Saturday, April 18, 2009

ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ

மத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.


இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பிற்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.


பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜெயலலிதா. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சேர்ந்த அவர் பின்னர் நெல்லை டவுன், வாகையடி முனை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.


அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை தொடங்கினார். பிற்பகல் 1.40 மணிக்கு பேசத் தொடங்கிய அவர் 2.20 வரை பேசினார். நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அண்ணாமலை நிற்க ஜெயலலிதா பேசினார்.


அப்போது, நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


நெல்லை கன்னியாகுமரி மார்க்கத்தில் இரு வழி ரயில் பாதையை அமைக்க மத்திய அரசின் மூலம் அதிமுக நடவடிக்கை எடுக்கும்.


அம்பாசமுத்திரம் திருவனந்தபுரம் சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை மத்திய அரசின் மூலம் அதிமுக நிறைவேற்றித் தரும்.


இலங்கையில், உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம்.


தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன்.


இந்திய அரசால், இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்போம்.


தமிழகத்தில் மின் இருட்டடிப்பு செய்யப்பட்டு குறைந்த அளவிலான மின்சாரமே வழங்கப்படுகிறது. அதை சரி செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கும்.


சுவிஸ் வங்கியில் குவிந்து கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டுத் தருவோம் என்றார்.

நன்றி நக்கீரன்

0 Comments: