Thursday, April 23, 2009

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழர்களின் நிலை; நேரில் கண்டு வந்த ஸ்ரீரவிசங்கர் பேட்டி

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. இவ்வாறு வவுனியாவில் தங்க வைத்துள்ள இடம்பெயர் தமிழ் மக்களை பார்வையிட்ட வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி, வீடு வாசல்களை இழந்து, ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 8 இலட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

நான் நேற்று முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் செட்டிகுளம், அருணாசலா உள்பட 8 முகாம்களை சென்று பார்வையிட்டேன்.

மனதை கல்லாக்கிக்கொண்டுதான் அங்கு செல்ல முடியும். மனிதனாக போகமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். இந்த முகாம்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். என்ஜினீயர்கள், டாக்டர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு தங்கி உள்ளனர்.

பிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பேசியபோது, இப்படியே விட்டுவிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை காணமுடிந்தது. அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த தமிழர்களுக்கு வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினோம்.

முகாம்களில் தங்கி உள்ளவர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இராணுவத்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம்.

நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.




ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாதபடி நிலையில் உள்ளனர். தங்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

thanks http://www.tamilwin.org/view.php?2a36QVj4b3c99E234deSWnB0b02p7GQd4d3GYpD2e0d5ZLuSce04g2h92ccb1j0Q2e

1 Comment:

சவுக்கடி said...

*** இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.***

இதற்கான பலனைத் தொடர்புடைய எல்லாரும் துய்த்தே ஆகவேண்டும்!
அரைசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்! - இளங்கோ அடிகளின் கூற்று பொய்க்கப் போவதில்லை!