உலகத்திலேயே 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் கருணாநிதி: ஜெயலலிதா
''உலகத்திலேயே மிக குறுகிய நேரம் அதாவது, 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் கருணாநிதிதான்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் வைரம் தமிழரசியை ஆதரித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுகையில், ''உங்களையெல்லாம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியாகிய என்னோடு இந்த தேர்தல் பயணத்தில் நீங்கள் எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. இதே மகிழ்ச்சியை நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நான் உறுதிபட நம்புகிறேன்.
தமிழகத்தில் தற்போது குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும் நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி வேதனையை தாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளை பெற்று மத்தியில் காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த மத்திய அரசு உங்களுக்கு என் நம்மை செய்திருக்கிறது. காங்கிரசும், தி.மு.க. இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன? பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர் பங்கீட்டில் பாரபட்சம், வேலையில்லா திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு. இவைகள் தான் மத்திய அரசு இந்நாட்டு மக்களுக்கு அளித்துள்ள பரிசுகள். இன்றைய மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையும், அலட்சியப் போக்கும்தான் இதற்கு எல்லாம் காரணம்.
தமிழகத்தில் மணல் கொள்ளை, அரிசி கடத்தல், பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்தல் என பல்வேறு அராஜகங்களை நடத்திக் கொண்டிருக்கிறது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு. அதுமட்டுமல்லாமல் மின்சாரத்திற்கு விடுமுறையும் அளித்து தமிழ்நாட்டை அழிவுபாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. அரசு. இவர்களுக்கு வரும் மே மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உண்ணாவிரத நாடகம் நடத்தி, தாம் உண்ணாவிரதம் இருந்ததால் உடனே இலங்கை அரசு போர் நிறுத்தம் என்று அறிவித்து விட்டது. எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்து விட்டது என்று அறிவித்து விட்டு, வந்த வேகத்தில் உண்ணாநோன்மை முடித்துக் கொண்டு வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி. ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்துவிட்டு வீடு போய் சேருவதற்குள்ளாகவே போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.
இனி போர் விமானங்களும், பீரங்கிகளும், பெரிய ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்த பிறகும் கூட முல்லிவாய்க்கால் என்ற தமிழர்கள் கிராமத்தில் மட்டும் இலங்கை விமானப்படை 23 முறை வானத்தில் இருந்து குண்டுகள் வீசியதாக இணையதள செய்திகள் கூறுகின்றன.
முல்லிவாய்க்காலில் சுற்றியுள்ள தமிழர்கள் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. மட்டிபேரல் ராக்கெட் லாஞ்சர் என்ற பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்பட முல்லிவாய்க்காலில் வடக்கு பகுதியில் இருந்து தமிழர்களை தாக்கி இருக்கிறது. இந்த தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில். கருணாநிதி காலை உணவை முடித்து விட்டு மத்திய உணவை உட்கொள்வதற்கு முன்பாக இடைப்பட்ட 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததற்காக கருணாநிதியின் தொண்டர்கள் ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து நொறுக்கி, கடைகளை சூறையாடி பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில்தான் இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர்கள் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை, வேண்டாத தெய்வம் இல்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில் இந்தியாவில் இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் சிலர் தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர். இந்த கயமையை நாம் ஒட்டுமொத்தமாக தண்டிக்க வேண்டும். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி நாடாளுமன்ற தேர்தலில் தமது கூட்டணி பெறப் போகின்றன அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலிதான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.
தனது நாடகம் வெற்றி பெற்று விட்டதாக உலகுக்கு அறிவித்து அதில் மீண்டும் தோல்வியுற்று இருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை, பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும். கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் 8 நாளில் தெரிந்துவிடும் என்று தமிழ்நாடே அறிந்த பழமொழி. தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பொய் நாடகம், புரட்டு வசனம் 8 மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது, தமிழர்களின் வேதனை தொடர்கிறது.
இலங்கை தமிழர்களின் துயரத்தை போக்க சென்னையில் 13 நாட்களாக பெண்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர். பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவர் உயிர் ஊசலாடுகிறது. உலகம் எங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர். ஆனால் உலகத்திலேயே மிக குறுகிய நேரம் அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்த கருணாநிதிதான்.
தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொண்டு ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக் கொண்டார். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர். முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றிச்சுற்று வந்து நாடகத்தை சுவாரசியமாக்க முயற்சித்தனர்.
ஊட்டச்சத்து கால அடுத்த வேளை வந்தவுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டு என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தின் தனது கதாபாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார். நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லாரும் புறப்பட்டு சென்றார்கள்.
இலங்கை தமிழர்களின் துயரம் தீர்ந்தது, இலங்கை இராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ். இவை எல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21 ஆம் நூற்றாண்டின் ஓடாத இரயில் முன் தலைவைத்து படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.
போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்று ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது'' .
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்
Thursday, April 30, 2009
கருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தமிழர்களை மொட்டையடிக்க பார்த்தது
Posted by நிலவு பாட்டு at 1:16:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
இப்படி எல்லாம் பதிவு போட்ட உங்கள நாங்க தமிழின துரோகி அல்லது தன்மானமற்ற தமிழன்னு நேரத்திற்கு ஏற்றாற்போல் தூற்றவேன்டிவரும்.
Post a Comment