Sunday, April 26, 2009

இலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்

ங்களது சொந்த நாட்டிலேயே எல்லாவற்றையும் இழந்து, உயிர்ப் பயத்தில் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் அவல நிலையை நேரில் சென்று பார்த்து விட்டுத் திரும்பியிருக்கிறார், `வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் குருஜி. கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இலங்கையில உள்ள முல்லைத்தீவு, வவுனியா, செட்டிக்குளம், அருணாசலம் உள்பட எட்டு அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து ஆறுதல் அளித்ததுடன் நிவாரணப் பணிகளையும் தொடங்கியுள்ளார்.

அவரிடம் நாம் பேசினோம்...

நீங்கள் எதற்காக இலங்கை சென்றீர்கள்? அங்குள்ள உண்மை நிலை என்ன?

``இலங்கையில் தமிழர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு மனிதனாகப் போக முடியாது. மனதை கல்லாக்கிக் கொண்டுதான் போக முடியும். அவ்வளவு கொடுமையான சூழ்நிலையில்தான் மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள அரசியல்வாதிகள் அவர்களைக் கைவிட்டுவிட்டதால், ஆன்மிகவாதியான நானும் அவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆறுதல் கூறச் சென்றேன்.''

முகாமில் உங்களைச் சந்தித்த தமிழ்மக்கள் என்ன சொன்னார்கள்?

``நான் இலங்கை செல்ல இந்திய அரசு எனக்கு உதவ முன்வரவில்லை. இலங்கை அரசிடம் பேசித்தான் சென்றேன். அங்குள்ள மக்களைச் சந்தித்து நிவாரண உதவி செய்யப்போகிறேன் என்று உறுதி கொடுத்த பின்புதான் அனுமதி கிடைத்தது. நாங்கள் எங்கு சென்றாலும் இலங்கை ராணுவம் எங்களை கண்காணித்தபடியே இருந்தது. `நாங்கள் உங்களிடம் ஏதாவது பேசினால், எங்களைத் தீவிரவாதிகள் என்று இலங்கை அரசில் முத்திரை குத்திவிடுவார்கள்' என்று கூறி, அங்குள்ள மக்கள் பயந்து கொண்டு என்னிடம் பேசவே முன்வரவில்லை.

இருப்பினும் ஒருசிலர், `இந்திய அரசை நம்பினோம். அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்!' என்கிற வேதனையை வெளிப்படுத்தினர். `பிச்சைக்காரர்களையே காணாத எம்மக்கள் இன்று பிச்சைக்காரர்களாகக் கையேந்தி நிற்கிறார்களே!' என்று ஒரு பெண்மணி கதறி அழுதபோது, எனக்கே கண்ணீர் வந்துவிட்டது!''

ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசினீர்களா?

``சந்தித்தேன். அவரிடம், `முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்' என்றேன். அதற்கு அவர், `அவர்களின் வீடுகளின் மேற்கூரைகளையெல்லாம் புலிகள் பிய்த்து எறிந்துவிட்டுச் சென்று விட்டனர். பல வீடுகளைத் தரைமட்டமாக்கி விட்டனர். எனவே, புனரமைப்பு முடிந்த பின்பு, அவர்களைத் திரும்ப அனுப்பிவிடுவோம்' என்றார்.

`அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவாவது போரை நிறுத்த வாய்ப்பு உள்ளதா?' என்றேன். அதற்கு அவரோ, `தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை அந்தப் பேச்சிற்கே இடமில்லை' என்று இறுமாப்புடன் சொன்னார்.

`இங்குள்ள மக்களின் நலனுக்காக அமைதி மாநாடு ஒன்றை நடத்த அனுமதி வேண்டும்' என்றேன். அதற்கு அனுமதி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.''

பிரபாகரனைச் சந்தித்தீர்களா?

``பிரபாகரனைச் சந்திக்க கடும் முயற்சி செய்தேன். முடியவில்லை!''

தனி ஈழம் அமைய வாய்ப்பு உள்ளதா?

``இந்திய அரசு நினைத்தால் மட்டும்தான் அது முடியும்.''

இந்திய அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ளதா?

`` `நீங்கள்தான் எங்களுக்கு முதன்முதலில் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறீர்கள். இதுவரை இந்திய அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு நிவாரணம் வரவில்லை!' என்றார்கள்.''

ஈழப் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

``இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துள்ளதாகத்தான் கருதுகிறேன்.''

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும், போராளிகள் என்றும் இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகிறதே?

``அவர்கள் போராளிகள் தான்!''

படம் : ஞானமணி

- இரா. முருகேசன்


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments: