டின் குடியரசுக்கான அரசியல் யாப்பு, புதிய குடியேற்ற எஜமானர்களாகிய சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார உரிமை, வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலை வாய்ப்புரிமை ஆகியவற்றை மறுத்து அவர்களின் தேசிய கட்டமைப்பின் அடிப்படைகளையே அழித்துள்ளனர்.

ஆகவே, தமிழீழத் தனியரசு அமைப்பது குறித்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் பெருந்தோட்டத் தொழிற் சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்த தயக்கத்தைக் கருத்தில் எடுக்கும் அதே வேளையில் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் பொருட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மதச்சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”

வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தனியரசு அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1977 பொதுத் தேர்தலை இதே தீர்மானத்துடன் சந்திக்க முடிவு செய்தது. அத்தேர்தலில் மக்கள் முன் வைக்கப்பட்ட அறிக்கையில் :

“... மொழி உரிமை இழந்து, குடியுரிமை இழந்து, சமய உரிமை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்று வழி எது? தரப்படுத்தலினால் உயர் கல்விக்குரிய வாய்ப்பை இழந்து, தொழிற்துறையில் சம வாய்ப்பை இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்று வழி எது? ஆட்சியாளர்களால் தூண்டப்பட்ட குண்டர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுத் தவிக்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது? தனித்துவத்தை நாடி திக்குத் தெரியாது நிற்கையில் அழிக்கப்படும் ஆபத்தையே காணும் தேசிய இனத்திற்கு மாற்று வழி எது? நம் முன்னோர் சுயாட்சி புரிந்த எம் மாநிலத்தை நாமே ஆட்சி செய்வோம் எனத் திட்டவட்டமாக அஞ்சாநெஞ்சுடன் பிரகடனப் படுத்துவதே மாற்று வழியாகும்.

சிங்கள ஏகாதிபத்தியம் எம்மண்ணினின்றும் வெளியேற வேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி எதிர்வரும் 1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய இனத்தின் இத்திட்டமான முடிவை சிங்கள அரசாங்கத்திற்குப் பிரகடனப் படுத்துவதற்கு உரியது என்றே கணிக்கிறது. ஆகவேதான் ஒரே தொடராக இணைந்துள்ள பாராம்பரிய பிரதேசங்கள்கொண்ட சுதந்திர இறையாண்மையுள்ள மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை நிறுவுவதற்கு மக்கள் அனுமதியை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடி நிற்கிறது.”... ...“தமிழ் இனம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனது தாயக பூமியில் இறையாண்மையை நிறுவத் தீர்மானம் எடுத்தாக வேண்டும். சிங்கள அரசுக்கும், உலகத்துக்கும் இத்தீர்மானத்தைப் பிரகடனம் செய்வதற்கு ஒரேவழி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பதேயாகும்” என்று தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

இத்தேர்தலில் த.ஐ.வி.கூட்டணியை 18 இடங்களில் வெற்றிபெறச் செய்ததன் மூலம் தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான தமது ஒப்புதலை சிங்கள அரசுக்கும், உலகுக்கும் வெளிப்படையாக அறிவித்தனர் தமிழீழ மக்கள்.

1958 முதல் 1977 வரையிலும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தமிழர்கள் இலங்கையில் சிங்களருடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தமது சம உரிமைக்கான கோரிக்கைகளை அமைதி வழியில் வலியுறுத்திவந்தனர். அமைதிவழியில் போராட்டங்களையும் நடத்தினர். இணைந்து ஒரே நாட்டில் வாழ்வதற்கான தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இடைக்கால சமரச ஒப்பந்தங்களுக்கும் இணங்கினர்.

ஆனால் இலங்கை என்பது சிங்கள பௌத்தருக்கு மட்டுமே உரிய நாடு, அதில் தமிழருக்கு உரிமையில்லை, அவர்கள் அந்நியர்கள், அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற ஆதிக்கக் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்டுவந்த சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் சம உரிமைக்கான அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரித்தனர். இணைந்து வாழ்வதற்கு அவர்கள் முன்வைத்த அனைத்து ஆலோசனைகளையும், கருத்துகளையும், புறக்கணித்தனர். இடைக்கால ஒப்பந்தங்களைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தனர்.

தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்களை எல்லாம் போலீஸ், இராணுவத்தை ஏவி வன்முறையில் ஒடுக்கினர். தமிழரின் தாயக உரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை அனைத்தையும் மறுத்து சம உரிமை கோருவதை நாட்டைப் பிளவுபடுத்தும் துரோகம் என்றும், உரிமைகளுக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தி ஒடுக்கினர். சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகப் பகுதிகளை சிங்களமயப்படுத்தினர். ஆட்சியில், நீதியில், கல்வியில் மொழியுரிமை மறுத்தனர். கல்வியில், தொழிலில், வேலை வாய்ப்பில் உரிமை மறுத்தனர். தமிழருக்கு எதிரான இனக் கலவரங்கள் மூலம் தமிழர் உடைமைகளைச் சூறையாடு வது, உயிர்களைக் கொன்றொழிப்பது என்ற நடைமுறைகளைத் தீவிரப்படுத்தினர்.

இதன் விளைவு தமிழர்கள் இனியும் சிங்களருடன் இலங்கையில் ஒரே நாடு என்ற அமைப்புக்குள் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். தமிழர்தம் தாயகப் பகுதியில் தனித்து இறையாண்மையுள்ள ஓர் அரசமைத்து தனி நாடாக அமைவதுதான் தம்முன் உள்ள ஒரேவழி என்ற முடிவுக்கு வந்தனர். 1977-ல் இந்த முடிவை வெளிப்படையாக உலகுக்கும் அறிவித்தனர். சம உரிமையுடன் சிங்களருடன் இணைந்து வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் தமிழீழ மக்கள் இந்த முடிவுக்கு வருவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி எதுவும் இல்லை.

பாரம்பரிய பிரதேசமும், வரலாறும் கொண்ட ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இறையாண்மை உண்டு. ஒரு தேசிய இனம் பிரிதொரு தேசிய இனத்துடன் இணைந்து வாழ சாத்தியம் இல்லை, விருப்பம் இல்லை எனில் அது பிரிந்து தனியரசு அமைத்துக் கொள்வது அதன் பிறப்புரிமை. அது யாராலும் மறுக்கமுடியாத மனிதகுலம் எற்றுக் கொண்டிருக்கக் கூடிய அரசியல் உரிமை. இந்த உரிமையின் அடிப்படையில்தான் பல தேசிய இனங்கள் தனியரசுகளைக் கொண்ட நாடுகளாக உருவாகி இருக்கின்றன.

நீண்ட காலம் ஒரே நாடாக வாழ்ந்த நார்வே மக்களும் ஸ்வீடன் மக்களும் முரண்பட்டபோது, அமைதியான முறையில் ஸ்வீடன் மற்றும் நார்வே எனும் தனித் தனி நாடுகளை அமைத்தனர். அதுபோலவே 1919 முதல் 74 ஆண்டுகள் ஒன்றாக செக்கஸ்லோவாகியா நாட்டில் வாழ்ந்த செக் இன மக்களும், ஸ்லாவாக் இன மக்களும் 1993 ஜனவரி முதல் செக் குடியரசு, ஸ்லாவாக் குடியரசு என இருவேறு நாடுகளை அமைதியான முறையில் அமைத்துக் கொண்டனர். கோர்ப்சேவ் ஆட்சிக்குப்பின் சோவியத் யூனியனில் இருந்த பல்வேறு இனங்கள் தாமாக விரும்பிப் பிரிந்து அமைதியான முறையில் பல தனித்தனி நாடுகளாக அமைந்தன.

ஆனால் இலங்கையில் இருக்கும் சிங்கள பேரினவாத அரசு ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அந்த உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் தாயகப் பகுதியை அபகரித்து, அந்த இனத்தை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இன அழிப்பு முயற்சிகளை எதிர்க்கும் மக்களை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், இலங்கையின் இறையாண்மைக்கு எதிரிகள் என ஒடுக்கியது. இதுவரை ஏறத்தாழ 50% தமிழீழத் தாயகப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாகக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.

சிங்கள மக்கள் தொகையில் பாதியளவு இருந்த தமிழ் மக்கள் தொகை கால்வாசி ஆகிவிட்டது. அரசு நிர்வாகம், போலீஸ், இராணுவம், கல்வி, பண்பாடு, தொழில், வணிகம் அனைத்துத் துறைகளிலும் தமிழரை அப்புறப்படுத்தி சிங்கள மயப் படுத்தி விட்டது. 1948-லிருந்து முப்பது ஆண்டுகாலம் சம உரிமையுடன் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வதற்கு தமிழர்கள் செய்த அனைத்து முயற்சிகளையும் முறியடித்து விட்டது. இறுதியில் இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றோ அதற்கு தாயகப் பகுதியும், சுயநிர்ணய உரிமையும் உண்டு என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது, தமிழர்கள் சிங்களருக்கு அடிமையாக மட்டுமே இலங்கையில் வாழ முடியும் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது.

இந்நிலையில் - முப்பதாண்டுகால சம உரிமைக்கான சாத்வீகப் போராட்டம் தோற்றுப் போய்விட்ட நிலையில் தமது தேசிய இனத்தின் உரிமையையும், வாழ்வையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழீழத் தனியரசு அமைப்பது ஒன்றுதான் வழி என்ற முடிவுக்கு வந்து தமிழீழ மக்கள் அந்த தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கடந்த முப்பதாண்டு காலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறது விடுதலைப் புலிகள் அமைப்பு.

சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாகவும் ஈழ விடுதலைக்கு எதிராகவும் இந்திய வல்லரசு.

இந்திய அரசு தொடக்கத்திலிருந்தே சிங்களப் பேரின வாதத்துக்குத் துணையாகவும், தமிழருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

இலங்கை மலையக மக்கள், இந்திய வம்சாவழி மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1821-லிருந்து 1939 வரையிலான காலத்தில் தோட்டத் தொழில்களுக்காக தமிழகத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். இரத்தமும், வியர்வையும் சிந்தி, உயிரைக் கொடுத்து மலையகப் பகுதியையும், இலங்கையையும் வளமாக்கியவர்கள். மலையகப் பகுதியையே தமது வாழ்விட மாகவும், இலங்கையையே தமது தாய்நாடாகவும் ஏற்றுக்கொண்டிருப்பவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியிலேயே வாக்குரிமை அளிக்கப்பட்டவர்கள்.

ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற சிங்கள ஆட்சியாளர்கள் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து 10 இலட்சம் மக்களை நாடற்றவர்களாக்கிய போது அந்த நடவடிக்கை சர்வதேச மனித உரிமைச் சாசனத்திற்கு எதிரானது என்ற முறையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் ‘இந்திய’ வம்சாவழியினர் என்ற முறையிலும் இந்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சிங்களப் பேரினவாத அரசின் நட்பைப் பேணுவதற்காக நேரு அரசு அவ்வாறு செய்யவில்லை. 10 இலட்சம் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்படுவது பற்றியோ, இதனால் இலங்கையில் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவதைப் பற்றியோ அவர் கவலைப் படவில்லை.

அதற்குப் பின் வந்த சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் ஆகிய மூன்று பிரதமர்களும் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் போட்டு மலையகத் தமிழ் மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்த உதவினர். இதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் மக்கள் தொகை குறையவும், மலையகப் பகுதியை சிங்கள மயப்படுத்துவதற்கும் உதவினர். இதில் மலையகத் தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் முயற்சியைக்கூட இந்தியா மேற்கொள்ள வில்லை. அதாவது சிங்கள அரசைப் போலவே இந்திய அரசும் மலையகத் தமிழ் மக்களை தனது விருப்பம் போல் கையாள்வதற்கான அடிமைகளாகவே கருதியது.

1957-ல் பண்டாரநாயகவுக்கும் - செல்வநாயகத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நிறை வேற்றாமல் அதை இரத்து செய்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தபோது இந்திய அரசு அதைக் கண்டிக்கவில்லை. 1965-ல் டட்லி சேன நாயகா-செல்வநாயகம் இடையே கையெழுத்திடப் பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப் படாமல் சிங்கள அரசால் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட போதும் அதை இந்திய அரசு ஏன் என்று கேட்க வில்லை.

1958-ல் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கை பகுதியிலிருந்து விரட்டி யடிக்கப் பட்ட போது இந்திய அரசு அதை ஏன் என்று கேட்கவில்லை. 1961-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய தமிழர்கள் மீது சிங்கள இராணுவமும், போலீசும் ஈவு இரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியதை இந்திய அரசு கண்டிக்க வில்லை. 1977-ல் சிங்களருடன் இராணுவமும் போலீசும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது இந்திய அரசு அதைக் கண்டு கொள்ள வில்லை.

1974-ல் யாழ்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புகுந்து சிங்களப் போலீஸ் 18 தமிழர்களைக் கொன்றொழித்ததை இந்திய அரசு கண்டிக்க வில்லை.

1981-ல் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தை சிங்கள இராணுவம் எரித்து அடியோடு நாசம் செய்ததை இந்திய அரசு கண்டிக்க வில்லை.

இவ்வாறு, இலங்கையில் தமிழர்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய போதும், இனக் கலவரங்களில் அவர்கள் பலியானபோதும் இந்தியா வாய் திறக்க மறுத்து சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணைபோனது.

இந்திரா பிரதமராக இருந்தபோது ஈழ விடுதலைக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சியும், பணமும் வழங்கப் பட்டது உண்மையே. ஆனால் இந்த உதவி ஈழ விடுதலைக்கு உதவ வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டதல்ல. இந்திய அரசு இந்திரா பிரதமராக இருந்த போதும் சரி அதன் பின்னரும் சரி எப்போதுமே ஈழ விடுதலையை ஆதரித்தது இல்லை. ஈழப்பிரச்சினைக்கு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு அதன் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே இந்தியா எப்போதும் கூறியிருக்கிறது.

எனவே ஈழ விடுதலைக் குழுக்களுக்கு இந்திரா பயிற்சியும், பணமும் கொடுத்து உதவியதன் நோக்கம் ஈழ விடுதலை அல்ல. மாறாக ஈழ விடுதலைக் குழுக்கள் உண்மையிலேயே ஈழ விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் சார்ந்த இயக்கங்களாக வளர்ந்து விடாமல் தடுப்பதும், தம்மைச் சார்ந்ததாய் தமக்குக் கட்டுப் பட்டதாய் மாற்றுவதும் மட்டுமே.

பெரும்பாலான ஈழ விடுதலைக் குழுக்களைப் பொருத்த மட்டில் இந்திய அரசு தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது. எனினும் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரை அது வெற்றியடையவில்லை. ஈழவிடுதலைக்குப் போராடுவதில் விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக நின்றதால் அவ்வமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசுடன் இந்திய அரசு கூட்டணி சேர்ந்து கொண்டது.

1987-ல் இந்தக் கூட்டணியால் உருவாக்கப்பட்டு ஈழமக்கள் மீது திணிக்கப் பட்ட ஒப்பந்தம்தான் ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் ஒப்புதல் பெறாதது. 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் கொடுத்த ஆணைக்கு எதிரானது. எனவே அவ்வொப்பந்தத்தை தமிழீழ மக்களும், விடுதலைப் புலிகளும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வில்லை. இதன் காரணமாக ‘அமைதிப்படை’ என்ற பெயரில் இலங்கைக்கு அனுப்பப் பட்ட இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் கொன்றொழிக்கும் அரக்கப் படையாக மாறியது.

தனது நோக்கங்களில் வெற்றி பெறாமலேயே இந்திய அரக்கப்படை 1990-ல் இந்தியா திரும்பியது. எனினும் ஈழத் தமிழருக்கும், ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணி தொடர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என அறிவித்து இந்தியாவில் தடை செய்தது. இதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைச் செய்திகள் மக்களைச் சென்றடையாமல் தடுத்தது. விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சிங்கள அரசு பரப்பும் பொய்களை நாடெங்கும் பரப்பியது. ஈழ விடுதலைக்கு ஆதரவாகப் பேசுவதும், செயல் படுவதும், உதவுவதும் குற்றமாக்கப்பட்டது. இந்தியத் தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் அனைத்தும் சிங்கள அரசின் ஊது குழல்களாக்கப் பட்டன.

உலகம் முழுவதும் நாற்பத்தி இரண்டு நாடுகள் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்யத் தூண்டியது இந்திய அரசு. இதன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளிலிருந்து தார்மீக ஆதரவும், உலக முழுவதிலிருக்கும் ஈழ மக்களிடமிருந்தும் பிறநாட்டு மக்களிட மிருந்தும் தார்மீக மற்றும் பொருளியல் ஆதரவும் கிடைப்பதைத் தடுத்தது.

ஈழவிடுதலை இயக்கத்திற்கு எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்து சிங்கள அரசிற்கு அளித்தது. சிங்கள அரசின் முப்படைகளுக்கும் பயிற்சி அளித்தது. யுத்தத்திற்குத் தேவையான தொழில் நுட்பக் கருவிகள், ரேடார்கள், டாங்கிகள், ஆலோசனைகள், ஆயுதங்கள் வழங்கியது. உளவு விமானங்கள், பீரங்கிகள் வழங்கியது. கடல் வழியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவிகள் வந்து சேருவதைத் தடுப்பதற்காக இந்திய கப்பற் படை காவலுக்கு வைக்கப்பட்டது.

ஈழப் போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவ தளபதிகள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற பிற நாட்டு தளபதிகளுடன் சேர்ந்து சிங்கள தளபதிகளுக்கு போர் முனையிலேயே ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்திய இராணுவ தொழில் நுட்ப வல்லுநர்கள் விமான ஓட்டிகள், 3000 சிறப்பு இராணுவப் படையினர், சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாகப் போர்முனைக்கே அனுப்பி வைக்கப் பட்டனர். தமிழின அழிப்பு யுத்தத்தில் சிங்கள இராணுவத்துடன் இந்தியப் படையும் இணைந்து கொண்டது.

அதே நேரத்தில் சிங்கள அரச பயங்கரவாதத்தை இந்தியா கண்டிக்கவும் இல்லை ; கண்டுகொள்ளவும் இல்லை. மக்கள் கூட்டங் கூட்டமாகக் கொல்லப்படுவது பற்றியோ, பள்ளிகள் மருத்துவமனைகள் இலங்கை இராணுவத்தால் தாக்கப் பட்டு மக்கள் அழிக்கப்படுவது பற்றியோ, மக்களுக்கு உணவு, மருந்து அனுப்பப்படுவது தடை செய்யப் படுவது பற்றியோ, பத்திரிகைகள், ஊடகவியலாளர்கள் கடத்திக்கொல்லப் படுவதைப் பற்றியோ, தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப் படுவது பற்றியோ, சிங்கள இராணுவத்தினர் மக்களை முகாம்களில் அடைத்துச் சித்ரவதை செய்வது பற்றியோ, தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப் படுவது பற்றியோ, ஈழப் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் வெளியேற்றப் படுவது பற்றியோ, போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒருதலை பட்சமாக முறித்துக் கொண்டு யுத்தத்தை நடத்துவது பற்றியோ, மக்கள் மீது முப்படைத் தாக்குதல் நடத்துவது பற்றியோ இந்திய அரசு இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை.

இதற்கு மாறாக விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடுத்தால் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தது. ஏதோ தன்மீதே தாக்குதல் தொடுக்கப் பட்டது போல அலறித் துடித்தது இந்திய அரசு. சேதமடைந்த சிங்கள இராணுவ நிலைகளைப் புதுப்பிக்க உடனடியாக ஓடிப் போய் உதவியது.

யுத்தத்தால் சிங்களப் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் அதைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி நிதி உதவியும், பொருளாதார உதவியும் செய்தது இந்திய அரசு. இது வரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழீழ மக்களையும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளி களையும் கொன்றொழித்திருக்கும் சிங்கள அரச பயங்கரவாத பாசிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும், அதை நடத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை நசுக்கவும் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறது இந்திய அரசு.

இந்திய அரசு சிங்கள அரச பயங்கர வாதிகளுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொண்டு அதைப் பாதுகாத்து வருகிறது? இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளையும் உரிமைப் போராட்டங்களையும் அது ஏன் உதாசீனப் படுத்துகிறது? ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் நசுக்க விரும்புகிறது? ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தாயக உரிமை, தேசிய இன உரிமை, சுய நிர்ணய உரிமை சிங்கள அரசால் மறுக்கப் படுவது பற்றியோ, அந்த இனமே அழிக்கப் படுவது பற்றியோ, தமிழ் இன உரிமைகளுக்கு எதிராக இலங்கை சிங்களருக்கு மட்டுமே உரிய சிங்கள பௌத்த நாடு என்று பிரகடனப் படுத்தியிருப்பது பற்றியோ இந்திய அரசு அக்கறை கொள்வதில்லையே ஏன்?

இந்தியா, தெற்காசிய மண்டலத்தில் ஒரு துணை நிலை வல்லரசாக - பேட்டை ரவுடியாகத் தன்னை நிறுத்திக் கொண்டுள்ளது. இலங்கை அதன் செல்வாக்கு மண்டலத்துக்கு உட்பட்ட நாடு. இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வது அதன் திட்டம். ‘இலங்கையின் இறையாண்மை’, ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற கோட்பாட்டின் மூலம் இலங்கை முழுவதையும் தனது கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வது அதன் கொள்கை. இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கக் கரங்களுக்குள் அரவணைத்துக் கொள்வதற்கு வேறெந்த கொள்கையையும் விட இதுவே அதற்கு ஏற்பான கொள்கை என்று அது கருதுகிறது. காரணம் :

இந்தியா என்பதே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த பல நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நாடு. 1947-ல் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைக் காங்கிரசாரிடம் கைமாற்றிச் சென்ற போதிலும் இந்தியாவில் இருந்த தேசிய இனங்களுக்கு சுதந்திரம் எதுவும் கொடுக்கப்பட வில்லை. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப் பட்ட நிலையில் உருவாக்கப் பட்ட இந்தியாவே 1947-க்குப் பின்னரும், இன்று வரையும் நீடிக்கிறது. அதாவது பல்வேறு தேசிய இனங்களையும் அடிமை கொண்டிருக்கும் வல்லாதிக்கமே இந்தியா என்ற நாடாக உருப்பெற்றிருக்கிறது.

இது ஒரு நாடு என்ற முறையில் அதனுள் அடங்கி இருக்கும் தேசிய இனங்களை மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளாக அமைந்திருக்கும் தெற்காசிய மண்டல நாடுகளையும் தனது ஆதிக்கக் கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. சிக்கிம் அவ்வாறு ஏப்பம் விடப்பட்ட நாடு. நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு, செல்வாக்கு மண்டலங்களுக்குள் இணைக்கப் பட்டிருக்கின்றன. இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுக்கும் பாகிஸ்தான் இரண்டாக உடைக்கப் பட்டுள்ளது.

இலங்கையும் அதன் பாதுகாப்பு மண்டலத்துக்கு உட்பட்டது என்பது உணர்த்தப் பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தேசிய விடுதலைக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடும் தேசிய இனங்களும், நாகா, மிஜோ, காஷ்மீர் விடுதலை இயக்கங்களும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன.

எனவே, இந்திய அரசு ஈழத் தேசிய விடுதலைக்கு ஆதரவாக இருப்பது இதன் தேசிய அமைவுக்கும் இயல்புக்கும் பொருத்தமற்றது, எதிரானது.

அதற்குமேல் இந்தியா தனியீழம் உருவாகத் துணையிருக்குமானால் அல்லது தனியீழம் அமைவதைத் தடுக்க உதவ வில்லை என்றால் சிங்கள அரசுக்கு உதவும் முகமாக இந்தியா விரும்பாத சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் இலங்கையில் காலூன்றி விடலாம். அதுமட்டும் அல்ல. தமிழீழம் உருவாவது இந்தியாவில் ஒடுக்கப்பட்டு உரிமையிழந்து இருக்கும் தேசிய இனங்களுக்கு குறிப்பாக தமிழ் நாட்டிற்கு உரிமை உணர்வை-விடுதலை உணர்வை ஊட்டி விடலாம்.

இத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாத கொள்கையே தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தை நசுக்கி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவும் கொள்கை. இதன் மூலம் இந்தியா, சிங்கள அரசின் மீது தனது செல்வாக்கை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். தான் விரும்பாத நாடுகள் இலங்கையில் காலூன்றுவதைத் தடுத்து விட முடியும். சிங்கள அரசின் மூலம் இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கக் கரங்களுக்குள் இருத்திக் கொள்ள முடியும் என்று இந்தியா நம்புகிறது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அரசு ஈழத் தமிழர்களின் நலனைப் பலியிடுகிறது. சிங்கள அரசுடன் ஈழத் தமிழின ஒழிப்புக்குத் துணை போகிறது. அது மட்டும் அல்ல அது தமிழகத்தின் நலன்களையும் பலியிடுகிறது.

இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றியே தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத் தீவை சிங்கள அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். கச்சத் தீவைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் கடற்படை இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றிருக் கிறது. அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையடித்திருக் கிறது, ஆயிரக்கணக் கானோரைச் சிறைப்பிடித் திருக்கிறது, சித்ரவதை செய்திருக்கிறது. இன்றும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப் படுவதும் ; சிறைப் பிடிக்கப் படுவதும் அன்றாடச் செய்திகளாய் வந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து தனது சொந்த குடிமக்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வது குறித்து இந்திய அரசு இதுவரை ஒரு முறைகூட கண்டனம் தெரிவித்த தில்லை. இலங்கைத் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவிக்கும் போது கண்டு கொள்ளாமல் இருப்பது போலவே, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கொன்று குவிக்கும் போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. காரணம், தெற்காசியப் பகுதியின் தென் பகுதியில் இருக்கும் இலங்கையின் மீது தனது செல்வாக்கை சிங்கள அரசின் மூலம் நிலை நிறுத்துவ தற்கு ஈழ மக்களின் உரிமைகளையும், உயிர்களையும் மட்டு மின்றி தமிழக மக்களின் உயிர்களையும், உரிமைகளையும் கூட பலியிடுவது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது.

டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசின் இந்தக் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை.

தமிழர்களைப் பலியிடுவது டெல்லியின் கொள்கை

டெல்லியின் கால்நக்கிப் பிழைப்பது

கருணா-ஜெயா கொள்கை

இலங்கையில் சிங்கள அரசின் மூலம் தனது வல்லாதிக்கத்தை நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழினத்தின் உரிமைகளையும், உயிர்களையும் பலியிடுகிறது இந்திய வல்லரசு. தமிழர்களைப் பலியிடுவதில் என்றுமில்லாத மூர்க்கத்தனத்துடன் செயல்படுகிறது சோனியா - மன்மோகன்சிங் காங்கிரஸ் அரசு. இதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் பக்கத் துணையாக இருக்கிறார்கள்.

தி.மு.க.விற்கு வெளிநாட்டுக் கொள்கை என்று ஒன்று இல்லை. இந்திய அரசின் கொள்கையை ஆதரிப்பதே அதன் கொள்கை. ஈழப்பிரச்சினையில் காங்கிரசின் கொள்கையை ஆதரிப்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. அதில் காங்கிரசுடன் குன்றிமணி அளவு கூட தி.மு.க.விற்கு வேறுபாடு கிடையாது என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தியிருக்கிறார். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கைக்குத் தனது முழு ஆதரவு உண்டு என்று அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவும் தெளிவு படுத்தியிருக்கிறார். அதாவது சோனியா-மன்மோகன் அரசு தமிழினத்தின் உரிமைகளையும் உயிர்களையும் பலியிடுவதை ஆதரிப்பதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

சுதந்திரமாக, சம உரிமையுடன், கௌரவத்துடன் சிங்களர்களுடன் இணைந்து வாழ்வதற்காக அமைதியான முறையில் 30 ஆண்டு காலம், ஈழத் தமிழர்கள் செய்த அனைத்து முயற்சிகளையும் சிங்கள அரசுகள் முறியடித்து விட்ட நிலையில் வேறு வழியின்றி தமது சுதந்திரத்தையும், கௌரவத்தையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தனியீழம் ஒன்றுதான் வழி என்று அவர்கள் முடிவெடுத்து அதை அடைவதற்காகக் கடந்த முப்பதாண்டு காலமாக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தலைமை யளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசு தமிழீழம் அமைவதை எதிர்க்கிறது. தமிழீழத்திற்காகப் போராடும் மக்களையும் போராளிகளையும் ஒடுக்குவது என்று தீர்மானித்து அதற்காக சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உதவிக் கொண்டிருக்கிறது. ஈழ விடுதலைக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் உருவாகி விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருக்கிறது. இதற்கு டெல்லியின் கங்காணிகளாகத் தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் செயல் படுகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஈழவிடுதலைக்கு ஆதரவான குரல் எங்கிருந்து வந்தாலும் உடனே அடக்கு முறைகளை ஏவி விட்டார். கருப்புச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்தார். இன்று, துயருறும் ஈழ மக்களுக்கு உணவும் மருந்தும் அனுப்புவதையே கூட அது விடுதலைப் புலிகளுக்குச் சென்று விடும் என்று கூறி எதிர்க்கிறார். யுத்தத்தில் மக்கள் கொல்லப் படுவது சாதாரணமானதுதான் என சிங்களப் பாசிஸ்டுகளின் இனப் படுகொலையை ஆதரிக்கிறார். ஒரு போதும் அவர் சிங்கள அரசின் இனப் படுகொலையைக் கண்டித்ததோ, துயறுரும் ஈழ மக்களுக்கு ஆதரவாகப் பேசியதோ இல்லை. அதாவது தான் ஓர் அப்பட்டமான தமிழின விரோதி என்பதை வெளிப் படுத்திக் கொண்டவர் ஜெயலலிதா.

ஆனால், கருணாநிதி ஈழத் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், தமிழீழம் அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன், நாளையே தமிழீழம் அமையுமானால் எனது பதவியை இழக்கத் தயங்க மாட்டேன் என்றும் அடிக்கடி கூறுகின்றவர். பாலசிங்கத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தவர். தமிழ்ச் செல்வனுக்கு இரங்கற்பா பாடியவர். செஞ்சோலைக் குழந்தைகளுக்காகக் கவிதை பாடியவர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மருந்தும் உணவும் அனுப்ப நிதி திரட்டியவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடத்தியவர். சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்தவர். தவறாமல் பிரதமருக்கு கடிதம் எழுதியவர். கட்சியின் பொதுக் குழுவில், செயற் குழுவில், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றியவர். இவை எல்லாம் ஜெயலலிதா செய்யாதவை. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக கருணாநிதி செய்தவை.

இவை எல்லாம் எவ்வாறு மக்களை ஏமாற்றுவற்கான நடவடிக்கைகள் ஆகும்? தமிழர்களைக் கொல்வது சிங்கள அரசு. அந்த அரசு தமிழர்களைக் கொல்வதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உணவும் மருந்தும் நிவாரணமும் தருகிறேன் என்று கூறுவது நீ தமிழர்களைக் கொன்றொழி, நான் மருந்தும் உணவும் நிவாரணமும் தருகிறேன் என்று சிங்கள அரசுக்கு தமிழர்களைக் கொன்றொழிக்க அனுமதி வழங்குவதல்லவா? சுதந்திரமான, கௌரவமான வாழ்விற்காகத் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் ஈழ மக்கள். அவர்களுடைய அமைதியான நல்வாழ்வை விரும்பினால் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அதற்கு மாறாக தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க உதவிகொண்டிருக்கும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதன் கொள்கையில் தனக்குக் குன்றிமணி அளவு கூட வேறுபாடு இல்லை என்று கூறிக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் அமைதியான நல்வாழ்க்கை தனது குறிக்கோள் எனக் கூறுவது அவர்களை சிங்களர்களுக்கு அடிமையாக இருக்க சம்மதியுங்கள் என்று கூறுவதல்லவா?

ஈழ விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை எதிர்த்துக் கொண்டு ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன், நாளையே பதவியை இழக்க தயங்க மாட்டேன் என்று கூறுவது போராடும் மக்களை கேலி செய்வதல்லவா? புலிகள் அமைப்பு பயங்கர வாதிகள் அமைப்பு, அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகிற காங்கிரசுடன் தனக்கு எவ்வித முரண்பாடும் இல்லை எனக் கூறிக் கொண்டு பாலசிங்கம் மரணத்திற்கு அனுதாபச் செய்தி வெளியிடுவதும், தமிழ்ச் செல்வனுக்கு இரங்கற்பா பாடுவதும், செஞ்சோலைச் சிறார்களுக்கு கவிதை எழுதுவதும் மக்களை ஏமாற்றுவதற்கன்றி வேறெதற்கு? ஈழமக்கள் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும், போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களப் பாசிஸ்டுகளிடம் சரணடைந்து விட வேண்டும், தமிழர்கள் சிங்களர்களிடம் அடிமையாக வாழ ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடன் தமிழர்களைக் கொன்றொழிக்கும் ராஜபக்சேவின் இன அழிப்பு யுத்தத்திற்கு முழுத்துணையாக இருக்கும் காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு போர் நிறுத்தத்துக்காக மனிதச் சங்கிலி நடத்துவதும், பொதுக் கூட்டம் நடத்துவதும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் மக்களை ஏமாற்றுவதற்காக அன்றி வேறெதற்கு?

இவ்வாறெல்லாம் கருணாநிதி மக்களை ஏமாற்றுவது ஏன்? இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழக மக்களை அடக்கு முறை மூலமாகவே நசுக்கிவிட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கொள்கை என்றால், கிளர்ந்தெழும் மக்களின் உணர்வுகளை மதிப்பது போல், ஆதரிப்பது போல், அவர்களுக்குத் தலைமை யளிப்பது போல் காட்டி திசை மாற்றி நீர்த்துப் போகச் செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவது கருணாநிதியின் தந்திரம். இதனால் அடக்கு முறையில் இவர் ஜெயலலிதாவுக்கு குறைந்தவர் என்று பொருள் அல்ல.

நெடுமாறனையும், வைகோவையும், கருப்புச்சட்டத்தில் கைது செய்தார் ஜெயலலிதா! சீமானையும், குளத்தூர் மணியையும் கருப்புச்சட்டத்தில் கைது செய்தார் கருணாநிதி! புலிகளை ஆதரித்துப் பேசினாலோ, தமிழர் விரோதிகளின் உருவப் படத்தையோ, உருவ பொம்மையையோ எரித்தாலோ கருப்புச்சட்டம் பாயும் என மிரட்டுகிறார். ஈழ விடுதலைக்கு ஆதரவாகத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக, விடாமல் போராடி வந்த வழக்கறிஞர்களை மிரட்டுவதற்காக மருத்துவ மனையில் படுத்துக் கொண்டே போலீஸ் ரவுடிகளை ஏவி விட்டு காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கி மண்டைகளை உடைத்து, வாகனங்களையும், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அடித்து நொறுக்கி ஒரு பாசிச ஒடுக்குமுறையை - வெள்ளை பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இப்படி போட்டிப் போட்டுக்கொண்டு டெல்லியின் கங்காணிகளாகச் செயல்படுவது ஏன்? ஏனெனில் தமிழகத்தை முடிந்தவரை கொள்ளையடித்து தமக்கும் தமது குடும்பத்திற்கும் கோடி கோடியாய் சொத்து சேர்ப்பதும், சேர்த்த சொத்துகளைப் பாதுகாப்பதும் அதற்காக ஆட்சியை கைப்பற்றுவதும் மட்டுமே இவர்களுடைய கொள்கை இலட்சியம். இந்த இலட்சியத்தை காங்கிரசின் - டெல்லியின் கால்நக்கி கிடந்தால் அடையமுடியும் என்பது இவர்களுடைய கணக்கு. அது மட்டுமல்ல, இதனால் தேசபக்த விருதை, பாரத ரத்னா விருதைக் கூட பெற முடியும். எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு பாரத ரத்னா விருது கிடைத்தது. கருணாநிதியும் அப்படி ஒரு பாரத ரத்னா விருதுக்காகக் காத்துக் கிடக்கிறார்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டிப் போட்டுக் கொண்டு டெல்லியின் எடுபிடிகளாக இருப்பதால்தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை இந்திய அரசு பொருட்படுத்த வில்லை.

தமிழக சட்ட மன்றம் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கை அரசு உடனடியாகப் போரை நிறுத்தவும், இலங்கை இராணுவம் போர் நிறுத்தக் காலத்தில் இருந்த முந்தைய நிலைகளுக்குத் திரும்பவும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப் படுவதைத் தடுத்து நிறுத்தவும், இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. அந்தத் தீர்மானம் தி.மு.க. முன்மொழிய அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறை வேற்றப் பட்டது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு இந்திய அரசு எந்த மதிப்பும் அளிக்க வில்லை. ஏழு கோடி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழக சட்ட மன்றம் நிறை வேற்றிய தீர்மானத்தை பொருட்படுத்த வேண்டிய தில்லை என்று இந்திய அரசு தீர்மானித்து விட்டது. காரணம் என்ன? காரணம், இத்தீர்மானம் தமிழகத்தின் ஏழு கோடி மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகப் போடப் பட்டதே அன்றி நிறை வேற்றப் படவேண்டும் என்பதற்காகப் போடப் பட்ட தல்ல என்பது இந்திய அரசுக்குத் தெரியும்.

ஈழத் தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பை நிராயுத பாணியாக்கி சரணடையச் செய்யும் வரை அல்லது ஒழித்துக் கட்டும் வரை போரை நடத்த வேண்டும் என்பது இந்திய - இலங்கை அரசுகளின் தீர்மானம். தமிழீழம் என்கிற அரசியல் கோரிக்கை எழாமல் தடுக்க இந்திய - இலங்கை அரசுகள் சேர்ந்து எடுத்த முடிவு அது. இது தமிழக சட்ட மன்றத் தீர்மானத்திற்கு வாக்களித்த காங்கிரசுக்குத் தெரியும். தீர்மானத்தை முன் மொழிந்த இந்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.விற்கும் தெரியும். ஜெயலலிதாவோ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வெளிப் படையாகப் பேசி வருகிறார்.

இவர்கள் எல்லாம் சேர்ந்து போரை நிறுத்து என்று தீர்மானம் போட்டால் அதன் நோக்கம் போரை நிறுத்த வேண்டும் என்பதாக இருக்க முடியுமா? இல்லை. ஈழத்தில் நடக்கும் கொடூரங்களைக் கண்டு கொதித்துப் போயுள்ள தமிழக மக்களின் உணர்வுகளைத் திசை திருப்புவதற்காக அவர்களின் உணர்வுகளை மதிப்பது போல் காட்டி ஏமாற்றுவதற்காகச் செய்த சதிதான் அத்தீர்மானம். அதனால்தான் அத்தீர்மானத்தை இந்திய அரசு செயல்படுத்த வில்லை. அத்தீர்மானம் செயல்படுத்தப்பட வில்லை என்பதைப் பற்றி, முன்மொழிந்த தி.மு.க. கவலைப் படவில்லை. வழிமொழிந்த எந்தக் கட்சியும் கவலைப்பட வில்லை. தீர்மானங்களை நிறை வேற்றா விட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற வெத்து மிரட்டலை நிறை வேற்ற வில்லை. அதுமட்டுமல்ல.,

போரில் விடுதலைப் புலிகளை நிராயுத பாணி யாக்கி சரணடையச் செய்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்ற இலக்கை அடையும் வரை போரை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டிருப்பது போலவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டிருப்பது போலவும் காட்டி மக்களை ஏமாற்றியது தி.மு.க. அதனால் தான் மீண்டும் மீண்டும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுவது, தீர்மானங்கள் போட்டு வேண்டுகோள் விடுவது, பொதுக் கூட்டங்கள் நடத்தி வேண்டுகோள் விடுவது, நேரில் சென்று வேண்டுகோள் விடுவது என்று காலம் கடத்தியது. கொட்டாவி விடுவதற்காக இந்திய அமைச்சர்களோ, அதிகாரிகளோ வாய் திறந்தால் கூட அவர்கள் போர் நிறுத்தும் பற்றி பேசுகிறார்கள் என்று வியாக்கியானம் செய்து பாராட்டி ஏமாற்றினார் கருணாநிதி.

போரை நிறுத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்றும், சோனியாவும் மன்மோகனும் மனிதாபிமானம் மிக்கவர்கள், தமிழர்களைக் காக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள் என்றும், போரை நிறுத்த பிரணாப் கொழும்பு செல்கிறார், சிவசங்கர மேனன் செல்கிறார், சென்று விட்டார், சென்று வந்து விட்டார் என்றும், பிரதிபா போர் நிறுத்தம் பற்றி பேசி விட்டார், பிரணாப் பேசி விட்டார், சிதம்பரம் பேசி விட்டார் என்றும், புலிகளும் போரை நிறுத்தச் சம்மதித்தால் தானே போரை நிறுத்த முடியும் என்றும் அண்டை நாட்டு விவகாரங்களில் ஓரளவு தானே தலையிட முடியும் என்றும் நேரத்திற்கு ஒரு வித்தைக் காட்டினார் கருணாநிதி. இப்படி எல்லாம் காலம் கடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டு வந்தவர்கள் இறுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும், சரணடைய வேண்டும், அப்போதுதான் போரை நிறுத்த முடியும் என்று ராஜபக்சேயின் குரலில் பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர்.

காங்கிரஸ், தி.மு.க., ஜெயலலிதா நிலைதான் இதுவென்றால் மற்றவர்களின் நிலை என்ன? சி.பி.எம். என்றொரு கட்சி இருக்கிறது. இதுவும் சட்டமன்றத் தீர்மானத்திற்கு கைதூக்கியது. ஆனால் ஈழப் பிரச்சினையில் இதன் கொள்கை என்ன? ஈழம் அமைவது கூடாது, இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு, அதை ஒழிக்க வேண்டும், அதாவது இந்திய-இலங்கை அரசுகளின் கொள்கைக்கும் சி.பி.எம். கொள்கைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை. சி.பி.ஐ. என்றொரு மற்றொரு கட்சி, இதுவும் ஈழப் பிரச்சினையில் ஒன்றுபட்ட இலங்கை, ஈழம் கூடாது, விடுதலைப் புலிகளை ஆதரிக்கக் கூடாது, அது தவறான அமைப்பு என்ற கொள்கையைக் கொண்ட கட்சிதான்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் - அரசியல் சட்ட அமைப்புக்குள் ஈழப் பிரச்சினை யைத் தீர்க்க வேண்டும் என்று சாத்தியமற்ற, ஈழ மக்களின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வைத்துக் கொண்டிருக்கும் இவ்விரு கட்சிகளும் சிங்கள அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்திற்குக் கை தூக்கியது ஒப்புக்குத்தான். இத்தீர்மானத்தை நிறைவேற்றா விட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி விடுவார்கள் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமை போலவே இவ்விரு கட்சிகளின் தலைமைகளும் ஏற்றுக் கொள்ள வில்லை. சி.பி.ஐ. போரை நிறுத்து என்ற கோரிக்கைக்காகச் சில இயக்கங்கள் மேற்கொண்டிருக்கிறது. சி.பி.எம். கூட ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இவ்விரு கட்சிகளுமே ஈழ விடுதலையையும், ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்ப்பதில் இந்திய-இலங்கை அரசுகளின் உற்ற தோழர்களாய் இருந்து கொண்டே போரை நிறுத்த வேண்டும் என நாடகமாடுகின்றன. அது மட்டுமல்ல இவ்விரு கட்சிகளுமே சிங்கள ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கும் ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்து கொண்டு, அவருடைய நெருப்பு வார்த்தைகளை முள்முனையளவு கூட விமர்சிப்பதைத் தவிர்க்கின்றன. பா.மா.க.வின் தலைவர் இராமதாஸ் ஈழ விடுதலையையும் புலிகளையும் ஆதரித்துப் பேசுகிறார். ஆனால் யுத்தத்தை நடத்தும் சோனியா காங்கிரசையோ, யுத்தத்தை ஆதரித்த ஜெயலலிதாவையோ விமர்சிப்பதைத் தவிர்க்கிறார்.

ம.தி.மு.க.வின் தலைவர் வைகோ ஈழ விடுதலையையும் புலிகளையும் தீவீரமாக ஆதரிக்கிறார். இந்திய அரசுதான் பின்னணியில் இருந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என அம்பலப் படுத்துகிறார். ஆனால் புலிகளையும் ஈழவிடுதலையையும் எதிர்க்கும் ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார். வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் புலிகளையும் ஈழ விடுதலை யையும் ஆதரித்து பேசுகிறார். ஆனால் நம்பவைத்து கழுத்தறுத்த துரோகி கருணாநிதியின் காலடி மண்ணெடுத்து திலகமிட்டு அவர் ஈழ விடுதலையை விரும்புகிறவர் என்றும், அவருடைய ஆட்சியில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது என்றும் பொய்ச் சான்றிதழ் தருகிறார்.

இவ்வாறு ஈழத்திற்கு எதிராக டெல்லி - காங்கிரஸ் ; அதன் காலை நக்கிப் பிழைக்கும் கருணா - ஜெயா ; அவர்களின் வேட்டிக்குள்ளும், முந்தானைக்குள்ளும் சுருண்டுகிடக்கும் மற்றவர்கள் -- இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்காகக் கொதித்துப் போய் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

ஈழ மக்களுக்கு உதவ ஈழ விடுதலைக்கு உதவுவோம் !

எதிரிகளையும் துரோகிகளையும் இனங் காண்போம் !

ஈழ மக்களுக்கு உதவும் உரிமையைப் பாதுகாப்போம் !

ஈழ விடுதலையின் எதிரிகளும், துரோகிகளும் ஈழ மக்களை ஆதரிக்கிறோம், விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், காரணம் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார்கள்.

இலங்கையில் தமிழர்கள் சுந்திரமும், சம உரிமையும் உள்ள கௌரவமான வாழ்க்கையைப் பெறுவதற்கு தமிழீழக் குடியரசு அமைக்கப்பட வேண்டும் என்று 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே தமிழீழ மக்கள் ஆணை வழங்கி யிருக்கிறார்கள். ஈழ மக்கள் இட்ட ஆணையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு கடந்த 30 ஆண்டு காலமாக ஆயுதப் போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி தலைமையேற்று நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். அந்த மக்களிடம் இருந்தே தோன்றி, அந்த மக்களுக்காகவே அர்ப்பணித்து, வேறு எந்த நாட்டின் ஆதரவும் இன்றி அந்த மக்களின் ஆதரவுடன் மட்டுமே வலிமை மிக்க முப்படைகளை உருவாக்கி ஈழத் தேசத்தின் பெரும் பகுதியை ஏறத்தாழ 15,000 ச.கி.மீ. பகுதியை மீட்டவர்கள் விடுதலைப் புலிகள்.

சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்து மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி இருப்பவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளைக் காப்பவர்கள் மக்கள். மக்களைக் காப்பவர்கள் புலிகள். புலிகளும் மக்களும் பிரிக்க முடியாதவர்கள் என்றாலும் ஈழ மக்கள் வேறு, புலிகள் வேறு என்றும் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் ஈழத் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்கள் - ஈழ மக்கள் அடிமைப்பட்டு கிடக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் பொய்யாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காரணம் ஈழ விடுதலைக்கு சமரச மின்றி போராடி வரும் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தனிமைப் படுத்தி அழித்து விட்டால் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஈழவிடுதலையை எதிர்ப்பவர்கள் ஈழ மக்களை ஆதரிக்கிறோம் என்பது முற்றிலும் ஏமாற்றேயாகும். ஈழ மக்களை ஆதரிப்பது - அவர்களுக்கு உதவுவது என்பதன் பொருள் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தினின்றும் சிங்கள அரச பயங்கர வாதத்தினின்றும் விடுபட உதவுவதே ஆகும். தமிழீழமன்றி வேறு வழியில் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தி லிருந்தும், சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்தும் விடுபட முடியாது என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து தீர்மானித்துப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவுவதென்றால் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உதவுவதே யாகும்.

அதற்கு மாறாக ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதும் போராட்டத்தைக் கைவிடக் கோருவதும், போராடும் அமைப்பை பயங்கரவாதிகள் அமைப்பு என முத்திரை குத்துவதும் அவர்களுக்குச் செய்யும் துரோகமே யாகும். இப்படிப் பட்ட துரோகிகள் மக்களை மட்டுமே ஆதரிக்கிறோம், புலிகளை அல்ல என்று பசப்புகிறார்கள். சமரசமின்றி விடுதலைப் போராட்டத்தை நடத்தி வரும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.க.இ.க., பா.ஜ.க., முதலானவை இப்படித்தான் செயல் படுகின்றன. இத்தகைய துரோகிகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

சிங்கள அரசின் இராணுவம் தமிழர்களைக் கொன்றொழிக் கும் யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும், போர் நிறுத்த காலத்தில் இருந்த முந்தைய நிலைக்கு சிங்கள இராணுவம் திரும்பச் செல்ல வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் மூன்று முறை தீர்மானம் போட்டு இந்திய அரசுக்கு அனுப்பிவிட்டது. தீர்மானம் போட்டவர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும் அத்தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொதித்தெழுந்த தமிழ் மக்களின் - உணர்வின் பிரதிபலிப்பு. அதை இந்திய அரசு முற்றாகப் புறக்கணித்துவிட்டது.

இந்திய அரசு ஈழ விடுதலையை எதிர்க்கிறது. சிங்கள அரசின் உறவுக்காக சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு தமிழினத்தைப் பலியிடுவது என்று தீர்மானித்துச் செயல் படுகிறது. உலக நாடுகள் தெற்காசியப் பேட்டை ரவுடியான இந்தியாவை மீறி ஈழவிடுதலையை ஆதரிக்கத் தயங்குகின்றனர்; அல்லது சிங்கள அரசின் நட்புக்காக இந்தியாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஈழ விடுலைப் போராட்டத்துக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

அவற்றுக்குப் போட்டியாக இந்திய அரசும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி, இராணுவப் பயிற்சி அளித்து, பொருளாதார உதவிகள் வழங்கி, தொழில் நுட்ப உதவி வழங்கி, ஆலோசனைகள் வழங்கி, இராணுவத்தினரையே கொடுத்து சிங்கள அரசுக்கு தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்த எல்லா வகையிலும் உதவி வருகிறது. சிங்கள அரசின் நட்புக்காக தமிழர்களின் உயிர்களை, உரிமைகளைப் பலியிட்டு வருகிறது.

கொத்துக் கொத்தாய்க் கொல்லப் படுகிறார்கள் தமிழ் மக்கள். ஐய்யகோ தமிழ் மக்கள் சாகிறார்களே காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என இந்திய அரசைப் பார்த்துக் கெஞ்சிக் கூத்தாடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் தமிழகம்.

ஏதாவது செய்வதாய் இருந்தால் இந்திய அரசு மூலம் தான் செய்ய முடியும் ; நம்மால் கேட்டுக் கொள்ளத்தான் முடியும் ; அதற்கு மேல் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் இல்லை வலிமையும் இல்லை என்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர்.

இந்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். தீர்மானங்கள் போட்டு அனுப்பலாம். பேரணிகளோ, மனிதச் சங்கிலிகளோ நடத்தலாம். சிங்களப் படையால் கொல்லப்படும் மீனவர் குடும்பங்களுக்கு ஒரு இலட்சமோ, இரண்டு இலட்சமோ நிவாரண நிதி வழங்கலாம். ஈழத்தில் சிங்கள அரசால் அகதிகளாக்கப்படும் தமிழ் மக்களுக்கு உதவ மருந்தோ, உணவுப் பொருட்களோ சேகரித்து இந்திய அரசின் அனுமதியுடன் அனுப்பி வைக்கலாம். இதற்கு மேல் இலங்கை இராணுவத்தால் ஈழத் தமிழர்களோ, தமிழக மீனவர்களோ கொல்லப் படுவதைத் தடுக்க அதிகாரமோ, வலிமையோ, தமிழக அரசுக்கு இல்லை என்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர். அதாவது சொந்த மக்களைப் பாதுகாக்க அதிகாரமோ வலிமையோ இல்லாத அரசுதான் தமிழக அரசு.

ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள நாட்டின் இராணுவம், ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றொழிப்பதைத் தடுக்க ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு வலிமையும், அதிகாரமும் இல்லாமல் போனது எப்படி?

ஒன்றரைக் கோடி மக்கள்தான் என்றாலும் சிங்கள அரசு இறையாண்மை உள்ள சுதந்திர அரசு. அதற்கென்று தனியாக முப்படைகளும் உண்டு. ஏழு கோடி மக்கள் இருந்தாலும் தமிழக அரசு இறையாண்மை இல்லாத அடிமை அரசு. இதற்கு இராணுவம் வைத்துக்கொள்ளும் உரிமை இல்லை. இந்திய அரசுக்கு உட்பட்ட ஓர் அடிமை எடுபிடி அரசே தமிழக அரசு. அதாவது இந்தியப் பேரரசின் இறையாண்மைக்குத் தன் சொந்த இறையாண்மையை அடிமைப் படுத்திவிட்ட அரசுதான் தமிழக அரசு. இதனால் தனது சொந்த மீனவ மக்களும், அண்டை நாட்டில் உள்ள சொந்த இன மக்களும் கொல்லப்படுவதைத் தடுக்கும் உரிமையும் அதிகாரமும் இந்தியப் பேரரசால் பறிக்கப் பட்டு விட்டது; தனது சொந்த மண்ணின் மீதான உரிமையும், அதிகாரமும் கூட இந்தியப் பேரரசால் பறிக்கப் பட்டு விட்டது. எனவேதான் தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத் தீவை இந்திய அரசு சிங்கள அரசுக்குப் பரிசாகத் தருவதற்குத் தமிழக அரசின் ஒப்புதல் கூட தேவைப்பட வில்லை.

இலங்கை அரசின் இறையாண்மைக்கு தமிழீழம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய அரசின் இறையாண்மைக்கு தமிழ்நாடு அடிமைப் படுத்தப் பட்டிருக்கிறது. தமிழீழத்தின் இறையாண்மைக்காகத் தீரத்துடன் போராடிக் கொண்டிருக் கிறார்கள் தமிழீழ மக்கள். அந்த மக்களுக்கு உதவும் உரிமைகூட மறுக்கப்பட்ட நிலையில் அடிமைப் படுத்தப் பட்டு இருக்கிறது தமிழ்நாடு.

அடிமையின் குரல் அம்பலம் ஏறாது. இந்திய இறையாண்மைக்கு தமது சொந்த இறையாண்மையைப் பலி கொடுத்து விட்டு அடிமையாய் குரல் எழுப்பும் தமிழ் நாட்டின் குரல் டெல்லிப் பேரரசின் செவியில் ஏறவில்லை.

ஒன்றரைக் கோடி மக்கள் என்றாலும் சிங்கள அரசு இறையாண்மை உள்ள சுதந்திர அரசு என்பதால் அதற்குத் துணை நிற்கிறது இந்தியப் பேரரசு. ஏழு கோடி மக்கள் என்றாலும் தமிழ்நாடு இறையாண்மை இழந்த அடிமை நாடு என்பதால் இதன் குரல் இந்தியப் பேரரசின் செவிகளில் ஏறவில்லை.

தமிழ்நாடு தனது அடிமைக் குரலை மாற்றிக் கொள்ள வேண்டும். தன் சொந்த இன மக்களின் பாதுகாப்புக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பதால் பயனில்லை. சொந்த மக்களையும், மண்ணையும் பாதுகாக்க, சொந்த இனமக்களின் போராட்டத்திற்கு உதவ தனக்கு உரிமை உண்டு என்பதை அது நிலை நிறுத்த வேண்டும்.

தமிழக மீனவ மக்களின் உயிரையும், உரிமையையும் பாதுகாக்கவும் ஈழமக்களுக்கு உதவவும் தமிழ்நாட்டிற்கு உரிமை உண்டு. அந்த உரிமையை மறுக்கும் இந்திய பேரரசின் இறையாண்மை அதிகாரத்தைத் தூக்கி எறிய வேண்டும். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள அரசின் நட்பா ஏழுகோடி மக்கள் கொண்ட தமிழ் நாட்டின் நட்பா எது வேண்டும் என்பதை இந்தியப் பேரரசு தீர்மானித்துக் கொள்ளட்டும். இந்தியப் பேரரசு சிங்கள அரசுடன் நட்பு பாராட்டுவதற்காக ஏழு கோடி தமிழர்கள் தங்கள் உயிரையும், உரிமைகளையும் பலியிடத் தயாரில்லை என்பது அதற்கு உணர்த்தப்பட வேண்டும். இதற்கெல்லாம் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் தயாராய் இல்லை. இந்திய இறையாண்மையின் பாதுகாவலர்களாக இருக்கும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடமிருந்து இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. காரணம், இந்திய இறையாண்மைக்குப் பாதுகாவல் என்றாலே தமிழகத்தின் அடிமைத் தனத்திற்கு பாதுகாவல் என்றுதான் பொருள்.

ஈழத் தமிழர்களுக்கு உதவ அதிகாரமும், வலிமையும் இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஏழு கோடி தமிழ் மக்களிடமிருந்து அதிகாரத்தையும், வலிமையையும் பெற்றுக்கொள்ளும் முடிவை மேற்கொள்ளவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கைவிடுகிறார். ஈழத் தமிழர்களுக்கு உதவும் கடமையைக் கைவிடுகிறார். டெல்லியுடன் கூட்டுச்சேர்ந்து கொள்கிறார். டெல்லியின் ஆதிக்க நடவடிக்கைகளுக்கும், துரோகங்களுக்கும் துணை நிற்கிறார். டெல்லியின் ஆதிக்க நடவடிக்கைகளே தமிழர்களுக்கு உதவி நடவடிக்கைகள் என்பது போல் சித்தரித்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.

இத்தகைய துரோகிகளைப் புறம் ஒதுக்கி தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் இறையான்மையைக் காக்க - சொந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் உரிமைக்காகவும் ஈழத் தமிழர்களுக்கு உதவும் உரிமைக்காகவும் போராட வேண்டும்.

இந்தப் போராட்டம் தமிழகத்தின் சொந்த இறையாண்மைக்கான போராட்டம்; தனது சொந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் உரிமைக்கான போராட்டம். அது மட்டுமல்ல. இது உலக ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டமும் மனிதகுல அறப் பண்புகளைக் காப்பதற்கான போராட்டமும் ஆகும்.

தெற்காசிய மண்டலத்தில் பேட்டை ரவுடியான இந்தியா தமிழர்களுக்கு எதிரான நிலை கொண்டிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் அதை மீறி ஆதரவு நிலை எடுக்கத் தயங்குகின்றன. உலக நாடுகளில் பலவும் கொடிய இன அழிப்புப் போரை நிறுத்த வேண்டும் என முனு முனுப்பாகவே குரல் கொடுக்கின்றன. அதே வேளையில் முனு முனுப்பாகக் கூட ஈழ மக்களின் உரிமை குறித்துப் பேசத் தயங்குகின்றன. ஈழமக்கள் தங்கள் தாயக உரிமைக்காக நடத்தும் நியாயமான போராட்டம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன. உலக ஐ.நா. சாசனமே ஏற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு உட்பட்டதே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.

அந்தப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கின்றன. தேசிய விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தி வைத்திருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தெற்காசிய மண்டலத்தில் பேட்டை ரவுடியாக இருக்கும் இந்தியாவே. இந்தியா ஏகாதிபத்தியங்களின் மிகப் பெரிய சந்தை. இந்திய அரசு ஏகாதிபத்தியங்களுக்கு இணக்கமான அரசு. இதனால் ஈழப் பிரச்சினைகளுக்காக வல்லரசுகள் இந்தியாவுடன் முரண்பட்டுக் கொள்ளத் தயாராய் இல்லை.

இதனால் ஏகாதிபத்தியங்களின் எடுபிடியாய் இருக்கும் ஐ.நா. சபை கூட ஈழ மக்களின் துயரம் குறித்து முனு முனுக்கிறதே தவிர அம்மக்களின் உரிமைப் போராட்டம் குறித்து வாய் திறக்க மறுக்கிறது. சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதைக் கண்டிக்கிறது. தமிழினத்தையே அழித்து தமிழர் தாயகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்க மறுக்கிறது.

ஒரு தேசம் தனது சொந்த உரிமைக்காகப் போராடுவதை ஆதரிக்க நாடுகள் இல்லை. அங்கு நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த நாடுகள் இல்லை. ஒரு மனித அவலம் நிறைவேறுவதை எல்லா நாடுகளுமே அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கின்றன. அவை வாய் திறந்தால் ஆக்கிரமிப்புப் போரை அல்ல, உரிமைப் போரை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மனித குலத்தின் அறம்சார் கொள்கை. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் இந்த அறம் சார் கொள்கையைப் பொருட்படுத்த வில்லை. இதற்கெல்லாம் காரணம் தெற்காசிய மண்டலத்தில் பேட்டை ரவுடியாகத் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள இந்தியாவே. சிங்கள நட்புக்காக தமிழர்களின் உயிர்களையும், உரிமைகளையும் பலியிடலாம் என்கிற இந்தியாவின் கொள்கையே !

இந்தியாவின் இந்தக் கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகம் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு தனது கடமையினைச் செய்ய வேண்டும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தை ஆதரவுப் பின்புலமாக்க வேண்டும். தமிழக மீனவர்களைப் பாதுகாக்க மீனவர்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சியளித்து ஆயுதங்கள் வழங்க வேண்டும்.

அவர்களிடமிருந்தே ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கவேண்டும். இந்திய - இலங்கை அரசுகளுக் கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இந்தத் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசைக் கலைக்கும் இந்திய அரசின் அதிகாரத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை மறுக்கும் இந்திய இறையாண்மை அதிகாரத்தைத் தூக்கி எறிய வேண்டும்.

இது தமிழக மக்களின் உரிமைப் போராட்டம். அதுமட்டுமல்ல, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையும் ஆகும். இந்த கடமையை நிறைவேற்ற தமிழக மக்கள் உறுதி ஏற்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் அவர்களுடன் அந்தந்த நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும், சிங்களப் பாசிச அரச பயங்கரவாத இன அழிப்புப் போரை எதிர்த்தும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் தமிழகமும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கை முடிவுக்கு வரவும் உலக நாடுகள் நியாயத்தின் பக்கம் விழிதிறக்கவும் வழிவகுக்கும்.

இந்திய அரசே !

* தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்து !

* இந்திய-சிங்களக் கூலிப் படைகளை ஈழத்திலிருந்து உடனே வெளியேற்று !

* தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி !

* விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு !

* இந்திய மேலாதிக்கத்திற்காக தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பலியிடும் கொள்கையைக் கைவிடு !

தமிழக அரசே !

* ஈழவிடுதலை ஆதரவு எழுச்சியை ஒடுக்காதே !

* தமிழினத்தை அழிக்கும் இந்திய அரசுக்குத் துணை போகாதே !

* சிங்களக் கடற்படையிடமிருந்து காத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் கொடு !

* இந்திய-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி !

* இந்திய இறையாண்மை நுகத்தடியைத் தூக்கி எறி !

தமிழக மக்களே !

* ஈழ விடுதலைக்குத் துணை நிற்போம் !

* தமிழர்களின் உயிர்களையும், உரிமைகளையும் பாதுகாக்கும் உரிமைக்குப் போராடுவோம் !

* இந்திய இறையாண்மை அதிகாரத்தை எதிர்ப்போம் !

* தமிழகத்தின் இறையாண்மை உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

* டெல்லியின் கால் நக்கிப் பிழைக்கும் கருணா-ஜெயா கும்பலை இனம் கண்டு புறக்கணிப்போம் !

* ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு எனக்கூறி ஈழ விடுதலையை எதிர்க்கும் இந்திய-சிங்களக் கைக்கூலிகளை இனம் கண்டு புறக்கணிப்போம் !

-குமார்-(தமிழகம்)

நன்றி http://www.seithy.com/breifNews.php?newsID=14988&category=TamilNews

0 Comments: